Jul 29, 2011

ஒரு புலியின் மரணம்

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுகளில் மட்டுமே வாழும் "சுமாத்ரா புலிகள்" பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன். மிகவும் அழியும் தருவாயில் உள்ள இந்த புலிகள் எப்படி பாதிக்கப்பட்டு இறந்து போகின்றன என்பதற்கு ஆதாரமாக "Green Peace" ஒரு காணொளிக் காட்சியை வெளியிட்டுள்ளது.


வேட்டைக்காரர்களால் வைக்கப்பட்ட பொறியில் தன் காலை சிக்கவைத்து அங்கிருந்து தப்பமுடியாமல் ஒரு வாரகாலம் பசியில் போராடிய அந்த புலி செத்துப் போனது. Asia Pulp and Paper என்ற நிறுவனம் அதிக அளவில் காடுகளை அழித்து வருவதன் விளைவால் பல்வேறு உயரினங்களும் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. மனிதனின் அகோரப் பசிக்கு இரையாகும் இந்த புலி இதயத்தை கனக்க வைக்கிறது.Jul 27, 2011

கானமயில் கண்டதுண்டா?


 Great Indian Bustard:

இறக்கைகள் இருந்தும் அதிக எடை காரணமாக பறக்க முடியாத பறவைகள் உண்டு. பறக்கும் தன்மை கொண்ட பறவைகளிலேயே அதிக எடை கொண்ட பறவை இந்த கானமயில். வறண்ட புல் வெளி  பகுதிகளில் வாழ்கின்றன. பொதுவாக ஒரே ஒரு முட்டை மட்டுமே இடுகிறது.


அதுவும் தரையில் இடுவதால் ஆபத்தும் அதிகம். இதியா மற்றும் பாகிஸ்தானில் இவை அதிகம் காணப்பட்டன. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் காணப்பட்ட இந்த கானமயில் இப்போதும் மிக மிக அருகிவிட்டது. தமிழ் நாட்டிலும் இவை காணப்பட்டதுண்டு. வெளி மான்கள் வாழும் நிலப்பரப்பு இவற்றிற்கு ஏற்றதாக இருப்பதால் அங்கு இவை காணப்படுகின்றன.


அதிக அளவில் இந்த வேட்டயாடப்பட்டதன் விளைவு இன்று இந்த பறவைகளின் எண்ணிக்கை வெறும் 250 என்ற அளவில் குறைந்து விட்டது. மேலும் வருடத்திற்கு ஒரு முட்டை மட்டுமே இடுவதால் இவற்றை காப்பாற்றுவது கடினமாக இருக்கலாம்.


இந்தியாவில் மட்டுமே பார்க்கக்கூடிய எத்தனையோ அரிய உயிரினங்கள் இன்று அழியும் தருவாயில் உள்ளன. இந்த கானமயில்களை பாதுகாக்க சிறப்பு கவனம் எடுத்து அரசு இந்த பறவையை காப்பாற்றவேண்டும்.


Jul 25, 2011

ஆம் நம்மால் முடியும்: திரு.வைகோ

திரு.வைகோ எழுதிய "ஆம் நம்மால் முடியும்" என்ற நூலை வாசித்தேன். ஒபாமா அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்படும் போது நடந்த அரசியல் சம்பவங்களை வரலாற்று பின்னணியோடு எழுதியிருக்கிறார். நெல்சன் மண்டேலா, மார்டின் லூதர் கிங் என வெள்ளையர்களின் ஆதிக்கத்திற்கு எதிராக போராடியவர்களின் வரலாற்றையும் சேர்த்தே பதிவு செய்திருக்கிறார். சுமார் முந்நூறு ஆண்டுகளாக கறுப்பின மக்களை அடிமைகளாக்கி வைத்திருந்த சமயத்தில் வெள்ளையர்கள் கையாண்ட அடக்கு முறைகளும், அதற்கு எதிராக எழுந்த போராட்டங்களும் ஒபாமா அமெரிக்கா ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டது எவ்வளவு பெரிய ஆச்சர்யம் என்பதை உணர வைக்கிறது.


ஒபாமாவின் வெற்றிக்கு அவருடைய பேச்சு திறமை மிக முக்கிய காரணம். யாரையும் கண்மூடித் தனமாக எதிர்க்காமல், எல்லாருடைய விமர்சனங்களுக்கும், பொறுமையாகவும், நேரடியாகவும் அவர் பதில் சொன்ன பாங்கு அமெரிக்கர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்து விட்டார். கறுப்பின மக்களை சங்கிலியில் கட்டி வைத்து வேலை வாங்கி, பயன் படாத பொருட்களை குப்பையில் போடுவது போல, அவர்களை தூக்கிலிட்டு கொன்ற தேசம் இன்று ஒரு கறுப்பின மனிதனை ஜனாதிபதியாக கொண்டாடுகிறது.


ஜனநாயக கட்சியின் வேட்பாளராக போட்டியிடுவதற்காக ஹிலாரியும் ஒபாமாவும் கடுமையாக மோதிக்கொண்ட போதிலும், ஒபாமா எப்போதும் தரக் குறைவாக பேசவில்லை. திறமையான மேடை பேச்சும், நேரடியான பதிலும், ஒபாமாவுக்கு பெரும் வெற்றியை தேடித் தந்தது. காலம் மிகப் பெரிய அரசியல் மாற்றத்தை நிகழ்த்தியிருக்கிறது. ஆனால் இதற்கு பின்னால் எத்தனையோ பேரின் தியாகம் அடங்கியுள்ளது. நூறு ஆண்டுகளுக்கு முன்னரே வெள்ளை ஆதிக்கத்திற்கு எதிராக தென் ஆப்ரிக்காவில் போராடிய மகாத்மா காந்தியின் புகைப்படம் இன்று வெள்ளை மாளிகையில் ஜனாதிபதியின் அறையில் புன்னகை சிந்தியபடி இருக்கிறது.Jul 20, 2011

மரகதப் புறா : Emerald Dove

தமிழ் நாட்டின் மாநிலப் பறவையான மரகதப் புறாவை சென்ற வாரம் பழனி மலை பகுதியில் பயணம் செய்த போது அதிகமாக பார்க்க முடிந்தது. பாச்சலூர் அருகே உள்ள வனப்பகுதியில் இவை அதிகம் காணப்படுகின்றன. தரையில் இருந்து சுமார் 1200 மீ உயரத்திற்கு மேலுள்ள பகுதிகளில் இவற்றை பார்க்க முடிந்தது. பசுமை மாறா மழைக் காடுகளில் வாழும் இவை தெற்காசிய முழுவதும் பரவி உள்ளன. பெரும்பாலும் பழங்கள், விதைகளை உண்டு வாழ்கின்றன.

அதிகம் வெளியே தென்படாமல் மறைந்து வாழ்கின்றன. இதற்கு முன் இந்த பறவையை வேறு எந்த வனப் பகுதியிலும் நான் பார்த்ததில்லை. எளிதில் கண்களுக்கு புலப்படாத இந்த பறவையை படம் எடுக்க முயற்சித்து முடியாமல் போனது.

ஐரோப்பாவில் இந்த பறவை கூண்டில் வைத்து வளர்க்கப்படுகிறது.
Jul 18, 2011

தேவதைகளின் தேவதை: திரு.தபூ சங்கர்என்னுடைய கல்லூரி நாட்களில் அதிகம் பேசப்பட்ட புத்தகம் "தேவதைகளின் தேவதை". இந்த புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு குறுங்கதையும் கவிதையும் என் நண்பர்களால் விமர்சனம் செய்யப்படும். இன்றும் பலராலும் இது பேசப்படுகிறது. அது தானே ஒரு எழுத்தாளனின் வெற்றியாகவும் இருக்க முடியும். காதல் வழிந்தோடும் தபூ சங்கரின் இந்த புத்தகம் எப்போது படித்தாலும் முக்கனியில் பால் ஊற்றி தேன் பிழிந்தார் போலத் தான்.

ஒரு சில கவிதைகள்:

கண்ணாடித் தொட்டியில்
நான் வளர்க்கும் மீன்கள்
உன் மீது புகார் வாசிக்கின்றன
'அந்த ரெண்டு மீன்களுக்கு மட்டும்
ஏன் அவ்வளவு அழகான தொட்டி?' என்று.


உனக்கு வாங்கி வந்த
நகையை பார்த்து
'அய்...எனக்கா இந்த நகை'
என்று கத்தினாய்.
நகையோ
'அய் எனக்கா இந்த சிலை'
என்று கத்தியது.


அன்று
நீ குடை
விரித்ததற்காகக்
கோபித்துக் கொண்டு
நின்றுவிட்ட
மழையைப் பார்த்தவனாகையால்
இன்று
சற்றெண்டு மழை நின்றால்
நீ
எங்கோ குடை
விரிப்பதாகவே
நினைத்துக்கொள்கிறேன்

Jul 13, 2011

திருமதி.ஜெயந்தி நடராஜன்தமிழகத்தின் முன்னால் முதல்வர் திரு.பக்தவச்சலத்தின் பேத்தி.

சுற்றுச் சூழல் மற்றும் வனத் துறை அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் திருமதி.ஜெயந்தி நடராஜன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

சுற்றுச் சூழல் மற்றும் வனத் துறைக்கு கேபினட் அந்தஸ்து இல்லாமல் இன்னமும் இணை அமைச்சரே பொறுப்பேற்க வேண்டிய சூழல் நிலவுகிறது. இன்னமும் சுற்றுச் சூழலுக்கான முக்கியத்துவத்தை இந்திய அரசு உணராமல் இருப்பதை இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.

திருமதி.ஜெயந்தி நடராஜன் அவர்களுக்கு நிறையவே பணிகள் காத்திருக்கிறது.

தமிழகத்தை பொறுத்தவரை அவர் செய்ய வேண்டிய உடனடி பணிகள் :

 • சத்தியமங்கலம் வனப் பகுதியை தேசிய பூங்காவாகவும், புலிகள் காப்பகமாகவும் அறிவிக்க வேண்டும். மேலும் இந்த வனப் பகுதியை பாதுகாக்க தேவையான அதிகாரிகளையும் உடனடியாக பணியமர்த்த வேண்டும்.

 • வனப்பகுதிகளில் இரவு நேர போக்குவரத்தை தடை செய்ய வேண்டும்.

 • சுமார் 2000 ச.கி.மீ பரப்பளவுள்ள பழனி மலை பகுதியை தேசிய பூங்காவாகவும், வன விலங்கு சரணாலயமாகவும் தரம் உயர்த்த வேண்டும் இது தொடர்பாக மத்திய அரசு ஏற்கனவே ஒப்புதல் வழங்கிவிட்டதால், மாநில அரசிடம் வலியுறுத்தி, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 • மேகமலை வனப் பகுதியை வனவிலங்கு சரணலாயமாக தரம் உயர்த்த வேண்டும்.

 • புலிகளின் வாழ்விடங்களை முறையாக கண்காணித்து, அவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 • தனித் தனியாக உள்ள வனப்பகுதிகளை இணைக்க வேண்டும். இதன் மூலம் வனவிலங்குகள் தடையின்றி பயணம் செய்ய முடியும்.

 • வன விலங்குகளை வேட்டையாடுபவர்களுக்கு தண்டனைகளை உடனுக்குடன் பெற்றுத் தர, வனத் துறையினருக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்.

 • வறட்சி காலங்களில் விலங்குகளின் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண, நீர் தொட்டிகளை அமைக்க வேண்டும்.

 • வன விலங்குகளால் பொதுமக்கள் இழப்பை சந்திக்க நேர்ந்தால் அவர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப் படவேண்டும்.

 • வறட்சி காலங்களில் காட்டுத்தீ பரவமால் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 • கடற்கரையோரங்களில் உள்ள அலையாத்தி காடுகளை பாதுகாக்க முயற்சிகள் எடுக்க வேண்டும்.

 • வெளிநாடுகளில் இருந்து வரும் பறவைகளின் தங்குமிடங்களை முறையாக கண்காணித்து, மேலும் புதிய பறவைகள் சரணாலயங்கள் அமைக்கப்பட வேண்டும்.

மேலும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு தொடர்பான பணிகளும் நிறையவே உள்ளது.

இதே போன்று ஒவ்வொரு மாநிலத்திலும் செயல்படுத்த வேண்டிய பணிகளை தாமதம் செய்யாமல் உடனடியாக நிறைவேற்றுவதன் மூலம், உலகின் அழகிய நிலத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லலாம்.Jul 11, 2011

கானுறை வேங்கை : திரு.தியடோர் பாஸ்கரன் (தமிழில்)கடமா தொலைச்சிய கானுறை வேங்கை
இடம்வீழ்ந்தது உண்ணாது இறக்கும் - இடமுடைய
வானகம் கையுறினும் வேண்டார் விழுமியோர்
மானம் அழுங்க வரின்

என்ற நாலடியார் பாட்டில் இருந்து பெறப்பட்ட தலைப்பு "கானுறை வேங்கை". ஆங்கிலத்தில் கே.உல்லாஸ் காரந்த் எழுதிய "The Way of the Tiger" என்ற இந்த நூலை தமிழில்  திரு.தியடோர் பாஸ்கரன் அவர்கள் அற்புதமாக மொழி பெயர்த்திருக்கிறார். புலிகள் வாழ்க்கை முறை பற்றியும், அவற்றை அழிவிலிருந்து காப்பாற்றுவதற்காக எடுக்கப்பட்ட/எடுக்க வேண்டிய நடை முறைகள் பற்றியும் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது.

இந்த புத்தகத்தை திரு.தியடோர் அவர்கள் சிறப்பாக கையாண்டிருக்கிறார். குறிப்பாக ஆங்கிலத்தில் மட்டுமே சொல்லப்படும் சில சொற்களை முதன் முதலாக இந்த  நூலில் தான் தமிழில் படிக்க நேந்தது. உதாரணமாக, உருமறை தோற்றம் ( Camouflage ), நிலைத்து நீடிக்கும் வளர்ச்சி (Sustainable Development) போன்ற வார்த்தைகள் முக்கியமானவை. ஆங்கிலம் மற்றும் தமிழில் புலமைவாய்ந்த ஒருவராக மட்டும் இருந்து இதை புத்தகத்தை மொழி பெயர்த்துவிட முடியாது. இயற்கையின் மீதான காதல் இல்லாமல் இந்த நூலை மொழி பெயர்ப்பது சிரமம். அந்த வகையில் திரு.தியடோர் அவர்கள் இதற்கு சரியான தீர்வாக இருந்து செயல்பட்டிருக்கிறார்.

இந்த நூலை ஆங்கிலத்தில் படித்ததை விட, தமிழில் இன்னும் சிறப்பாக இருந்தது. மொழிபெயர்ப்பு நூலாக இருந்தாலும் சொற்கள் எப்படி கையாளப்படுகிறது என்பதே முக்கியம். பொருளும் மாறாமல் சொற்களையும் சிறப்பாக கையாண்டிருக்கிறார். அதற்கு ஒரு உதாரணம் :

"நாம் காட்டில் ஒரு புலியைக் காணும்பொழுது அது 'தனியாக' நடக்கிறது என்று நினைக்ககூடும். ஆனால் மற்றப் புலிகளுக்கு அது பல செய்திகளைத் தன் நெடியின் மூலம் விட்டுச் செல்கிறது. ஒரு புலி தனியாக இருக்கலாம். ஆனால் அது தனிமையில் இருப்பதில்லை". (பக்கம் : 68 )

புலியின் பாதுகாப்பை விரும்புவோர், புலிகள் தொடர்ந்து இந்த பூமியில் உயிர் வாழ வேண்டும் என்று விரும்புவோர் இந்த புத்தகத்தை படித்தால், "என்ன செய்ய வேண்டும்" என்ற ஒரு தெளிவான நிலையை அடைய முடியும். புலிகளின் பாதுகாப்பிற்கு தனி மனிதனின் பங்கு என்ன என்பதை உணர்ந்து செயல்பட முடியும்.

காலச்சுவடு பதிப்பகத்தால் இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது.
Jul 7, 2011

மேகமலை விடிவு எப்போது?


தேனி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைக்கு உட்பட்ட பகுதியில் உள்ளது மேகமலை. கேரள மாநிலத்தின் பெரியார் புலிகள் காப்பகத்துக்கும், தமிழ்  நாட்டில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் வன விலங்கு சரணாலயத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ளது மேகமலை. மேகமலை பகுதியை வனவிலங்கு சரணாலயமாக மாற்றுவதற்கான முயற்சிகள் கிடப்பில் உள்ளது.சுமார் 600 சதுர கி.மீ பரப்பளவுள்ள இந்த வனப்பகுதி, பல்வேறு அரிய உயிரினங்களின் வாழ்வாதாரமாக உள்ளது. மேலும் இரண்டு முக்கிய வனப்பகுதிகளை இணைக்கும் பகுதியாக இருப்பதால் விலங்குகள் நடமாட இங்கு வாய்ப்புகள் அதிகம். இந்த வனப் பகுதியை வன விலங்கு சரணாலயமாக மாற்றுவதன் மூலம், விலங்குகள் வேட்டையாடப் படுவதை பெருமளவு குறைக்க முடியும். மேலும் இந்த வனப் பகுதிகளில் பயிரிடப்படும் கஞ்சாவையும் அடியோடு ஒழிக்க முடியும்.
இந்த வனப் பகுதியானது புலி, யானை, கரடி, சிறுத்தை புலி, வரையாடு, மிளா, கேளையாடு, புள்ளி மான், காட்டெருமை, சோலை மந்தி, மலை அணில், நீர் நாய் மற்றும் இன்னும் பல்வேறு உயிரினங்களின் வாழ்விடமாக உள்ளது. மிகவும் அரிய பறவையான இருவாச்சிகள் இங்கு காணப்படுகின்றன. சிறிய அளவிலான தேவாங்குகள் இந்த மலை பகுதியில் வாழ்கின்றன.
 பல்வேறு அரிய வகை தாவரங்கள், மரங்கள் மற்றும் பறவைகளை தன்னகத்தே கொண்டுள்ளது மேகமலை. எனவே இந்த வனப் பகுதியை வனவிலங்கு சரணாலயமாக மாற்ற வேண்டியது அவசியம், அவசரம். இந்த வனப்பகுதி, மேலும் இரண்டு முக்கிய வனங்களை இணைப்பதால் பெரிய அளவில் விலங்குகளையும் பறவைகளையும் பாதுகாக்க முடியும்.


Jul 4, 2011

உழவுக்கும் உண்டு வரலாறு : திரு. கோ.நம்மாழ்வார்
ஒரு வருடத்திற்கும் முன்பே நான் வாசித்த நூல் "உழவுக்கும் உண்டு வரலாறு". திரு. கோ.நம்மாழ்வார் எழுதிய இந்த புத்தகம் ஏற்படுத்திய வலி ஒரு ஆறாத் துயரமாக நீடிக்கிறது. வேளாண்மை என்றாலே என்னவென்று தெரியாமல் இருக்கும் இன்றைய நகரத்து குழந்தைகள் இயற்கை வேளாண்மை பற்றி எப்படி தெரிந்து கொள்வார்கள் என்ற கேள்வியை எனக்குள் எழுப்பியது.


நம் சமூகத்தில் பெரும்பாலும் விவசாயிகளின் குறைகளையோ வேளாண்மையில் நடக்கும் தவறுகளையோ குறித்து அதிகம் பேசுவதில்லை. வேளாண்மை தான் இந்தியாவின் முதுகெலும்பு என்று பொதுவான வார்த்தைகளை பேசிவிட்டு விலகி நின்று கொள்கிறோம். இதன் விளைவு, அடுத்த தலைமுறை பற்றி கூட கவலைப்படாத வேளாண்மை இன்று இந்த தேசம் எங்கும் நடக்கிறது.


இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்பது தொடர்பான எந்த சிறப்பான முயற்சிகளையும் மத்திய மாநில அரசுகள் எடுப்பது போலவும் தெரியவில்லை. இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையிலும் திரு.நம்மாழ்வார் போன்ற இயற்கை மகத்துவம் தெரிந்த மாந்தர்கள் போராடுவது ஆறுதலான விஷயம் தான். ஆனால் இன்றும் இந்த மனிதர்கள் போராடிக் கொண்டிருக்க, நாம் வேடிக்கை மட்டுமே பார்ப்பது தான் இதில் கொடூரமானது.


இவர்கள் நமக்காகத்தான் போராடுகிறார்கள் என்பதே பலரும் புரிந்து கொல்லாத சூழலில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த புத்தகத்தை இன்றைய விவசாயிகள் படிப்பதை விடவும் இன்றைய நகரத்து இளைஞர்கள் படிக்க வேண்டியதே அவசியம் என நினைக்கிறேன். வேளாண்மை செய்ய முடியாதவர்கள், குறைந்தது இயற்கை வேளாண்மையில் ஈடுபடுபவர்களை ஆதரிக்கவாவது முன் வரவேண்டும்.


திரு. கோ.நம்மாழ்வார் அவர்களுடைய உரையையும் கேட்டுப்பாருங்கள்.


Jul 3, 2011

நில முதலை
 உலகின் மிகப்பெரிய பல்லி இனம் "நில முதலை" என தமிழில் அழைக்கப்படும், கொமோடோ டிராகன். இந்தோனேசியாவில் மட்டுமே காணப்படும் இவை, அது வாழும் வனப்பகுதியில், முதன்மையான ஊன் உண்ணி. முதுகெலும்பிலிகள், பறவைகள் மற்றும் பாலூட்டிகள் போன்றவரை உணவாக கொள்ளும்.


எருமை மாடுகளை கூட கொன்று, உண்டு விடும் தன்மை கொண்டவை இந்த கொமோடோ டிராகன். பொதுவாக வறண்ட வானிலை நிலவும் நிலப்பரம் மற்றும் புல் வெளிப் பகுதிகளிலும் வாழ்கின்றன. மூன்று மீட்டர் நீளமும், 150 கிலோ எடை கொண்டதாகவும் இருக்கின்றன. சுமார் இருபது முட்டைகள் வரை இடுகின்றன. ஐம்பது ஆண்டுகள் வாழ்கின்றன. பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம்இதனை அழிய வாய்ப்புள்ள இனமாக அறிவித்துள்ளது.


மனிதர்கள் தரும் இடையூறுகளால் இவை நெருக்கடிக்கு ஆளாகின்றன. தற்சமயம் சுமார் 3000 முதல் 5000 எண்ணிக்கையில் தான் மிச்சம் உள்ளன. அதிக மோப்ப சக்தி கொண்ட இவை தனக்கான இரை ஒன்பது கி.மீ தூரத்தில் இருந்தாலும் அவற்றை உணரும் தன்மை கொண்டவை.