விண்ணளந்த சிறகு : திரு.தியடோர் பாஸ்கரன்

திரு.தியடோர் பாஸ்கரன் அவர்களின் மற்றுமொரு அருமையான படைப்பு. தமிழ் இந்துவில் வெளியான இயற்கை சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பு. பறவைகள், பாலூட்டிகள், தாவரங்கள், சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் மற்றும் சூழலியல் ஆளுமைகள் ஆகியோரை பற்றிய இயற்கை சார்ந்த 35 கட்டுரைகளின் தொகுப்பு. 

எல்லா கட்டுரைகளும் மூன்று பக்கங்களில் முடிந்துவிடும். ஆனால் அந்த மூன்று பக்கங்களில் கட்டுரைக்கான கருவை சிறப்பாக விவரிக்கும் எழுத்துக்களை எப்போது வாசித்தாலும் ஒரு நிறைவான வாசிப்பு அனுபவம் கிடைத்துவிடும். எந்த ஒரு வார்த்தையும் தேவையற்றதாக இருக்காது. வாசிக்கும் போது தொய்வும் ஏற்படாது. இயற்கை சார்ந்த இது போன்ற நூல்கள் பலரையும் சென்றடைய இவரின் எழுத்து நடை மிகச் சிறந்த உதாரணம். 
பொதுவாக தமிழில் உயிரினங்களின் பெயர்கள் ஒரே வார்த்தையாக இருக்கும் என்றும் (உதாரணம் யானை,  மயில்) வேற்று நிலத்தை சேர்ந்த உயிரினங்களுக்கு பெயர்கள் இரு சொற்களைக்  கொண்டதாக இருக்கும் என்றும் (உதாரணம் வரிக்குதிரை, ஒட்டகச்சிவிங்கி, நீர்யானை) சொல்லும் ஆசிரியர் நற்றிணையில் நீர்நாய் என்ற சொல்லை சுட்டிக்காட்டுகிறார். இதை வாசிக்கும் போது கழுதைப்புலி என்ற தமிழகத்தில் காணப்படும் விலங்கிற்கும் வேறு பெயர்கள் இருக்குமோ என்ற சிந்தனையே மேலோங்கியது.

தமிழகத்திற்கு வலசையாக வந்த  பெரு வாத்துகள் (Grey legged Goose, Bar Headed Goose) அன்னமாக இருக்கலாம் என்ற அனுமானமும், தமிழகத்தில் ஓநாய்கள் வாழ்ந்திருக்கலாம் என்ற அனுமானமும் சரியானதாக இருக்குமென்றே தோன்றுகிறது. Ape என்பதை வாலில்லா குரங்கு என்று சொல்லும் ஆசிரியர், மனிதக் குரங்கு என்று சொல்வது சற்றும் பொருத்தமற்றது என சொல்லும் போது தமிழில் புழக்கத்தில் உள்ள சொற்கள் பலவும் நெறிப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை உணர முடிகிறது. 

இயற்கையை கூர்ந்து கவனிப்பவர்களுக்கு, புற உலகின் மீது ஈடுபாடு உடையவர்களுக்கு இந்த நூல் ஒரு நல்ல வாசிப்பு அனுபவத்தை நிச்சயமாகத் தரும். 

அமேசானில் இந்த நூலை வாங்க முடியும் :


Post a Comment

3 Comments