கொடைக்கானலில் ஸ்கை வாக் அவசியமா?

ஒரு நாட்டின் பெருமையை உணர்த்துவதில் சுற்றுலாத் துறைக்கு முக்கிய பங்கு இருக்கிறது. ஏற்கனவே இருக்கும் சுற்றுலாத் தளங்களே குப்பைக் கூளங்களாக மாறி இருக்கும் போது, ஒரு புதிய திட்டத்தின் மூலம் என்ன மாற்றம் வந்துவிடப் போகிறது? சுற்றுலா என்ற பெயரில் காடுகள் தொடர்ந்து நாசமாக்கப்படும் நிலையில் புதிதாக வரும் திட்டங்களால் காடுகள் முற்றிலுமாக காணாமல் போய்விடாதா? கொடைக்கானலில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்ட போதிலும் வெளியில் இருந்து வருபவர்கள் குப்பைகளை கொட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள். பழனி மலைத் தொடரில்ர இருக்கும் பல்வேறு கிராமங்களிலும் இன்றும் பிளாஸ்டிக் பைகள் உபயோகத்தில் தான் இருக்கிறது.



வழியில் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி உணவு உண்பதும், அதன் மிச்சத்தை தூக்கி எறிவதும், கூடவே கொண்டு வந்த "Use and throw" பொருட்களையும் வீசி எறிந்துவிட்டுச் செல்லும் சுற்றுலாப் பயணிகளை என்றைக்காவது கண்காணித்து அறிவுரை வழங்குகிறதா சுற்றுலாத் துறை? குரங்குகளுக்கு உணவு கொடுத்து அதன் இயல்பை கெடுத்தது தான் மிச்சம்.



தற்போது வெளியிடபட்டிருகும் அறிவிப்பு அதிர்ச்சி அளிக்கிறது. Dolphin Nose என்ற பகுதியில் Sky Walk வருமானால் காட்டிற்கு அது அச்சுறுத்தலாக அமையும் என்பது மட்டும் நிச்சயம் உண்மை. தனியார் நிறுவன உதவியுடன் இங்கே இதை அமைப்பதன் மூலம் யாருக்கு லாபம்? Dolphin Nose என்ற பகுதிக்கு நாளுக்கு நாள் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சுற்றுலாப் பயணிகளின் வருகையை முதலில் இங்கே கட்டுப்படுத்த வேண்டும். மிகவும் குறுகலான சாலையில் பயணம் செய்து அந்த இடத்தை அடையலாம்.

சமீபத்தில் பறவைகளை காண அந்த பகுதிக்கு சென்று மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பினேன். அங்கே உருவாகியிருக்கும் ஏராளமான கடைகளும் குடியுருப்புகளும் அந்த பகுதியை முற்றிலும் அசுத்தமாக்கியிருந்தன. வழி எங்கும் பிளாஸ்டிக் குப்பைகள். மிச்சமான உணவுப் பொருட்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. இது போதாதென்று ஒலிப்பெருக்கியில் பாட்டு ஓடிக் கொண்டிருந்தது. இயற்கை சூழல் ஏற்கனவே இங்கே சிதைந்து கொண்டிருக்கும் நிலையில், Sky Walk வந்தால் என்னவாகும் என நினைத்துப் பாருங்கள்.

சுற்றுலா என்பதே இன்பமானதாகவும் அறிவை வளர்க்கும் விஷயமாகவும் இருக்க வேண்டும். அதிலும் காடுகளுக்குள் சுற்றுலா என்பது காட்டை பற்றிய அறிதல் கொண்டதாக இருக்க வேண்டாமா? Eco- Tourism என்பது மருந்துக் கூட இல்லையென்றால், அதை ஏன் செயல்படுத்த வேண்டும் ? குணா திரைப்படம் வந்த பிறகு "Guna Cave" என்ற சுற்றுலாத் தளம் உருவானது. ஆனால் அதன் விளைவு என்ன? சாலை விரிவாக்கம், போக்குவரத்து நெரிசல், குப்பை மேடு அவ்வளவுதான். உண்மையில் அந்த இடத்தின் பெயர் Devils Kitchen Shola என்று ஆங்கிலேயர்களால் அழைக்கப்பட்டது. நதிகளை உருவாக்கும் சோலைக்காடுகளில் இதுவும் ஒன்று. அது சிதைந்து போவதுதான் சுற்றுலாத் துறையால் நடந்த மிச்சம்.

Pine Forest என ஒரு சுற்றுலா தளத்தை உருவாக்கி இருக்கிறார்கள். பைன் மரமே ஒரு அயல் தாவரம் தான். ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு இன்று காடுகளில் பெருமளவு பரவி காட்டின் ஆரோக்யத்தை சீரழிக்கிறது. இதன் விளைவாக காட்டு மாடுகள் அதன் வாழிடத்தை இழந்து உணவை இழந்து நகருக்குள் சுற்றி அலைகிறது. அது பற்றி சுற்றுலாப் பயணிகளுக்கு எடுத்துரைக்கப்படுகிறதா?



இவ்வளவு சீரழிவுக்குப் பிறகும் பாடம் கற்காமல் மேலும் காட்டை நாசமாக்கும் முயற்சியை மட்டுமே செய்வது யாருடைய லாபத்திற்காக? அடுத்த தலைமுறைக்கு தண்ணீர் தேவை. அதற்கு காடுகள் தான் அவசியமே ஒழிய Sky Walk அல்ல.




Post a Comment

0 Comments