Aug 1, 2011

எமர்ஜென்சி நடந்தது என்ன? வி.கிருஷ்ணா ஆனந்த்




எமர்ஜென்சி எதற்காக கொண்டுவரப்பட்டது என்பதையும், எமர்ஜென்சியின் போது நடந்த அரசியல் சூழ்நிலைகள் பற்றியும் விரிவாக எடுத்துரைக்கிறது இந்த நூல். 1971-ஆம் ஆண்டு இந்திரா காந்திக்கு எதிராக போட்டியிட்ட ராஜ் நாராயண் தொடுத்த வழக்கும் அதற்கான தீர்ப்பும் இந்திரா காந்தியை நெருக்கடிக்கு உள்ளாக்கியது.


அதிலிருந்து தப்பிக்கவும், தன்னுடைய பதவியை தக்க வைத்துக் கொள்ளவும் அவர் எடுத்த அரசியல் நடவடிக்கைகள் பற்றிய செய்திகளும் விளக்கமாக எழுதப்பட்டுள்ளது. அரசியல் சட்ட திருத்தங்களை தன் தேவைக்கு ஏற்றார்போல மாற்றியது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. கைது செய்யப்பட்ட அரசியல் தலைவர்களின் செய்திகளை தணிக்கை செய்தது அரசு.


பத்திரிக்கை சுதந்திரம் பறிக்கப்பட்ட நிலையில் பல பத்திரிக்கைகள் மக்கள் புரிந்து கொள்வதற்காக எதுவும் எழுதாமல் சில பத்திகளை காலியாக விட்டது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேசத்தில் சுமார் இரண்டு ஆண்டுகள் நடைபெற்ற எண்ணற்ற கைதுகளும், அதன் விளைவாக உருவான அரசியல் குழப்பங்களும் இன்றைய தலைமுறை நிச்சயம் அறிந்து வைத்திருக்க வேண்டிய ஒன்றே.


2 comments:

  1. இன்று ஓர் அறிவிக்கப்படாத அவசர நிலைப் பிரகடனம் உள்ளது என்கிறோம். 1975 - 1976 அவசர நிலைப் பிரகடனம் கொண்டு வந்து, இந்தியாதான் இந்திரா, இந்திராதான் இந்தியா என்று சொன்னவர், 1977ல் இந்திய மக்களால், வரலாற்றில் குப்பைத் தொட்டியில் வீசி எறியப்பட்டார...். 1947க்குப் பிறகு காங்கிரஸ் மய்ய அதிகாரத்திலிருந்து 1977ல்தான் விரட்டப்பட்டது. காங்கிரசின் வரலாற்றுச் சரிவின் துவக்கம் 1977ல் எழுதப்பட்டது.

    அதற்குப் பிறகு வந்த ஜனதா அரசாங்கம், 1978ல் அரசியலமைப்புச் சட்டத்திற்கு 44ஆவது திருத்தம் கொண்டுவந்தது. 30.04.1979 அமலுக்கு வந்த திருத்தச் சட்டத்தால், அவசர நிலைப் பிரகடனம் கொண்டு வரும் மத்திய அமைச்சரவையின் அதிகாரம் சுருக்கப்பட்டது. உள்நாட்டுக் கலவரங்கள் என்ற காரணம், ஆயுதக் கலகம் என மாற்றப்பட்டது. அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 20 மற்றும் பிரிவு 21 ஆகியவற்றை, மிகவும் முக்கியமாக உயிர் வாழும் உரிமை மற்றும் சுதந்திரம் என்ற பிரிவு 21, உரிமையை தற்காலிக நீக்கம் செய்ய முடியாது என்ற நிலையை திருத்தச் சட்டம் கொண்டு வந்தது.

    ஆனால் அதற்குப் பிறகு, தடா, பொடா, ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டம், சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் என்ற வேறு வேறு ஆள்தூக்கி ஆட்கொல்லி சட்டங்களால் மத்திய அரசும் அது போன்ற சட்டங்களால் சில மாநில அரசுகளும் தம்மை ஆயுதபாணிகளாக்கிக் கொண்டுள்ளன. அவசர நிலைப் பிரகடனம் இல்லாமலே, அடிப்படை உரிமைகளை ரத்து செய்ய முடியும். இந்தப் பின்னணியில் ஆட்சியாளர்களுக்கு, அவசர நிலைக் கொடுமைகளை, அவசர நிலைப் பிரகடனம் இல்லாமலே அரங்கேற்ற முடியும்.

    - தீப்பொறி ஜூலை மாத இதழ்லிருந்து(CPI-ML) LIBERATION

    ReplyDelete
  2. மீண்டும் ஒரு ஜுன் 26 வந்து சென்றுவிட்டது. 1975ல் இந்திரா காந்தி அவசர நிலைப் பிரகடனம் கொண்டு வந்தார். அப்போது சோவியத் ஒன்றியம் இருந்தது.



    அரசியலமைப்புச் சட்டத்திற்கு இந்திரா காந்தி 42ஆவது திருத்தத்தைக் கொண்டு வந்தார். திருத்தம் 18.12.1976 முதல் அமலுக்கு வந்தது. சோசலிசம் மதச்சார்பின்மை தேசத்தின் ஓர்மை (இன்டெக்ரிடி) என்ற உயர்ந்த இலட்சியங்களை மேலும் தெளிவாக அறிவிக்கவும், சமூகப் பொருளாதாரச் சீர்திருத்தங்களைச் சீர்குலைக்க பயன்படுத்தப்படும் அடிப்படை உரிமைகளுக்கு மேலானதாக, வழிகாட்டும் கோட்பாடுகளை ஆக்குவதும், அவற்றிற்கு ஓர் அனைத்துந்தழுவிய தன்மை தருவதும், அவசர நிலைப் பிரகடனம் அமலில் இருந்தபோது கொண்டு வரப்பட்ட திருத்தச் சட்டத்தின் நோக்கங்களாகவும் காரணங்களாகவும் சொல்லப்பட்டன.



    சோசலிஸ்ட் இந்திரா மதச்சார்பற்ற இந்திரா, பிற்போக்காளர்கள் எதிர்ப்பை முறியடிக்க, அவசர நிலை கொண்டு வந்தாராம்! மக்களின் நல்வாழ்க்கையை மனதில் கொண்ட, அரசியல் அமைப்புச் சட்டத்தின் வழிகாட்டும் கோட்பாடுகள், இந்திராவுக்கு, அடிப்படை உரிமைகளை விட மேலானதாம்!



    சொத்துரிமை எழுத்துரிமை பேச்சுரிமை கூட்டம் கூடும் உரிமை அமைப்பாகும் உரிமை ஆகியவற்றைப் பின்பற்றி, பிற்போக்காளர்கள், மக்கள் நலனுக்காக இந்திரா கொண்டு வரும் நடவடிக்கைகளை எதிர்ப்பதால்தான், அவசர நிலை சர்வாதிகாரி, மக்களின் அடிப்படை உரிமைகளை தற்காலிகமாக ரத்து செய்தாராம்!



    22 லட்சம் ரெயில்வே தொழிலாளர் போராட்டம், மாணவர் இளைஞர் போராட்டம் ஆகியவற்றை எல்லாம் ஒடுக்கக் கொண்டு வரப்பட்ட அவசர நிலையில், முதலாளித்துவ எதிர்க்கட்சித் தலைவர்களும் சிறை வைக்கப்பட்டனர். கட்டாயக் கருத்தடை, ஏழைகளின் குடியிருப்புகளை இடிப்பது போன்றவை நடந்தபோதுதான், சிட்டிபாபு போன்றோர் கொல்லப்பட்டனர்.



    அவசர நிலைக்கு முன்பாக, இந்திரா காந்தியின் வங்கி தேசியமயம், மன்னர் மான்ய ஒழிப்பு, பாகிஸ்தானைத் தூண்டாடுதல் சோவியத் யூனியனோடு அமைதி மற்றும் நல்லுறவு ஒப்பந்தம் ஏற்படுத்துவது போன்ற விஷயங்களில், அவர் ஒரு முற்போக்காளர் எனக் கருதிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பிற்போக்காளர்களுக்கெதிராக முற்போக்கான இந்திராவை ஆதரிப்பதாக, தன் செயலுக்கு நியாயம் சொன்னது. இககமாவும் கூட, இந்திராவின் முற்போக்கு குறித்த மயக்கத்தில் இருந்து மீளும் முன், அவசர நிலை வந்ததால், அவசர நிலையைச் செயலூக்கமாக எதிர்க்க முடியாத நிலையில் சிக்கியது. மார்க்சிஸ்ட் கட்சியின் பல தோழர்கள் சிறை செய்யப்பட்டனர். கொலையும் செய்யப்பட்டனர். அந்த கால கட்டத்தில்தான் மாலெ கட்சி பீகாரில் கிராமப்புற வறியவர்களின் பற்றி எரியும் போராட்டங்களை வழி நடத்தியது. அவசர நிலைக்கு முன்னும் அவசர நிலையின்போதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நக்சலைட் தோழர்கள் சிறை வைக்கப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர்.



    இன்று ஓர் அறிவிக்கப்படாத அவசர நிலைப் பிரகடனம் உள்ளது என்கிறோம்.

    -தீப்பொறி ஜூலை மாத இதழ்லிருந்து. CPI-ML LIBERATION

    ReplyDelete