Jan 9, 2022

வான்வெளியின் புலிகள் : திரு.த.முருகவேள்

தன்னுடைய கானுயிர் அனுபவங்களை அறிவியல் பூர்வமான செய்திகளோடு மிகவும் சுவாரஸ்யமாக "வான்வெளியின் புலிகள்" என்ற நூல் மூலமாக கொடுத்திருக்கிறார் அதன் ஆசிரியர் திரு.த.முருகவேள் அவர்கள்.

அடிக்கடி யானைகளின் இறப்பு பற்றிய செய்திகள் வந்துகொண்டே இருக்கும் இன்றைய காலகட்டத்தில் இயற்கையாக நிகழ்ந்த ஒரு யானையின் இறப்பை பற்றிய கட்டுரை மிகவும் முக்கியமானது. இவரின் எழுத்துநடை சிறிதும் தொய்வின்றி நம்மை வாசிக்க வைக்கிறது. 

பங்குனி ஆமைகளை பற்றிய செய்தியும், அவற்றை பாதுகாக்க எடுத்த முயற்சிகளையும், அப்போது அவர் எதிர் கொண்ட அனுபவங்களையும் மிக அழகாக எழுதியுள்ளார். ஒரு ஆமையை காப்பாற்ற அவர் எடுத்துக் கொண்ட முயற்சியும், சிட்டுக் குருவியின் அளவே உள்ள மஞ்சள் தொடை சிட்டை அவர் அவதானித்ததும், கடைசியில் அவை கூடு இழந்த போது அவர் மனம் நொந்ததும் கானுயிர்கள் மீது ஆசிரியருக்கு இருக்கும் கரிசனத்தை எடுத்துக் காட்டுகிறது. 


கானமயில்களை தேடி அலைந்து பார்க்க முடியாமல் திரும்பிய போது அவருடைய மன ஓட்டம் எவ்வாறு இருந்தது என்பதையும், வேட்டையாடுபவர்களிடம் இருந்து பூ நாரையை மீட்க சேற்றுக்குள் இறங்கி ஓடிய போது  அவருடைய மனம் எப்படி பதட்டத்தோடு இருந்தது என்பதையும் வார்த்தைகளால் நம் மனதிலும் தைத்துவிடுகிறார் ஆசிரியர். 

கானுயிர்களை நேசிக்கும் எல்லோருக்கும் புலியும் சிறுத்தையும் விருப்பமான உயிரினங்கள் தான். முருகவேள் அவர்களும் அவ்வாறே என்பதில் ஆச்சர்யமில்லை. அதற்காக அவர் எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைத்தது என்பது மகிழ்ச்சியே. 

கானுயிர் மீது அக்கறை உள்ளவர்கள் மட்டுமல்ல. எல்லோருமே வாசிக்க வேண்டிய அருமையான நூல் இது. கானுயிர் பற்றிய அறிவியல் செய்திகளோடு சுவாரஸ்யமான எழுத்து  நடையின் மூலம் இந்த நூலை வெற்றி பெறச் செய்திருக்கிறார் முருகவேள் அவர்கள். 

காக்கைக்கூடு இணையதளத்தில் இந்த நூலை பெறலாம் :

https://crownest.in/product/vaanveliyin-puligal/



4 comments:

  1. Ada daaa…!!!! Miga arumaiyana padaipu😊😊😊

    ReplyDelete
  2. நூல் பற்றிய உங்கள் கருத்துக்கள் அந்தப் புத்தகத்தை வாசிக்கத் தூண்டுகிறது. நிச்சயம் வாங்கி வாசிப்பேன். நன்றி!

    ReplyDelete

Follow