Jan 26, 2022

பறவைகள் சூழ் உலகு : திரு.வி.விக்ரம்குமார்

சித்த மருத்துவர் திரு.வி.விக்ரம்குமார் அவரகள் "பறவைகள் சூழ் உலகு" என்ற நூலின் மூலம் பறவை நோக்குதலில் தான் பெற்ற அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். ஒரு சித்த மருத்துவர் இயற்கையை நேசிப்பதில் ஆச்சர்யம் ஏதுமில்லை. இயற்கையை பறவைகளின் மூலமாக நேசிக்கும் மருத்துவர் தன் எழுத்தின் மூலமாக அந்த நேசிப்பை நமக்கும் கடத்துகிறார்.


இருபது கவித்துவமான தலைப்புகளோடு பல்வேறு பறவையினங்களை பற்றிய கட்டுரைகளை நமக்குக் கொடுத்திருக்கிறார். "மரமென்ன கோபித்துக் கொள்ளவா போகிறது? என்ற தலைப்பில் மரங்கொத்திகளை அறிமுகப்படுத்துகிறார். பறவைகளின் சரியான தமிழ் பெயர்களை பயன்படுத்தி இருக்கிறார். 

பறவைகளை ரசிப்பதோடு இல்லாமல் அவற்றின் வாழிடம் மற்றும் சூழலை அறிவியல் பூர்வமாக உணர்ந்து தன் அனுபவங்களோடு இணைத்து எழுதி இருப்பது சிறப்பு. மேலும் சூழல் மாற்றங்களால் பாதிப்புக்குள்ளாகும் பறவைகளின் வாழிடங்களை பற்றியும் குறிப்பிடத் தவறவில்லை. 

பறவைகளின் வாழிடங்கள் மனிதர்களால் சிதைக்கப்படுவதையும், அவை காப்பற்றப்பட வேண்டும் என்பதையும் பல சூழலியலாளர்கள் வலியுறுத்தி வரும் இன்றைய காலகட்டத்தில், அவர்களின் கருத்துக்கு வலு சேர்க்கிறது இந்த நூல்.

இந்த நூலை காக்கைக்கூடு இணையதளத்தில் பெற முடியும். 

https://crownest.in/product/paravaikal-suzh-ulagu-vikramkumar/



Jan 24, 2022

தமிழக அரசுக்கு நன்றி - ஆவுளியா [Dugong]

கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பாகவே பேசப்பட்டது தற்போது சாத்தியமாகியிருக்கிறது. மன்னார் வளைகுடா பகுதியில் அவுளியாக்களுக்கான பாதுகாக்கப்பட்ட பகுதி [Dugong Conservation Reserve] உருவாக்கப்பட்டுள்ளது. இதை உருவாக்கிய தமிழக அரசுக்கு நன்றி.

ஆவுளியா [Dugong] ஒரு தாவர உண்ணி. பாலூட்டி. கடல் வாழ் உயிரினம். பரிணாம வளர்ச்சியில் ஒரு அற்புதம்.

ஆழம் குறைவான கடல் பகுதியில் தாவரங்களை உண்டு வாழும் இந்த உயிரினம் தமிழ்நாட்டின் கடல் பகுதிகளில் தற்போது மிகவும் குறைவான எண்ணிக்கையில் காணப்படுகிறது. தமிழக அரசின் தற்போதைய முன்னெடுப்புகள் இந்த உயிரினத்தை அழிவில் இருந்து பாதுகாக்கும் என நம்புவோம்.


பத்து ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய  பதிவு : ஆவுளியா 


Jan 22, 2022

பெங்களூரு : பனியில் ஒரு பறவைத்தேடல்

அன்றைய தினம் வழக்கத்தை விட பனி அதிகமாக இருந்தது.  இருப்பினும் திட்டமிட்டபடி பறவைகளை தேடி, அன்றைய பொழுது விடியும் போதே கிளம்பினேன். பத்து அடி தூரத்தில் இருப்பவர்கள் கூட தெரியாத அளவிற்கு பனி அதிகமாக இருந்தது. நான் முத்தநல்லூர் ஏரிக்கரையில் விடியலுக்காக காத்திருந்தேன். 


காலை ஒன்பது மணிக்கே சூரியனின் கதிர்கள் வெளியே தெரியத் தொடங்கியது. வெளிச்சம் வரத் தொடங்கிய சில நிமிடங்களில் பறவைகளின் கூச்சல் அதிகரிக்கத் தொடங்கியது. பறவைகள் பறக்கத் தொடங்கினால் அவற்றை அவதானிக்கவோ படம் எடுக்கவோ வெளிச்சம் போதுமானதாக இல்லை.

வெளிச்சம் வர வர ஏரியில் இருந்த மரங்களில் அமர்ந்திருந்த நீர்க்காகங்கள் தெரியத் தொடங்கின. 



அருகில் இருந்த புதரில் நீண்ட நேரமாக பாடிக் கொண்டிருந்த கதிர்க்குருவி கண்களுக்கு தெரியத் தொடங்கியது. அதை படம் எடுக்கத் தேவையான வெளிச்சமும் வந்துவிட்டது.



மரங்களில் இருந்த நீர் சிறிது நேரம் சொட்டிக்கொண்டே இருந்தது. புற்களின் மீதிருந்த பனித் துளிகள் புத்துணர்ச்சியை கொடுத்தது. சிலந்தி வலை ஒன்றில் படிந்திருந்த பனித் துளிகள் கூட அப்படியே இருந்தது. அங்கு வந்து அமர்த்த கொண்டைக்குருவி சில நொடிகளில் பறந்துவிட்டது. 


சில நிமிடங்களில் வெயில் நன்றாக வரத் தொடங்கியவுடன் வண்ணத்துப்பூச்சிகள் பறக்கத் தொடங்கின. ஒரு புதரில் இருந்து வெளிவந்த இரண்டு கீரிகள் என்னை கவனித்ததும் ஓடி மறைந்தது. 



விண்ணளந்த சிறகு : திரு.தியடோர் பாஸ்கரன்

திரு.தியடோர் பாஸ்கரன் அவர்களின் மற்றுமொரு அருமையான படைப்பு. தமிழ் இந்துவில் வெளியான இயற்கை சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பு. பறவைகள், பாலூட்டிகள், தாவரங்கள், சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் மற்றும் சூழலியல் ஆளுமைகள் ஆகியோரை பற்றிய இயற்கை சார்ந்த 35 கட்டுரைகளின் தொகுப்பு. 

எல்லா கட்டுரைகளும் மூன்று பக்கங்களில் முடிந்துவிடும். ஆனால் அந்த மூன்று பக்கங்களில் கட்டுரைக்கான கருவை சிறப்பாக விவரிக்கும் எழுத்துக்களை எப்போது வாசித்தாலும் ஒரு நிறைவான வாசிப்பு அனுபவம் கிடைத்துவிடும். எந்த ஒரு வார்த்தையும் தேவையற்றதாக இருக்காது. வாசிக்கும் போது தொய்வும் ஏற்படாது. இயற்கை சார்ந்த இது போன்ற நூல்கள் பலரையும் சென்றடைய இவரின் எழுத்து நடை மிகச் சிறந்த உதாரணம். 




பொதுவாக தமிழில் உயிரினங்களின் பெயர்கள் ஒரே வார்த்தையாக இருக்கும் என்றும் (உதாரணம் யானை,  மயில்) வேற்று நிலத்தை சேர்ந்த உயிரினங்களுக்கு பெயர்கள் இரு சொற்களைக்  கொண்டதாக இருக்கும் என்றும் (உதாரணம் வரிக்குதிரை, ஒட்டகச்சிவிங்கி, நீர்யானை) சொல்லும் ஆசிரியர் நற்றிணையில் நீர்நாய் என்ற சொல்லை சுட்டிக்காட்டுகிறார். இதை வாசிக்கும் போது கழுதைப்புலி என்ற தமிழகத்தில் காணப்படும் விலங்கிற்கும் வேறு பெயர்கள் இருக்குமோ என்ற சிந்தனையே மேலோங்கியது.

தமிழகத்திற்கு வலசையாக வந்த  பெரு வாத்துகள் (Grey legged Goose, Bar Headed Goose) அன்னமாக இருக்கலாம் என்ற அனுமானமும், தமிழகத்தில் ஓநாய்கள் வாழ்ந்திருக்கலாம் என்ற அனுமானமும் சரியானதாக இருக்குமென்றே தோன்றுகிறது. Ape என்பதை வாலில்லா குரங்கு என்று சொல்லும் ஆசிரியர், மனிதக் குரங்கு என்று சொல்வது சற்றும் பொருத்தமற்றது என சொல்லும் போது தமிழில் புழக்கத்தில் உள்ள சொற்கள் பலவும் நெறிப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை உணர முடிகிறது. 

இயற்கையை கூர்ந்து கவனிப்பவர்களுக்கு, புற உலகின் மீது ஈடுபாடு உடையவர்களுக்கு இந்த நூல் ஒரு நல்ல வாசிப்பு அனுபவத்தை நிச்சயமாகத் தரும். 

அமேசானில் இந்த நூலை வாங்க முடியும் :


Jan 21, 2022

யானையும் வண்ணத்துப்பூச்சியும்

யானையின் சாணத்திலிருந்து 

 உப்பை உறிஞ்சுகிற 

வண்ணத்துப்பூச்சி,

காடெங்கிலும் செய்யும் 

மகரந்தச் சேர்க்கையால் 

உருவாகும் புதிய விதைகளை 

யானையே முளைக்கச் செய்கிறது.  


Jan 15, 2022

தவளை: திரு.கோவை சதாசிவம்

நீர்நிலை என்பது தவளைகளுக்கு வாழிடம் தான், உணவல்ல என்ற செய்தியோடு இந்த நூலை தொடங்குகிறார், இதன் ஆசிரியர் திரு.கோவை சதாசிவம் அவர்கள். ஆற்றில் இருந்து அள்ளிய மணலோடு வீட்டுக்கு வந்த தவளை நிகழ்த்தும் உரையாடலை சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர். தவளையுடைய உயிர் சுழற்சி, இனப்பெருக்க முறை, உணவு மற்றும் வாழிடம் ஆகியவரை எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையில் சுருக்கமாக பேசுகிறது இந்த நூல். 


"தலைப்பிரட்டைகளுக்கு செய்த தீங்கு மலேரியா, டெங்கு, சிக்குன் குன்யாவாய் உங்களை வாட்டுகிறது. இயற்கைக்குச் செய்த தீங்கு உலகளாவிய புவி வெப்பமயமாய் சின்னஞ்சிறு உயிர்களை வதைக்கிறது" என தவளையின் குரலாகவே பதிவு செய்திருக்கிறார். 

நீர் நிலைகளில் இருக்கவே வேண்டிய உயிர் காற்று, நீர் நிலைகளின் மாசுபட்டால் இல்லாமல் போனதும் அதன் மூலமாக தவளைகள் போன்ற நீர் வாழ் உயிரினங்கள் வாழிடம் இழப்பதையும் பதிவு செய்துள்ளார். 

தவளைகளின் இனப்பெருக்க முறை என்பது நீரை நம்பியே இருக்கிறது. ஆனால் தற்போது நிகழும் சூழல் சீர்கேடுகளால தவளை இனங்கள் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதை தவளையின் குரல் மூலமாகவே ஒலிக்கச் செய்திருக்கிறார் திரு.கோவை சதாசிவம் அவர்கள்.

இந்த நூலை காக்கைக்கூடு இணையத்தளத்தில் பெற முடியும்.

https://crownest.in/product/thavalai-frog-book-intamil-kovai-sadhasivam/


Jan 10, 2022

கழுதைப்புலி : திரு.கோவை சதாசிவம்

தமிழில் இதுவரை யாரும் செய்யாத ஒரு முயற்சியை காலத்தின் தேவை கருதி திரு.கோவை சதாசிவம் அவர்கள் செய்து காட்டியிருக்கிறார்.

தமிழ்நாட்டில் கழுதைப்புலிகள் இருப்பதே பலரும் அறியாதது. அதற்கு காரணம் மற்ற விலங்குகளைப் போல கழுதைப்புலிகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படாமல் விட்டததுதான். காட்டை சமநிலையில் வைப்பதில் கழுதைப்புலிகள் மிகவும் முக்கியமானவை. 


குழந்தைகளிடம் கூட உங்களுக்கு விருப்பமான விலங்கு எது என்று கேட்டால் யானை, புலி, சிங்கம் என்பதை தாண்டி சொல்லமாட்டார்கள். பெரியவர்களே கூட அப்படித்தான். கழுதைப்புலிகள் பற்றிய மூட நம்பிக்கைகளும் கட்டுக்கதைகளும் அவற்றின் புகழ் பரவாமல் தடுத்துவிட்டன. இரைக்  கொல்லிகள் விட்டுச் சென்ற மீதியை உண்டு வாழும் கழுதைப்புலிகள் காட்டை தூய்மைப்படுத்துகின்றன. காட்டில் மற்ற விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் நோய் பரவாமல் பாதுகாக்கின்றன. 

இந்த நூல் இந்தியாவில் காணப்படும் வரிக்கழுதைப்புலிகளை மட்டுமல்லாது மற்ற மூன்று கழுதைப்புலிகளை பற்றியும் பேசுகிறது. அவற்றின் வாழ்வு முறை, இனப்பெருக்கம், உணவு, வாழிடம் என விரிவாக பேசும் இந்நூல் கழுதைப்புலிகள் பாதுகாப்பில் மிக முக்கிய பங்காற்றும் என்பதில் ஐயமில்லை.

வெறும் கட்டுரையாக இல்லாமல் உரையாடல் மூலம் இந்நூலை கொண்டுவந்திருப்பது நல்ல முயற்சி. எல்லோரும் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய மொழி நடையில் இருப்பதால் இந்நூல் பலரையும் சென்றடைய வேண்டும் என்றே விரும்புகிறேன். 

நூலின் ஆசிரியரே சந்தேகிப்பது போல் கழுதைப்புலிகளுக்கு வேறு தமிழ் பெயர்கள் இருக்க வாய்ப்புண்டு. அதை கண்டுபிடித்து அறிமுகப்படுத்துவதன் மூலம் இந்த உயிரினம் கூடுதல் கவனம் பெறலாம். மருத்துவர் கே.அசோகன் எழுதியிருக்கும் அனுபவங்களின் மூலமான அறிமுக உரை நிச்சயம் பாராட்டப்பட வேண்டியது. கவனிக்கப்பட வேண்டியது. 

இந்நூலை காக்கைக்கூடு இணையதளத்தில் பெறலாம்.

https://crownest.in/product/kazhuthai-puli-kovaisathasivam/

Jan 9, 2022

வான்வெளியின் புலிகள் : திரு.த.முருகவேள்

தன்னுடைய கானுயிர் அனுபவங்களை அறிவியல் பூர்வமான செய்திகளோடு மிகவும் சுவாரஸ்யமாக "வான்வெளியின் புலிகள்" என்ற நூல் மூலமாக கொடுத்திருக்கிறார் அதன் ஆசிரியர் திரு.த.முருகவேள் அவர்கள்.

அடிக்கடி யானைகளின் இறப்பு பற்றிய செய்திகள் வந்துகொண்டே இருக்கும் இன்றைய காலகட்டத்தில் இயற்கையாக நிகழ்ந்த ஒரு யானையின் இறப்பை பற்றிய கட்டுரை மிகவும் முக்கியமானது. இவரின் எழுத்துநடை சிறிதும் தொய்வின்றி நம்மை வாசிக்க வைக்கிறது. 

பங்குனி ஆமைகளை பற்றிய செய்தியும், அவற்றை பாதுகாக்க எடுத்த முயற்சிகளையும், அப்போது அவர் எதிர் கொண்ட அனுபவங்களையும் மிக அழகாக எழுதியுள்ளார். ஒரு ஆமையை காப்பாற்ற அவர் எடுத்துக் கொண்ட முயற்சியும், சிட்டுக் குருவியின் அளவே உள்ள மஞ்சள் தொடை சிட்டை அவர் அவதானித்ததும், கடைசியில் அவை கூடு இழந்த போது அவர் மனம் நொந்ததும் கானுயிர்கள் மீது ஆசிரியருக்கு இருக்கும் கரிசனத்தை எடுத்துக் காட்டுகிறது. 


கானமயில்களை தேடி அலைந்து பார்க்க முடியாமல் திரும்பிய போது அவருடைய மன ஓட்டம் எவ்வாறு இருந்தது என்பதையும், வேட்டையாடுபவர்களிடம் இருந்து பூ நாரையை மீட்க சேற்றுக்குள் இறங்கி ஓடிய போது  அவருடைய மனம் எப்படி பதட்டத்தோடு இருந்தது என்பதையும் வார்த்தைகளால் நம் மனதிலும் தைத்துவிடுகிறார் ஆசிரியர். 

கானுயிர்களை நேசிக்கும் எல்லோருக்கும் புலியும் சிறுத்தையும் விருப்பமான உயிரினங்கள் தான். முருகவேள் அவர்களும் அவ்வாறே என்பதில் ஆச்சர்யமில்லை. அதற்காக அவர் எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைத்தது என்பது மகிழ்ச்சியே. 

கானுயிர் மீது அக்கறை உள்ளவர்கள் மட்டுமல்ல. எல்லோருமே வாசிக்க வேண்டிய அருமையான நூல் இது. கானுயிர் பற்றிய அறிவியல் செய்திகளோடு சுவாரஸ்யமான எழுத்து  நடையின் மூலம் இந்த நூலை வெற்றி பெறச் செய்திருக்கிறார் முருகவேள் அவர்கள். 

காக்கைக்கூடு இணையதளத்தில் இந்த நூலை பெறலாம் :

https://crownest.in/product/vaanveliyin-puligal/



Jan 1, 2022

புத்தாண்டு வாழ்த்துகள்

தொடர்ந்து என்னுடைய வலைப்பூவை வாசித்து ஆதரவளிக்கும் அத்தனை வாசகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி

2021-ல் பல்வேறுநாடுகளில் இருந்து வாசித்த அனைவருக்கும் நன்றி.



என்னுடைய அடுத்த விரைவில் வெளிவரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.