காந்தி விரும்பியது இதைத்தான்...!!

பழனி நகரின் வையாபுரிக் குளத்தை சுத்தம் செய்து தூர்வாரி பாதுகாக்கும் முயற்சியில் நண்பர்கள் களம் இறங்கிய போது பெரிய ஆதரவு எல்லாம் உருவாகவில்லை. சிலர் கேட்டுக் கொண்டார்கள். சிலர் பொருளதவி செய்தார்கள். சிலர் இது முடியாத காரியம் என்றார்கள். நகரின் நடுவில் இருக்கும் ஒரு குளத்தை எப்படி சுத்தம் செய்வது என்று சந்தேகம் எழுப்பினார்கள். மக்களை ஒருங்கிணைத்து அரசின் அனுமதியை பெற்று குளத்தின் ஒரு பகுதியில் மட்டும் வேலை தொடங்குவதற்கே பெரிய போராட்டமாக இருந்தது என்பது களத்தில் இறங்கி வேலை செய்தவர்களுக்கு நன்றாக தெரியும்.




எல்லாவற்றையும் கடந்து ஓரளவுக்கு மக்கள் ஆதரவோடு பணிகள் தொடங்கப்ட்டுவிட்டன. யார் என்ன உதவி செய்தார்கள் என பட்டியலிடுவது சுலபமில்லை. ஒவ்வொருவர் செய்த உதவியும் மகத்தானது. சிலர் பொருளுதவி செய்தார்கள். சிலர் குளத்தில் இறங்கி குப்பை அள்ளினார்கள். மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சி செய்தார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, மாணவர்கள் முதல் மருத்துவர்கள் வரை பலரையும் இந்தப் பணி எல்லோரையும் ஒரு இயக்கமாக ஈர்த்துக் கொண்டது.



இரவும் பகலும் குளம் பற்றிய சிந்தனையோடு உழைத்துக் கொண்டிருப்பவர்களை அறிவேன். நகரின் நடுவில் இருக்கும் ஒரு குளத்தை சுத்தம் செய்வது என்பது சுலபமான காரியமில்லை என்பது உண்மை தான். ஆனால் குளத்தை சுற்றித் தான் நகரம் அமைந்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். வையாபுரி குளம் பாதுகாக்கப்பட்டால் நிலத்தடி நீர் மட்டம் நன்றாக உயரும். அழகான இயற்கை சூழல் உருவாகும். தற்போது அமைக்கப்ப்டிருக்கும் மண் திட்டுகள் தீவுகள் போலாகும். அங்கே பறவைகள் தங்க இடம் அமையும். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும். மற்ற குளங்களையும் பாதுகாக்க வேண்டும் என்கிற எண்ணம் உருவாகும். அடுத்து வரும் தலைமுறைக்கு நீராதாரமாக விளங்கும்.

ஆனால் இந்த குளத்தை சுத்தம் செய்வதிலும் பாதுகாப்பதிலும் எண்ணற்ற சவால்கள் உள்ளன. குளத்திற்குள் சாக்கடை நீர் நேரடியாக கலக்காமல் இருக்க வேண்டும். சாக்கடை நீரோடு சேர்ந்து வரும் மற்ற பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட வேண்டும். ஆக்கிரமிப்புகள் எதுவும் நடக்காமல் பாதுகாக்க வேண்டும். குப்பைகள் வந்து கொட்டப்படாமல் இருக்க வேண்டும். நகரின் மையத்தில் இருக்கும் ஒரு குளத்தில் இது சாத்தியாமா என்றால், மக்கள் நினைத்தால் நிச்சயம் சாத்தியம் தான். சமீபத்தில் பழனி சென்றிருந்த போது குளத்திற்கு  நேரடியாக சென்று பார்த்தேன். குளத்தில் குப்பைகள் அகற்றப்பட்ட போதும், மண்ணோடு பிளாஸ்டிக் குப்பைகள் இறுக்கிப் போயிருந்ததை பார்க்க முடிந்தது. குளத்தின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் பார்த்தால், தற்போது இருக்கும் குளத்தில் முதல் மூன்று அடிகளுக்கு பிளாஸ்டிக் குப்பைகளோடு மண் இறுக்கிப் போயிருப்பதை பார்க்க முடியும். இந்த முதல் மூன்று அடியை மண்ணோடு அப்புறப்படுத்த வேண்டும் அல்லது பிளாஸ்டிக் குப்பைகளை மட்டும் பிரித்தெடுக்க வேண்டும். ஆனால் இது சுலபமான காரியம் அல்ல. எதிர் வரும் பருவ மழைக்குள் இதை தொடங்குவது சாத்தியமா எனது தெரியவில்லை. தற்போது குளத்தை சுற்றிலும் வேலி அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணி நிறைவடைந்தால் ஆக்கிரப்பமிப்புகளும் அசுத்தப்படுத்துவதும் கட்டுப்படுத்தப்படும்.






மேலும் செயற்கையாக உருவாக்கப்பட்டிருக்கும் மண் மேடுகள் மேல் மரக்கன்றுகள் நடப்பட்ட வேண்டும். மழைக்கு பிறகு குளத்தில் தண்ணீர் வந்த பிறகு இந்த மண் மேடுகள் தீவுகள் போலாகும். அங்கே மரங்கள் வளர்க்கலாம். பறவைகளுக்கு அது இடமாக மாறும். இந்த பணி இத்தோடு நிறைவடைந்து விடாது. அடுத்த ஆண்டும் தொடரப்பட வேண்டும். அதற்கு பொருளாதார உதவியும் மக்களின் நேரடியான பங்களிப்பும் அவசியம். அப்போதுதான் இந்த பயணம் வெற்றியடையும். ஒரு குளத்தை சுத்தம் செய்வதை விட முக்கியம் அது அசுத்தமாகாமல் பாதுகாக்க வேண்டும்.இந்த பணியை பழனியை சுற்றியுள்ள மற்ற குளங்களிலும் செய்ய வேண்டும். அதற்கு அரசின் ஆதரவும் பொது மக்களின் ஆதரவும் அவசியம்.



ஒரு சில முயற்சிகளை மக்களே ஒருங்கிணைந்து செய்யும் போது அது மிகப் பெரிய வெற்றியடைகிறது. சுத்தமான இந்தியாவைத் தான் காந்தி விரும்பினர். ஆனால் இன்றளவும் நமக்கு அது சாத்தியமில்லாமல் இருக்கிறது. வளர்ச்சி என்பது மிகப்பெரிய கட்டிடங்களில் இல்லை. சுத்தமான சுகாதரமான கிராமங்களையும் நகரங்களையும் கொண்டது. சூழலை பாதிக்காதது. மக்கள் நினைத்தால் பழனி வையாபுரி குளம் தமிழ் நாட்டிற்கே ஒரு முன்னுதாரணமாக மாறும். என்னவாகும் என்பது காலத்தின் கையிலும் மக்களின் கையிலும் இருக்கிறது.





Post a Comment

0 Comments