Sep 16, 2017

நதிகள் குழாய்கள் அல்ல

நதிகளை இணைப்பது பற்றிய பேச்சை எங்கும் காணமுடிகிறது. நதிகளை இணைத்தால் இந்தியாவை காப்பாற்றிவிடலாம், விவசாயத்தை காப்பாற்றிவிடலாம் என பலரும் பேசுவதை காண முடிகிறது. நகரத்தில் வாழும் படித்த மனிதர்கள் முதல் கிராமங்களில் வாழும் ஏழை விவசாயிகள் வரை எல்லோரும் இதில் உடன்படுகிறார்கள். பிரதமருக்கும் இது அவசியமானதாக இருக்கிறது. நதிகளை பற்றிய புரிதல் இல்லாததும், நதிகள் மனிதர்களுக்கு மட்டுமே என்ற சுயலமான எண்ணமுமே இதற்கு காரணம். உண்மையில் நதிகளை இணைக்க வேண்டும் என்று சொல்லும் பலருக்கும், அதில் இருக்கும் தவறுகள் புரிவதில்லை. இதை பற்றிய விவதாம் கூட இங்கு இன்னமும் தொடங்கவில்லை. 



நதிகள் வெறும் தண்ணீரை எடுத்துச் செல்லும் குழாய்கள் இல்லை. நதிகளுக்கு என்று ஒரு உயிர்ச்சூழல் இருக்கிறது. இது ஒவ்வொரு நதிக்கும் மாறுபடுகிறது. நதிகளில் வாழும் எண்ணற்ற உயிரினங்களை பற்றி நாம் சிந்திக்க வேண்டும். சிறிய நுண்ணுயிரிகள் முதல் மீன்கள், பறவைகள், பாலூட்டிகள், இரு வாழ்விகள், ஊர்வன என நதிகளிலும் நதிகளை சார்ந்தும் வாழும் உயிர்கள் ஏராளம். நதிகளை இணைத்தால் இவற்றின் வாழும் சூழம் மாறுபடும். அவை அழிவிற்குச் செல்லும்.

இந்திய சுதந்திரத்திற்கு பிறகு அணைகளை கட்டிய போது, அது தண்ணீர் பிரச்சனையின் நிரந்தரத் தீர்வாக பார்க்கப்பட்டது. ஆனால் இன்று நடப்பது என்ன? அணைகள் எல்லாம் என்னவாகின? ஏன் அவை நமக்கு போதுமானதாக இல்லை ? அணைகளை கட்டிய பிறகு ஆறுகளின் ஓட்டத்தை மனிதனே முடிவு செய்தான். ஆறுகள் வறண்டன. பல்லாயிரம் வருடங்களாக நதிகளில் வாழ்ந்த உயிர்கள் வாழ முடியாமல் போனது. அணைகளை கட்டும் போதே பெரிய பரப்பிலான காடுகள் அழிந்தன.

நதிகளை இணைக்கும் போது இந்த சேதாரம் இன்னும் கூடுதலாக இருக்கும். பெரிய பரப்பிலான காடுகள் அழியும். நதிகளை இணைக்க மிகப்பெரிய இயந்திரங்களை காடுகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டியதாக இருக்கும். அது கூடுதல் அச்சுறுத்தலை விலகுகளுக்கு உருவாக்கும். விலங்கு மனித மோதல் அதிகரிக்கும். இறுதியில் விலங்குகள் விரட்டி அடிக்கப்பட்டு சாலைகளில் அடிபட்டு சாகும் அல்லது கொல்லப்படும். மேலும் மனிதர்கள் இடம்பெயர வேண்டியிருக்கும். மக்கள் தங்கள் ஊர்களில் இருந்து வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் உருவாகும்.

காடுகளை அழித்து நதிகளை இணைத்து என்ன பயன் பெறப்போகிறோம் ? காடுகள் அழிந்தால் மழை குறையும். மழை குறைந்தால் ஆறுகளில் நீர் வரத்து குறையும். இணைத்த நதிகளை பிறகு எங்கே தேடுவது?

ரஜினிகாந்த், சிவகுமார் முதல் மன்சூர் அலிகான் வரை எல்லாரும் நதிகளை இணைக்க வேண்டும் என்று பேசுகிறார்கள். அவர்களின் எண்ணம் நல்லதாகக் கூட இருக்கலாம். ஆனால் திரை நட்சத்திரங்கள் பேசுவதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஊடகங்கள் சூழலியல் அறிஞர்கள் சொல்வதை காது கொடுத்ததும் கேட்பதில்லை. நதிகளை இணைத்தால் ஏற்படும் சூழல் கேடுகள் ஒரு புறம் என்றால், மறுபுறம் இது மிகப்பெரிய அரசியல் பிரச்சனையாக மாறும். மாநிலங்களுக்கு இடையே மோதல் போக்குகளை அதிகரிக்கும்.

நதிகளை இணைப்பதற்கு பல்லாயிரம் கோடி மக்களின் வரிப்பணத்தை வீணாக செலவு செய்யவேண்டும். பிறகு வழக்கம்போல இதிலும் ஊழல் நடக்கும். இந்த திட்டங்கள் யாவுமே, நாட்டை பின்னோக்கி இட்டுச் செல்லும் என்பது புரிகிறதா? நதிகளை தூய்மையாக வைத்துக் கொள்ள முடியாத நம்மால், குளங்களையும் ஏரிகளையும் பாதுகாக்க முடியாத நம்மால் நதிகளை இணைத்து மட்டுமே சாதித்து விடுவோமா? 

நதிகளுக்கு உயிர் கிடையாது. ஆனால் நதிகள் உயிர்ப்போடு இருப்பது அவசியம். இந்தியாவில் ஓடும் நதிகளில் முக்கியமான நதிகளை இரண்டாக பிரிக்கலாம். மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகும் நதிகள் மற்றும் இமயமலைத் தொடரில் உருவாகும் நதிகள். இமயமலையில் உருவாகும் நதிகள் பெரும்பாலும் பனி உருகியே உருவாகிறது. ஆனால் மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகும் நதிகள் முற்றிலும் வேறானவை.

மேற்குத் தொடர்ச்சி மலையில் பொழியும் தென் மேற்கு பருவமழை அந்த மலைத் தொடரின் உச்சியில் உள்ள சோலைக்காடுகளால் சேமிக்கப்படுகிறது. சோலைக்காடுகளில் உள்ள புல்வெளிகளால் இந்த மழை நீர் உறிஞ்சப்பட்டு பஞ்சில் உள்ள நீர் போல சேமிக்கப்படும். பிறகு இந்த நீரானது மெல்ல மெல்ல வெளிவரும். இதுவே ஓடைகளாகவும் அவை இணைந்து நதிகளாகவும் மாறும். கோடை காலங்களிலும் இப்படி சேமிக்கப்படும் நீர் வெளிவந்து கொண்டே இருக்கும். எனவே ஆற்றில் எப்போதும் நீரோட்டம் இருந்து கொண்டே இருக்கும். இந்த சுழற்சியால் தான் பல்வேறு உயிரினங்களும் தென்னிந்தியாவில் பரிணாம வளர்ச்சி பெற்று வாழ்ந்து வந்தன. மனிதனும் இதனால் பயனடைந்து வாழ்ந்து வந்தான். எனவே மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகும் நதிகளுக்கென்று ஒரு தனித் தன்மை உண்டு. ஒவ்வொரு நதிகளிலும் எண்ணற்ற உயிரினங்கள் வாழ்கின்றன. காவிரியில் வாழும் மீன்கள் எல்லாம் கங்கையில் வாழ்வதில்லை. 

நதி நீர் வீணாக கடலில் கலக்கிறது என்பதை பலமுறை செய்திகளில் கேட்டிருக்கிறோம். இங்கே "வீண்" என்று சொல்லப்படுவது சரிதானா? நதி நீர் கடலில் கலப்பது என்பது இயற்கை சுழற்சியின் ஒரு பகுதி. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக இது நடந்து கொண்டே இருந்தது. ஒவ்வொரு நதியும் தனக்கென அமைத்திட்ட பாதைகள் ஒரு நாளில் உருவானதல்ல. பல்லாயிரம் ஆண்டுகளாக இயற்கையால் தகவமைத்துக் கொள்ளப்பட்டது. இதை மாற்றுவது எப்படி சரியாகும்?

சரி தண்ணீர் பிரச்சனையை பிறகு எப்படி தான் தீர்த்துக் கொள்வது என்றால், ஏற்கனவே நம்மிடம் இருக்கும் நீர் வளங்களை பாதுகாத்தால் போதுமானது. மேலும் காடுகளை அழிவில் இருந்து காப்பாற்ற வேண்டும். இயற்கையின் மீது மனித இடையூறுகள் இல்லாமல் பார்த்துக்கொண்டால் போதுமானது. அது தன்னைத்தானே சரி செய்து கொண்டு, வேண்டியதை கொடுக்கும். கங்கையில் ஆயிரம் ஆயிரம் கோடி செலவு செய்து தூய்மைபடுத்தி என்ன பயன்? குப்பை கொட்டுவதை இந்த அரசால் தடுக்க முடியாதா?

நதிகளில் கழிவுகள் கலப்பதை முற்றிலுமாக நிறுத்துங்கள். இரண்டே  பருவமழையில் நதி தன்னைத்தானே சுத்தப்படுத்திக் கொண்டு பொங்கி எழும் அழகை பாருங்கள். இதை செய்ய அரசுக்கும் மக்களுக்கும் மனம் இருதால் போதும். பல்லாயிரம் கோடி பணமோ மிஸ்டு காலோ தேவையில்லை. 


*பூவுலகு இணையத்தில் வெளியான கட்டுரை.


13 comments:

  1. சிறப்பான தகவல்கள். நன்றி சதீஷ்

    ReplyDelete
  2. Wonderful and worthful message. Myself jeyalakshmi dinamalar, madurai. I need your mobile number sir

    ReplyDelete

  3. நதிகளுக்கு உயிர் கிடையாது. ஆனால் நதிகள் உயிர்ப்போடு இருப்பது அவசியம்.//

    உண்மை, உண்மை.

    ReplyDelete
  4. பயனுள்ள தகவல் சார்

    ReplyDelete
  5. "நதிகள் வெறும் தண்ணீரை எடுத்துச் செல்லும் குழாய்கள் இல்லை. நதிகளுக்கு என்று ஒரு உயிர்ச்சூழல் இருக்கிறது. இது ஒவ்வொரு நதிக்கும் மாறுபடுகிறது. நதிகளில் வாழும் எண்ணற்ற உயிரினங்களை பற்றி நாம் சிந்திக்க வேண்டும். சிறிய நுண்ணுயிரிகள் முதல் மீன்கள், பறவைகள், பாலூட்டிகள், இரு வாழ்விகள், ஊர்வன என நதிகளிலும் நதிகளை சார்ந்தும் வாழும் உயிர்கள் ஏராளம். நதிகளை இணைத்தால் இவற்றின் வாழும் சூழம் மாறுபடும். அவை அழிவிற்குச் செல்லும்".

    மிகச் சிறப்பான கட்டுரை
    மனம் நிறைந்த வாழ்த்துகள்
    சதீஸ்..

    ReplyDelete