சிறுத்தைப் புலி - இயற்கையின் கொடை

சிறுத்தைப் புலிகளை பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன்னால் சிவிங்கப்புலிக்கும் சிறுத்தைப் புலிகளுக்குமான வேறுபாட்டைத் தெரிந்து கொள்வது அவசியமாகிறது. சிவிங்கப்புலிகள் இன்று இந்திய வனப் பகுதிகளில் இருந்து முழுவதுமாக அழித்து ஒழிக்கப்பட்டு விட்டது. இன்றைய இந்திய வனப் பகுதிகளில் இருப்பது சிறுத்தைப்புலி மட்டுமே. 
சிவிங்கப்புலிகள் தென் ஆப்ரிக்க பகுதியில் தொடங்கி இந்திய வனம் வரை பரவி இருந்தது. அனால் இன்று ஆப்ரிக்காவில் மற்றும் ஈரானில் (மிக குறைந்த அளவில் ஆசிய சிவிங்கப்புலிகள் இங்கு மட்டுமே) மட்டுமே உள்ளது. மாறாக சிறுத்தைப் புலி தென் ஆப்ரிக்க தொடங்கி இந்திய வனம் மட்டுமல்லாது ரஷ்யாவின் கிழக்கு பகுதி முதல் கம்போடிய , லாவோ பகுதி வரை பரவி உள்ளது. ஆனாலும் தொடர் வேட்டைகளால் ஆபத்தான நிலையிலேயே உள்ளது.
சிவிங்கப்புலி உடலில் கரும் புள்ளிகள் உடல் முழுவதும் இருக்கும். ஆனால் சிறுத்தைப் புலியின் உடலில் தலை மற்றும் கழுத்து பகுதியில் கரும் புள்ளிகளும், உடல் பகுதியில் ரோஜா இதழ்களின் மடிப்பு போன்ற கரும் பட்டைகளும் (பல கோண வடிவம் ) இருக்கும். சிவிங்கப்புலி அளவுக்கு சிறுத்தைப் புலிகளால் ஓட முடியாது.

அதே போல சிறுத்தைப் புலிகள், ஜாக்வார் (வேங்கை புலி ) போல இருந்தாலும் இரண்டுக்கும் வேறுபாடு உண்டு. ஜாக்வார் உடலில் இருக்கும் பல்கோண வடிவ கரும் பட்டைகள் சிறுத்தைப் புலிகளை விடப் பெரியதாக இருக்கும்.
165 செ.மீ நீளமும் 80 செ.மீ உயரமும் இருக்கும் சிறுத்தைப் புலி, 91 கிலோ வரை எடை கொண்டதாக இருக்கும். தன் உடலின் எடையை விட இரண்டு மடங்கு அதிக எடை கொண்ட உணவை மரத்தின் மேல் கொண்டு செல்லும் வலிமை உடையது. பொதுவாக மரத்தில் மேல் அமரும் சிறுத்தைப் புலி, தன் உணவை எதிரிகளிடம் இருந்து பாதுகாக்க, மரத்தின் மேல் கொண்டு செல்லும். சிறுத்தைப் புலிகளின் வாழ்விடங்களைப் பொருத்து அவற்றின் நிறத்தில் சிறிய மாறுபாடு காணப்படும். நிறக் குறைபாடு காரணமாக, உடல் முழுவதும் கருமை  நிறத்தில் இருக்கும் சிறுத்தை புலி, கருஞ்சிறுத்தை என்றழைக்கப்படுகிறது.
பொதுவாக சிங்கமும் புலியும் ஒரே வனப்பகுதியில் வாழாது. சிங்கம் வாழ சமவெளிப் பகுதியும், புலிகள் வாழ அடர்ந்த காடுகளும் தேவைப்படுகிறது. ஆனால் சிறுத்தைப் புலி இந்த இரண்டு விலங்குகளும் வாழும் வனப் பகுதிகளில் வாழும் தன்மை பெற்றது. நான்கு மாத பேறுகாலத்தில் இரண்டு முதல் நான்கு குட்டிகள் வரை போடும். ஆனால் அவற்றின் ஐம்பது சதவீதம் மட்டுமே முதல் வருடத்தைக் கடக்கின்றன.
உணவுச்சங்கிலியில் முக்கிய இடம் பெறும் சிறுத்தைப் புலிகளை வேட்டைகளில் இருந்து பாதுகாத்தால் மட்டுமே இயற்கையை சமநிலையில் வைத்திருக்க முடியும்.

Post a Comment

3 Comments

  1. Tiger (Panthera tigris) - புலி, வேங்கை
    Cheetah (Acinonyx jubatus) - சிவிங்கிப்புலி.
    Asiatic Cheetah (Acinonyx jubatus venaticus) - வேங்கைப்புலி, ஆசியச் சிறுத்தை.
    Leopard (Panthera pardus) - சிறுத்தை.
    Jaguar (Panthera onca) - ஜாகுவார்.

    தமிழ் பெயர்களில் ஒரே குழப்பமா இருக்கு... கொஞ்சம் விளக்குங்களேன்.. ப்ளீஸ்...

    இன்னுமொரு சந்தேகம்.

    Leopard (Panthera pardus) - சிறுத்தை.Black panther - கருஞ்சிருத்தை. ( black leopard (Panthera pardus))
    இவை இரண்டுமே ஒரே விலங்கு தான்.. நிறத்தில் மட்டுமே வேறுபாடா? அல்லது கருஞ்சிறுத்தை சிறுத்தையின் சிற்றினமா??

    ReplyDelete
  2. Tiger (Panthera tigris) - புலி, வேங்கை - சரி
    Cheetah (Acinonyx jubatus) - சிவிங்கிப்புலி. -- சரி
    Asiatic Cheetah (Acinonyx jubatus venaticus) - சிவிங்கப்புலி
    Leopard (Panthera pardus) - சிறுத்தை அல்லது சிறுத்தை புலி
    Jaguar (Panthera onca) - ஜாகுவார். என்பது வேங்கை புலி என நினைக்கிறேன். உறுதியாக தெரியவில்லை.

    Leopard (Panthera pardus) - சிறுத்தை.Black panther - கருஞ்சிருத்தை. ( black leopard (Panthera pardus))
    இவை இரண்டுமே ஒரே விலங்கு தான்.. நிறத்தில் மட்டுமே வேறுபாடா? அல்லது கருஞ்சிறுத்தை சிறுத்தையின் சிற்றினமா??

    Leopard என்பதும் Panther என்பதும் ஒன்றுதான். சில சமயம், சிறுத்தை நிறமிக் குறைபாடு காரணமாக கருமை நிறமாக மாறிவிடும். அவை கருஞ்சிறுத்தை என அழைக்கப்படுகிறது. நிறமிக் குறைபாடு காரணமாக புலி வெள்ளை நிறத்தில் மாறிவிடும். அது white tiger என்றழைக்கப்படுகிறது

    ReplyDelete
  3. கட்டுரையை திருத்தம் செய்திருக்கிறேன். உங்கள் கேள்விகளுக்கு நன்றி

    ReplyDelete