ஆம் நம்மால் முடியும்: திரு.வைகோ





திரு.வைகோ எழுதிய "ஆம் நம்மால் முடியும்" என்ற நூலை வாசித்தேன். ஒபாமா அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்படும் போது நடந்த அரசியல் சம்பவங்களை வரலாற்று பின்னணியோடு எழுதியிருக்கிறார். நெல்சன் மண்டேலா, மார்டின் லூதர் கிங் என வெள்ளையர்களின் ஆதிக்கத்திற்கு எதிராக போராடியவர்களின் வரலாற்றையும் சேர்த்தே பதிவு செய்திருக்கிறார். சுமார் முந்நூறு ஆண்டுகளாக கறுப்பின மக்களை அடிமைகளாக்கி வைத்திருந்த சமயத்தில் வெள்ளையர்கள் கையாண்ட அடக்கு முறைகளும், அதற்கு எதிராக எழுந்த போராட்டங்களும் ஒபாமா அமெரிக்கா ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டது எவ்வளவு பெரிய ஆச்சர்யம் என்பதை உணர வைக்கிறது.


ஒபாமாவின் வெற்றிக்கு அவருடைய பேச்சு திறமை மிக முக்கிய காரணம். யாரையும் கண்மூடித் தனமாக எதிர்க்காமல், எல்லாருடைய விமர்சனங்களுக்கும், பொறுமையாகவும், நேரடியாகவும் அவர் பதில் சொன்ன பாங்கு அமெரிக்கர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்து விட்டார். கறுப்பின மக்களை சங்கிலியில் கட்டி வைத்து வேலை வாங்கி, பயன் படாத பொருட்களை குப்பையில் போடுவது போல, அவர்களை தூக்கிலிட்டு கொன்ற தேசம் இன்று ஒரு கறுப்பின மனிதனை ஜனாதிபதியாக கொண்டாடுகிறது.


ஜனநாயக கட்சியின் வேட்பாளராக போட்டியிடுவதற்காக ஹிலாரியும் ஒபாமாவும் கடுமையாக மோதிக்கொண்ட போதிலும், ஒபாமா எப்போதும் தரக் குறைவாக பேசவில்லை. திறமையான மேடை பேச்சும், நேரடியான பதிலும், ஒபாமாவுக்கு பெரும் வெற்றியை தேடித் தந்தது. காலம் மிகப் பெரிய அரசியல் மாற்றத்தை நிகழ்த்தியிருக்கிறது. ஆனால் இதற்கு பின்னால் எத்தனையோ பேரின் தியாகம் அடங்கியுள்ளது. நூறு ஆண்டுகளுக்கு முன்னரே வெள்ளை ஆதிக்கத்திற்கு எதிராக தென் ஆப்ரிக்காவில் போராடிய மகாத்மா காந்தியின் புகைப்படம் இன்று வெள்ளை மாளிகையில் ஜனாதிபதியின் அறையில் புன்னகை சிந்தியபடி இருக்கிறது.



Post a Comment

0 Comments