நதி சூழ் நகரம் : ஸ்ரீரங்கபட்டணம் (பகுதி 1 )

 2011 ஜூலை மாதம் இளைஞர் முழக்கம் இதழில் வெளியானது.ஸ்ரீரங்கபட்டணம், காவிரி உருவாக்கி வைத்த அற்புத தீவு. திப்பு சுல்தான் தன் அரசாங்கத்தை இந்த ஊரை தலைமையிடமாகக் கொண்டு அமைத்திருந்தார். நூற்றாண்டுகளை கடந்த பழமையும், நவீனமும் ஒரே புள்ளியில் சந்திக்கிற தீவு. ஊரின் வடமேற்கில் காவிரி இரண்டாக பிரிந்து மீண்டும் இணைகிறாள். நகரம் முழுக்க இடிந்து போன கோட்டைச் சுவர்களால் நிரம்பி இருக்கிறது. ஊரின் எந்த திசையில் சென்றாலும் கோட்டை சுவர்களின் மிச்சம் தென்படுகிறது. தன் தலைநகரை சுற்றி கோட்டைகள் அமைத்து, நடுவில் தன்னுடைய அரண்மனையை அமைத்துக் கொண்டது தெரிய வந்தது. இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு இன்று வரை இந்த ஊர் மிகப்பெரிய சாட்சி. ஊரை சுற்றி ஓடுகிற காவிரி நகரை எப்போதும் குளிர்ச்சியுறச் செய்கிறது. மிகப் பழமையான ஊர் என்ற போதிலும் கிராமத்து மனமே அதிகம் வீசுகிறது. ஊருக்குள் எங்கு பார்த்தாலும் கிளிகள் பறந்து கொண்டே இருக்கிறது. கிளிகளின் சத்தம் மனதை லேசாக்குகிறது.

ஸ்ரீரங்கபட்டினத்தின் வடமேற்கில் காவிரியின் மணல் திட்டுகளில் மையம் கொண்டிருக்கிறது ரங்கன்திட்டு பறவைகள் சரணலாயம். பல வெளிநாட்டு பறவைகள் வந்து குவிந்துள்ளன. காவிரியின் பரப்பை பறவைகள் மேலும் அழகாக்குகின்றன.

காவிரி ஆற்றில் படகில் சென்று கொண்டே பறவைகளை அருகில் சென்று காண முடிகிறது. பறவைகள் மனிதர்களை கண்டு அச்சம் கொள்ளாமல் இருப்பது மகிழ்ச்சியாக இருந்தது. பொதுவாக பறவையின் அருகில் சென்றாலே அவை பயந்து பறந்துவிடுவது, மனதில் அவமானத்தை கீறிச் செல்வது போல இருக்கும். ஆனால் ரங்கன்திட்டு கொஞ்சம் விசித்திரமாக இருந்தது. பறவைகள் பயம் கொள்ளவில்லை. ஆற்றில் இறங்கி நம்மை சீண்ட மாட்டார்கள் என உணர்ந்திருக்குமா  எனத் தெரியவில்லை.

படகுகளுக்கு இணையாக ஆற்றில் முதலைகள் நீந்திக் கொண்டு வந்தன. ஆனால் என்னுடன் படகில் பயணித்த யாரும் முதலைகளை கண்டு அச்சம் கொள்ளவில்லை. முதலைகளை ஒரு ஆச்சர்யப் பொருளாகவே பார்த்தார்கள். முதலை பண்ணைகளில் அவற்றை ஒரு சடப்பொருள் போல பார்த்து பழகியவர்களுக்கு முதலையின் இயல்பான ஆக்ரோஷம் புரியாமல் இருப்பது வியப்பாக இருந்தது.

காவிரிக் கரையோர மரங்களில் வௌவால்கள் தொங்கிக் கொண்டிருந்தன. தூரத்தில் இருந்து பார்ப்பதற்கு தூக்கணாங் குருவிக் கூடுகள் போலவே இருந்தன. பகல் பொழுதில் அசைவற்று இருப்பதால் அவை வௌவால்கள்  என்று உணரவே முடியாமல் இருந்தன. அரிதாக ஒன்றிரண்டு வௌவால்கள் இடமாற்றம் அடைந்தது. பறவைகளை போல வௌவால்கள் ரசிக்கப்படுவதில்லை. ஆனால் உண்மையில் மரங்களின் உற்பத்திக்கு அவை மிகப்பெரிய உறுதுணையாக இருக்கிறது.

நான் படகு இல்லம் அருகில் அமர்ந்திருந்தேன். ஒரு தனியார் தொலைகாட்சியின் ஒளிப்பதிவாளர் என் அருகில் வந்து அமர்ந்தார். அவரின் உதவியாளர்கள் நான்கு பேரும் உடன் வந்து அமர்ந்தார்கள். பறவைகளை பற்றிய நிகழ்ச்சியை பதிவு செய்ய வந்திருப்பதாக சொன்னார். பறவைகள் ஆங்காங்கே மரத்தில் அமர்ந்திருந்தன. ஒன்றிரண்டு பறவைகள் மட்டுமே பறக்கவும், பின் மீண்டும் மரங்களில் அமரவுமாக இருந்தன. ஒளிப்பதிவு செய்ய வந்தவருக்கு அது அழகாக தெரியவில்லை. தன் உதவியாளரிடம் கற்களை கொண்டுவரும்படி சொன்னான். தன்னுடைய ஒளிப்பதிவு நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக பறவைகளின் மீது கல் எறிகிறானே  என ஆதங்கமாக இருந்தது.

நான் வேண்டாம் என்று சொன்னேன். ஆனால் அவன் உதவியாளரிடம் மேலும் கற்கள் வேண்டுமென்றான். பறவைகளின் கூட்டம் நோக்கி தன்னிடமிருத கல் ஒன்றை எறிந்தான். அது பறவைகளை அடையவில்லை. அதற்கு முன்னதாகவே ஆற்று நீரில் விழுந்தது. மீண்டும் ஒரு முயற்சி செய்தான். அதுவும் நீருக்குள் விழுந்து மூழ்கிப் போனது. பறவைகள் பயம் கொள்ளாதது அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது. கற்களோடு சேர்ந்து அவன் எண்ணமும் ஆற்று நீரில் மூழ்கிப்போனது. ஆனால் கரையில் இன்னமும் கற்கள் மீதம் இருக்கின்றன. பறவைகள் மனிதர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையின்மையின் சாட்சிகளாகக் கிடந்தன கற்கள். தொடரும்...

Post a Comment

2 Comments

  1. //பறவைகளின் கூட்டம் நோக்கி தன்னிடமிருத கல் ஒன்றை எறிந்தான். அது பறவைகளை அடையவில்லை. அதற்கு முன்னதாகவே ஆற்று நீரில் விழுந்தது. மீண்டும் ஒரு முயற்சி செய்தான். அதுவும் நீருக்குள் விழுந்து மூழ்கிப் போனது. பறவைகள் பயம் கொள்ளாதது அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது. கற்களோடு சேர்ந்து அவன் எண்ணமும் ஆற்று நீரில் மூழ்கிப்போனது. ஆனால் கரையில் இன்னமும் கற்கள் மீதம் இருக்கின்றன. பறவைகள் மனிதர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையின்மையின் சாட்சிகளாகக் கிடந்தன கற்கள்.//அருமை நண்பா

    ReplyDelete