புத்தகம்: கொடைக்கானல் குல்லா (சிறார் கதை)
ஆசிரியர்: பா.சதீஸ் முத்து கோபால்
பதிப்பகம்: சுட்டி யானை
பயணம் போகலாமா?
பொதுவாக குழந்தைகளுக்கு பெற்றோர்கள் கூறுவதை விட பள்ளி ஆசிரியர்கள் கூறுவதை மனதில் நிலைநிறுத்தி கொள்வார்கள். ஆயினும் நண்பர்கள் கூறியவற்றை சில தருனங்களில் மனதில் அசைபோட வைக்கும் அவ்வாறு நூலாசிரியர் கொடைக்கானல் சுற்றுலா போகப்போறோம் என்றதும் தன் நண்பர்கள் அங்கு சுற்றுலா சென்று வந்த அனுபவ பகிர்வை மனதில் அசை போடுவதாக எழுதியது சிறப்பு.
புத்தத்தில் சிறார்களுக்கு கயல், நிலன், யாழினி, கவின் என அழகிய தமிழ் பெயர்களை சூட்டியமைக்கு ஆசிரியருக்கு மன மகிழ்வான நன்றி.
கொடைக்கானல் நோக்கி மகிழுந்து பயணத்தின் துவக்கத்திலேயே குடகு துவங்கி மேற்கு தொடர்ச்சி மழையின் சிறப்புகளோடு குறிப்பாக அங்கு உற்பத்தியாகும் ஆறுகளால்தான் நாம் குடிக்கும் தண்ணீர், உழவு தொழிலின் வாழ்வாதாரம் என்பதோடு காவிரி ஆற்றில் தொழிற்சாலை கழிவுகள் கலப்பது குறித்த பகிர்வு சிறார்களை சுற்றுச்சூழல் குறித்து சிந்திக்க வைக்கும். அமராவதி ஆறு குறித்த உரையாடலில் சிறார்களிடம் நாம் கொண்டு சேர்க்கும் விடயங்கள் பசுமரத்து ஆணிபோல் பதியும் என்பதை ஆசிரியர் கயலின் நினைவாற்றலை பாராட்டியது அருமை.
முந்தைய உரையாடலலில் காவிரி மற்றும் அமராவதி ஆறுகளின் அறிமுகத்தை தொடர்ந்து, பழனி வழியே! பாலாறும் பொருந்தலை ஆறும் சிறார்கள் மனதில் பாய்ந்தோடுகிறது.
பத்திரிக்கை செய்திகளில் பார்க்கும் யானைகளின் அட்டகாசம் என்பதை ஆசிரியர் யானைகளுக்கு நாம் தொந்தரவு செய்யாத வரை அவை நமக்கு ஒன்றும் செய்யாது என்ற விளக்கம் அடுத்த தலைமுறைக்கு நல்ல செய்தி, அதேவேளை கயலின் அப்பா உடைந்து கிடந்த கண்ணாடி புட்டிகளை பார்த்து தனக்குள்ளாகவே மனம் நொந்து கொண்டது அதற்கான காரணத்தை சிறார்கள் அறிந்து கொள்ள வேண்டாம் என நினைத்திருப்பாரோ!
ஒரு மலைப்பயணதில்
காட்டுயிர்களுக்கு நாம் உணவு வழங்க தேவையில்லை!
அவை அவற்றிற்கான உணவை தேடிக்கொள்ளும்!! என்றதும் இந்த காடுகளில் மரங்களும் செடிகளும் முளைப்பது அவற்றின் எச்சத்திலிருந்து வெளியேறும் விதைகளால் தான் என்ற புரிதலை சிறார்களுக்கு கொண்டு சென்றுள்ள ஆசிரியருக்கு வாழ்த்துகள்.
கோம்பைக்காடு, வடகவுஞ்சிப் பிரிவு, கொண்டை ஊசி வளைவுகள், பெருமாள் மலை, வெள்ளி அருவி என மேல்மலை பயணத்தில் நம்மை நேரடியாக அழைத்து செல்கிறது ஆசிரியரின் எழுத்து நடை.
கொடைக்கானல் வந்ததும் படகு சவாரி, தூண் பாறை, பசுமை பள்ளத்தாக்கு, கோக்கர்ஸ் வாக், வெள்ளி அருவி போன்றவை கொடைக்கானல் சுற்றுலாவில் முக்கிய அம்சங்களாக நமக்கு உணர்த்துகிறார் ஆசிரியர்.
புத்தகத்தின் தலைப்பான குல்லா வாங்குவது துவங்கி குழந்தைகளின் விருப்பமான பொம்மை வாங்குவதை தவிர்க்க நினைக்கும் பெறோர்கள் என்னதான் புத்திசாலித்தனமாக நடந்து கொண்டாலும் இறுதில் வெற்றிபெறுவது குழந்தைகள்தான் என உணர்த்தும் ஆசிரியர் மர யானை பொம்மையை காகிதத்தில் சுற்றி கயிறால் கட்டி துணி பையில் கடைக்காரர் கொடுத்ததாக கூறி இருப்பதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத பொருட்களை கையாண்டு இருக்கிறார்.
ஏரியில் உல்லாசம், ஆம் மகிழ்வான படகு சாரியில் பாதுகாப்பு கவசத்தின் முக்கியத்துவத்தை குழந்தைகளுக்கு உணர்த்தி ஏரியின் ரம்மியமான அழகை படகு சவாரியின் வாயிலாக நம் கண்முன்னே காட்சிப்படுத்தி இருக்கிறார் ஆசிரயர்
குறிஞ்சி பூக்கள் தெரியுமா?
சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள மேற்கு தொடர்ச்சி மலைக்கில் மட்டுமே காணப்படும் பணிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி செடிகளை அறிமுகப்படுத்தி அதன் அழகிய நீல நிற பூக்களின் காரணமாக நீலகிரி என பெயர் வந்த காரணத்தை கூறியிருக்கிறார்.
கொடைக்கானலில் 2018 ஆம் ஆண்டு குறிஞ்சி பூத்ததாகவும் அடுத்து 2030 ஆம் ஆண்டு பூக்கும் என்ற தகவல் இன்னும் ஐந்தாண்டுகள் இருந்தாலும் குழதைகள் அந்த இனிய தருணத்தை அவளோடு எதிர்நோக்கி காத்திருப்பர்.
கொடைக்கானல் சுற்றுலாவில் குழந்தைகளின் குதூகலத்தில் குதிரை சவாரியும் ஒன்று என்பதை படம் பிடித்து காட்டுகிறது.
பொன்னான விடியலில் காலை கதிரவனின் இதமான வெயிலில் கோக்கர்ஸ் வாக்கில் நடைப்பயிற்சி செய்வது இரவில் நிலவிய குளிருக்கு இதமாக இருக்குமாம்.
மேற்கு தொடர்ச்சி மலைகளில் நிறைய ஆறுகள் உற்பத்தியாகிறது என ஏற்கனவே அறிந்திருந்தாலும் அங்குள்ள சோலைக்காடுகளும் புல்வெளிகளும் மழைநீரை சேமித்து மெல்ல மெல்ல வெளியிடுவதால் ஆறுகளில் எப்போதும் தண்ணீர் ஓடுகிறது என்ற புரிதலை குழந்தைகளுக்கு ஏற்படுத்தும்படியாக இருப்பதோடு ஆங்கிலேயர்கள் இவை வீண்நிலங்கள் என நம் மண்ணிற்கு தொடர்பில்லாத அயல் தாவரங்களை பயிரிட்டதன் மூலம் பெரும் பாதிப்பை (85 சதவீத புல்வெளிகள்) அடைந்திருக்கும் நிலையில் மீதமிருக்கும் புல்வெளிகளில் சுற்றுலா பயணிகள் பயன்படுத்தும் நெகிழி பொருட்களால் பேராபத்தை சந்தித்து வருகிறது என குழந்தைகளுக்கு சோலைக்குருவி என்ற தன்னார்வ அமைப்பை அறிமுகப்படுத்தியது அவர்களின் சுற்றுச்சூழல் சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபட தூண்டுதலாய் அமையும்.
மேகங்கள் சூழ்ந்த தூண் பாறையை காண அவை நகரும் வரை காத்திருந்த கயலை விட இந்த புத்தக வாசிப்பின் ஊடக நம்மை அதன் அழகை ரசிக்க வைத்திருப்பது அருமை. அயல் மரமான பைன் மரங்கள் சூழ்ந்த பகுதியை பெயருக்குத்தான் காடு எந்த விதமான காட்டுயிர்களையும் காண முடியாது என்ற போது ஆங்கிலேயர்கள் செய்த தவறை இப்போதும் வனப்பகுதிகளில் வனத்துறையினர் அயல் தாவரங்களை நட்டு வருவதை என்னவென்று சொல்வது.
இந்த மலைக்கே உரிய ஓரிட வாழ்விகளின் பலவற்றையும் பாடம் செய்திருக்கும் செண்பகனூர் அருங்காட்சியகத்தை பார்த்து வியந்த கயல் வெள்ளி அருவியின் சாரலில் அதன் அழகை ரசித்த அவளுக்கு அருவி ஆறாக ஓடுமிடத்தில் குப்பைகளை கண்டு பெரும்கவலை அடைந்ததாக குறிப்பிட்டு இருப்பது சோலைக்குயிலின் தாக்கமாக இருக்குமோ !
புத்தகத்தை குழந்தைகள் தொடர்ந்து வாசிக்க தூண்டும் வகையில் ஓவியர் ஜீவா அவர்களின் ஓவியங்கள் காட்சிகளுக்கு ஏற்றவாறு அமைத்திருப்பது அழகு.
கொடைக்கானல் குல்லா - சூழலியல் சுற்றலா
அன்புடன்
அரங்க.நடராசன்
‐------‐
விரிவான வாசிப்பனுபவத்தை பகிர்ந்த நண்பர் திரு. நடராசன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
0 Comments