ஆழ்ந்த இரங்கல் : முனைவர் கிளாரன்ஸ் மலோனி

முனைவர் கிளாரன்ஸ் மலோனி இயற்கை எய்தினார். பருவநிலை பிறழ்வு தொடர்பாக தனது இறுதி மூச்சு வரை குரல் கொடுத்து வந்தார் மலோனி. கொடைக்கானலில் வாழ்ந்து வந்த மலோனி தனது 88வது வயதில் காலமானார். எப்போது சந்தித்தாலும் அவருடடைய பேச்சு முழுக்க "Climate Change" பற்றியதாகவே இருக்கும். வேறு ஏதாவது பேசினாலும் சிறிது நேரத்தில் "Climate Change" பற்றி பேசத் தொடங்கிவிடுவார். மகத்தான மனிதர். அவருடைய இழப்பு சுற்றுச் சூழல் ஆர்வலர்களுக்கும், பழனி மலைத் தொடருக்கும் பேரிழப்பு.


COP26 மாநாடு பற்றி பேசியது கவனிக்கத்தகுந்தது.

அவரோடு பணியாற்றிய அவருடைய கனவுகளை முன்னெடுத்துச் செல்லும் நண்பர் ராஜமாணிக்கம் அவர்களின் இரங்கல் செய்தி கீழே.

கண்ணீர் அஞ்சலி. முனைவர் கிளாரன்ஸ் மலோனி இயற்கை எய்தினார். மானுடவியல் பேராசிரியர், நூலாசிரியர், சுற்றுச்சூழல் அறிஞர் மற்றும் தன்னார்வலர் என பல துறைகளில் 17 நாடுகளில் பணிபுரிந்தவர், 40க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பயணப்பட்டவர், தனது இறுதி காலத்தில் முழு நேரத்தையும் கொடைக்கானல் மக்களுக்காக அர்ப்பணித்தவர். புவி வெப்பமடைதல் மற்றும் காலநிலை மாற்றம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பருவநிலை மாறுதலினால் ஏற்படும் விளைவுகளை குறைப்பதில் அரசு மற்றும் தனிமனித பங்களிப்பு குறித்த செய்திகளை மனிதர்களிடையே கொண்டு செல்வதை தனது அன்றாட பணியாக செய்துவந்தார். கொடைக்கானலில் சிறந்த குப்பை மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த அணைத்து தரப்பினருடனும் இணைந்து செயல்பட்டவர். தனது 80களில் தினமும் 10மணி நேரமாவது சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண உழைத்தவர்.

முனைவர் கிளாரன்ஸ் மலோனி அவர்கள் எனது வழிகாட்டி மற்றும் தந்தைக்கு ஒப்பானவர். புதுச்சேரியில் இருந்த என்னை கொடைக்கானலுக்கு அழைத்து வந்து கடந்த 5 வருடங்களாக என்னுடைய அணைத்து முயற்சிகளிலும் துணை நின்றவர். கொடைக்கானல் சர்வதேச பள்ளியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை வடிவமைத்து, இன்றுவரை இந்த திட்டம் சிறப்பாக செயல்பட காரணமானவர். கொடைக்கானல் சர்வதேச பள்ளியில் "சுற்றுச்சூழல் மற்றும் மனிதநேய மையத்தை ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றி இன்று பல பள்ளிகளின் மாணவர்கள் பயன் பெரும் வகையில் "பருவநிலை மாற்றத்திற்கான" அருங்காட்சியகத்தை உருவாக்கியவர். இறப்பதற்கு இரண்டு நாள் முன்புவரை தனது எதிர்கால திட்டங்களை என்னுடன் பகிந்து கொண்டார். "மாணவர்களை சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்களாக" உருவாக்க வேண்டும் என்ற அவரின் வாழ்நாள் விருப்பத்தை, நமது குறிக்கோளாக கொண்டு செயல்படுவதே நாம் அவருக்கு செலுத்தும் அஞ்சலி. மாமனிதரை இழந்து வாடும் அவரின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

Post a Comment

0 Comments