தமிழ் நாட்டில் யானை மரணங்கள் ஒரு வரி செய்தியாக மாறி நீண்ட நாட்களாகிவிட்டன. பழனிமலைத் தொடரில் சொற்ப எண்ணிக்கையில் இருக்கும், யானைகளை பார்க்கும் போதெல்லாம் இவற்றுக்கு எதுவும் நேர்ந்துவிடக் கூடாதெனத் தோன்றும். அவற்றில் ஒன்று மின்சாரம் தாக்கி இறந்துவிட்டது. ஒரு அரசு, மனதார யானைகளை காக்க வேண்டும் என்று நினைத்தால் நிச்சயமாக முடியும். மின்வேலிகளாலும், மின் கம்பிகளாலும் யானைகள் மரணமடைவதை நிச்சயமாக தடுக்க முடியும்.
சுமார் இரண்டு வருட காலம், தன் குட்டியை வயிற்றில் சுமக்கும் யானை, இயற்கையான அச்சுறுத்தல்களில் இருந்தும், மனிதர்களால் செயற்கையாக உருவாக்கப்படும் இன்னல்களில் இருந்தும், தன் குடும்பத்துடன் இணைந்து அந்தக் குட்டியை பாதுகாப்பாக வளர்க்கிறது. ஒரு நன்கு வளர்ந்த ஆண் யானை தன் கூட்டத்தில் இருந்து பிரிந்து, அடுத்த சந்ததியை உருவாக்க தயாரான நிலையில், மின்சாரம் தாக்கி ஒரே நொடியில் உயிர் பிரிவது, யாருடைய அலட்சியத்தால் ? ரயில் மோதி கூட்டமாக யானைகள் மரணமடையாமல் இருக்க முயற்சி எடுப்பதும், அதில் வெற்றியடைவதும் சாத்தியம் என்றால், அங்கொன்றும் இங்கொன்றுமாக யானைகள் மின்சாரம் தாக்கி மரணமடைவதை தடுப்பதும் சாத்தியம் தான்.

0 Comments