அந்தியில் மலரும்
அல்லியின் சிவப்பும்,
கனிந்த நாவலின்
பழரசச் சிவப்பும்,
ஒன்றெனக் கலந்த
சிரந்தனைக் கொண்ட,
இயற்கை ஓவியம்
செந்தலைக் கிளிகள்.
![]() |
Photograph by Mr.Raveendran Natarajan |
மண் திட்டுகளில்
வெயில் காயும்
நீர்வாழ் பறவைகள்,
சேற்றுப்பருந்தின்
வருகை உணர்ந்த பின்
ஒலி எழுப்பி உயரப் பறப்பது
தப்பிப் பிழைக்கவே எனினும்,
அதன் பார்வையிலும் சிக்காமல்
சில
நீரில் மூழ்கி மறையும்.
பொன்மஞ்சள் அலகும்
செம்மஞ்சள் நெற்றியும்
இளஞ்சிவப்பு இறகுகளும்
பால் வண்ணச் சிறகுகளும்
கருவளையக் கண்களும்
மெல்லிய நெடுங்கால்களும்
அழகுறவே அமையப்பெற்ற
சங்குவளை நாரை,
இரைதேடும் நன்னீரில்
தொழிற்சாலைக் கழிவுகளால்
கூடுதலாய் சில வண்ணங்கள்.
நண்பர் ராஜா முகமது இந்த கவிதை நூலை கொண்டுவருவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். ராஜாவின் கவிதைகளை கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வாசித்தும் கேட்டும் இருக்கிறேன். பெங்களூர் தமிழ்ச் சங்கத்தில் நடைபெறும் கவியரங்கத்தில் இவர் கவிதை வாசிப்புகளை கேட்டு ரசித்திருக்கிறேன்.அவருடைய எழுத்தில் இருக்கும் அதே சிறப்பை அவர் மேடையில் பேசும் பொழுதும் கேட்கலாம். அவருடைய மொழிடை நிதானமானது. மிகச் சிறந்த உச்சரிப்புடன் பேசக் கூடியவர். தமிழை மிகவும் நேசிக்கக் கூடியவர். நட்பான உரையாடலில் கூட ஆங்கிலக் கலப்பில்லாமல் பேசுபவர். அனைவரிடமும் நட்பு பாராட்டுபவர். அவருடைய கவிதைகளை உணர்ச்சி பொங்கும் வார்த்தைகளால் அலங்கரிப்பதில் எப்போதும் ஆர்வம் காட்டுவார். தன்னம்பிக்கை ஊட்டக்கூடிய இவரது கவிதைகள் நூல் வடிவில் வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருடைய தன்னம்பிக்கை தரும் வார்த்தைகளை கவனியுங்கள்.
அருளகம் அமைப்பை சேர்ந்த சூழலியல் செயற்பாட்டாளர் திரு.சு.பாரதிதாசன் அவர்கள் எழுதிய நூல் "காட்டின் குரல்". காட்டை நேசிக்கும் ஒரு மனிதரால் மட்டுமே இப்படி ஒரு நூலை எழுதிட முடியும். பல்வேறு காட்டுயிர்களின் குரல்களும், இவரின் எழுத்துகள் வழியாக ஒலிக்கிறது. தன்னுடைய அனுபங்களோடு சேர்த்து காட்டுயிர்களுக்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல்களையும் விரிவாக எழுதியிருக்கிறார்.
தேவாங்குகளை நேரில் பார்த்த அனுபவங்கள் முதல் அவற்றின் உணவுப் பழக்கம், வாழ்வியல் முறை போன்றவற்றோடு, மூட நம்பிக்கைகளால் அந்த இனமே அழியும் நிலைக்கு எப்படி தள்ளப்பட்டுள்ளது என்பதையும் விரிவாக எழுதியிருக்கிறார். வெள்வேலம், குடைவேலம் போன்ற மரங்களில் இவற்றை பார்க்க முடியும் என்று அறிந்தபோது பழனி அருகே இதை தேடாமல் விட்டுவிட்டோமே எனத் தோன்றியது. அதிக அளவில் பூச்சிகளை உணவாக உட்கொள்வதால், பூச்சிகளின் கட்டுப்பாட்டில் தேவாங்குகளின் பங்கு அளப்பரியது. தேவாங்குகள் பற்றி நிலவும் மூட நம்பிக்கைகள் களையப்பட வேண்டும் என எடுத்துரைக்கிறார் ஆசிரியர்.
பறவைகளுக்கு வளையமிடும் அனுபவம் பற்றிய கட்டுரை அருமையாக இருந்தது. வாய்ப்புகள் கிடைக்கும் போது தவறவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பதில் இருந்தே ஆசிரியருக்கு பறவைகள் மீது இருக்கும் ஆர்வம் நன்றாகக் புரிகிறது. மேலும், வளையமிடும் முறை, அதற்கான காரணங்கள் என அறிவியல் பூர்வமாக நீளும் கட்டுரையில் பல பறவையினங்களின் தமிழ் பெயர்களை பயன்படுத்தி இருப்பதை பாராட்ட வேண்டும்.
பங்குனி ஆமைகளை காப்பாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது அறிந்த செய்தியாக இருந்தாலும், அதில் பங்கேற்ற ஆசிரியரின் அனுபங்கள் எதார்த்த சூழலை விளக்குவதாக இருந்தது. அலுங்கு அழிந்துவரும் உயிரினம் என்பதையும், அதன் அழிவிற்கு மூட நம்பிக்கைகள் முக்கிய கரணம் என்பதையும் விளக்கி இருக்கிறார் ஆசிரியர்.
வேங்கைப்புலிகளையும் இருவாச்சிப்பறவைகளையும் காப்பாற்ற வேண்டியதன் அவசியத்தையும், அதன் வாழிட சூழல் மற்றும் அவை சந்திக்கும் சவால்களையும் விளக்கி இருக்கிறார்.
மிகவும் குறிப்பாக பாறு கழுகுகள் அழிந்து போன காரணத்தையும், அதை காக்க வேண்டிய அவசியத்தையும் திரு.பாரதிதாசன் அவர்களை விடவும் யாரும் சிறப்பாக எழுதிவிட முடியாது. அதற்கு அவருடைய கள அனுபவங்களே காரணம். இன்றும் பாறு கழுகுகளை காப்பற்ற மிகப் பெரிய முயற்சிகளை செய்து வருகிறார். 90% அதிகமான பாறு கழுகுகள் அழிந்துவிட்ட நிலையில் அருளகம் அமைப்பு செய்துவரும் பணிகள் அளப்பரியது. பாறு கழுகுகளை எதிர்காலத் தலைமுறைக்கு, ஆசிரியரின் எழுத்தும் பணியும் கொண்டு சேர்க்கும் என நம்புவோம்.