மிக நீண்ட விரிவான பதிவுக்கு நன்றி. உங்கள் வாசிப்பனுபவம் பலரையும் சென்று சேரும் என்று நம்புகிறேன். தோழர் பூங்கொடி அவர்களுக்கு மிக்க நன்றி.
இந்த நூல் அமேசானில் கிடைக்கிறது : பல்லுயிர்களுக்கானது பூமி
***************
நூல் :- பல்லுயிர்க்கானது பூமி
ஆசிரியர் :- பா. சதீஸ் முத்து கோபால்
பதிப்பகம் :- காக்கைக் கூடு
பக்கங்கள் :- 124
விலை :- ₹140.00
தன்னுடைய முந்தைய கட்டுரை நூலான யாருக்கானது பூமி ? என்ற கேள்வியின் மூலம், இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் ஒவ்வொரு பொருளும் தனக்கு படைக்கப்பட்டதாக நினைக்கும் மனிதனுக்கு, இந்த பூமி பல்லுயிர்க்கானது என்ற பதிலை இந்த நூலில் தரவுகளோடு ஆசிரியர் தந்துள்ளார்.
செத்துப் போன சரித்திரத்தையும், யாரோ எழுதி வைத்த இலக்கியத்தையும், சில பாடல்களையும் மனனம் செய்வது தான் கல்வியா ? என்ற கேள்வி எனக்குள் இள வயதில் இருந்தது. இந்தக் கேள்விக்கான பதிலை என் வரலாற்று ஆசிரியை சுசிலா அற்புதமாய் எனக்கு தந்தார். அதற்குப் பிறகு கணிதம், தமிழோடு வரலாறும் என் விருப்ப பாடமானது.
கடந்த காலத்தில் செய்த தவறுகள் தெரிந்தால் தான், நிகழ்காலத்தில் அதைத் திருத்திக் கொண்டு , எதிர்காலத்தில் செம்மையாக வாழ முடியும். இந்த நோக்கத்தோடு கடந்த காலத்தில் மனித செயல்பாடுகளால் ஒவ்வொரு நாடுகளிலும் அற்றுப்போன பறவைகளையும், பாலூட்டிகளையும் பட்டியலிட்டு, இப்படியே தொடர்ந்தால் மனிதனும் அற்றுப் போய் விடுவான் என்ற எச்சரிக்கையோடு இந்த நூல் துவங்குகிறது.
மனிதனிடமிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வுகள் இல்லாத பறவைகளான, மொரிசியஸ் தீவில் வாழ்ந்த டொடோ, மடகாஸ்கரில் வாழ்ந்த Elephant bird, நியூசிலாந்தில் வாழ்ந்த Moa போன்ற பறவைகள் எளிதில் மனிதர்களிடம் மாட்டிக்கொண்டு முற்றிலும் அற்றுப்போன பறவைகள்.
பறவை இனங்களில் பெரும்பாலும் ஆண் பறவை தான் கவரக்கூடிய வகையில் இருக்கும். ஆனால் நியூசிலாந்தில் Huia என்ற பறவை இனத்தில், பெண் பறவையின் அலகு ஆண் பறவையை அலகை விட நீண்டதாக இருக்குமாம். பரிணாம வளர்ச்சியின் படி ஏன் இந்த இனத்தில் மட்டும் பறவையின் அலகு நீளமாய் இருக்கிறது என்று காரணம் கண்டறிவதற்கு முன்பே இந்த பறவை 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முற்றிலும் அழிந்து போனது.
அதேபோல அதிகப்படியான வேட்டையால் அழிந்த போன கியூபாவின் cuban Macaw, வேட்டை மற்றும் காடுகளின் அழிப்பால் , கோடிக் கணக்கில் பறவைகள் கூட்டமாய் வலசை போகும் அமெரிக்காவின் பயணியர் புறா, உணவுக்காகவும் சிறகுகளுக்காகவும் கொன்றுளிக்கப்பட்ட ஐஸ்லாந்தின் Great Auk, அமேசான் காடுகளில் முற்றிலும் அழிக்கப்பட்ட Spix's Macaw போன்ற பறவைகள் முற்றிலும் அற்றுப்போனது கடந்த நூற்றாண்டின் மனித செயல்பாடுகளால் தான்.
அதேபோல பாலூட்டிகளிலும் முற்றிலும் அற்றுப்போன ஆஸ்திரேலியாவின் தைலசீன், தென் அமெரிக்காவின் Quagga, வியட்நாமின் ஜாவா காண்டாமிருகம், மலேசியாவின் இழப்பான சுமத்ரா காண்டாமிருகம் , சீனாவின் இழப்பான சைகா, அயர்லாந்தின் இழப்பான ஓநாய், தைவானின் இழப்பான படைசிறுத்தை போன்ற பாலூட்டிகள் அழிந்த காரணத்தையும் இந்த நூலில் துவக்கத்தில் அறிய முடியும்.
இந்த இரண்டு கட்டுரைகளை வாசித்ததும் இத்தனை உயிர்களின் அழிப்பிற்கு நம் மனித இனம்தானே காரணம் என்ற ஒரு குற்ற உணர்வோடு தான் மீதி நூலை நம்மால் வாசிக்க இயலும்.
இந்த நூலில் மிக முக்கியமான கட்டுரை பழனி மலை தொடரும் பறவைகளும். நாங்களும் இந்த மலைத்தொடருக்கு அருகில் வசிப்பதால், இதன் மீதான பற்று சிறிது அதிகமாகவே இருக்கிறது.. இந்தப் பழனி மலை தொடர் மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி. இந்த மலைத்தொடரை இலையுதிர் காடுகளால் ஆன கீழ் மலைப்பகுதி, மழைக்காடுகளும் சோலை காடுகளால் ஆன கொடைக்கானல் மற்றும் சில கிராமங்களை உள்ளடக்கிய மேல்மலை பகுதி என இரண்டாக பிரிக்கலாம். பல்லுயிர் சூழல் நிறைந்த பகுதி இந்த மலைத்தொடர்.
குறிப்பாக ஆங்கிலேயர்களின் வருகைக்கு பின்னால்தான் இந்த மலைத்தொடரின் இயற்கையான சூழல் அமைப்பு சீரழிய தொடங்கியது. ஆங்கிலேயர்களின் பார்வையில் புல்வெளிகள் வீண் நிலங்கள் என்று தோன்றியதால், தொழிற்சாலைகளுக்கும் , காகித உற்பத்திக்கும் பயன்படும் சீகை மரங்களை அங்கு அறிமுகப்படுத்தினார்கள். அதற்குப் பிறகு தைலம், பைன் மரங்கள் அறிமுகத்திற்குப் பிறகு 85 சதவீத புல்வெளிகள் அயல் மரங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டன.
இந்த சோலை காடுகளும் சோலை புல்வெளிகளும் தான், மழை நீரை ஒரு பஞ்சை போல உறிஞ்சி வைத்துக் கொண்டு , சிறிது சிறிதாக நீரை சிறு ஓடைகளாக, அருவிகளாக மனிதர்களுக்கு தேவையான நீரை எல்லா காலங்களிலும் தருகிறது. சூழலியல் முக்கியத்துவம் நிறைந்த இந்த புல்வெளிகளு, ம் சோலை காடுகளும் தான் காவிரி வைகை ஆகிய இரு ஆறுகளுக்கும், மலைத்தொடரின் வடக்கு பகுதியில் அமராவதி, சண்முக நதி போன்றவற்றிற்கு நீரையும் தருகிறது. இந்த சோலை காடுகளை அழித்து விட்டால் இந்த நதிகள், ஆறுகளின் நிலை என்னவாக இருக்கும்? இதை நம்பி வாழும் பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் வாழ்வு எப்படி இருக்கும்? கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்போம்.
இந்த மலைத்தொடரில் மிக முக்கியமான ஒன்று. இந்தப் பகுதியில் மட்டும் வாழும் சில ஓரிட வாழ்விகள் பழனி சிரிப்பான், சோலைச் சிட்டு, சோலை பூச்சி பிடிப்பான், சோலை பூஞ்சிட்டு, கருப்பு ஆரஞ்சு பூச்சி பிடிப்பான் போன்ற பறவைகள். இந்த சூழல் பாதிப்பிற்கு உள்ளாகும் பொழுது இந்த பறவைகளும் அழிவின் விளிம்பில் தள்ளப்படும்.
பழனி மலை தொடரில் கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை ஆண்டுக்கு 1.6 கோடி. இப்படி கூடிக் கொண்டே போகும் சுற்றுலா பயணிகளின் வருகையால் அழிக்கப்படும் காடுகள், உருவாக்கப்படும் சாலைகள், விடுதிகளின் எண்ணிக்கை போன்றவைகளால் மேலும் சூழல் சீர்கேடு ஏற்படுகிறது.
தனிமனிதனிடம் ஒழுக்கத்தை ஏற்படுத்த வேண்டிய கல்வி அதைச் செய்திருக்கிறதா ? என்ற கேள்வி எப்போதும் எனக்குள் வரும். இல்லையென்றால் சுற்றுலா என்ற பெயரில் காடுகளுக்குள் சென்று குடித்து கும்மாளமிட்டு, ஆங்காங்கே மதுபான பாட்டில்களை வீசி எறிந்து விட்டு வருவதும், நெகிழி குப்பைகளை வீசிவிட்டு வருவதும் ஏன் நடக்கிறது?
நாம் வீசி எறிந்து விட்டு வரும் குப்பைகளை, சில இளைஞர்கள் சோலை குருவி என்ற அமைப்பின் மூலம் சேகரித்து மறுசுழற்சிக்கு அனுப்பி கொண்டிருக்கிறார்கள்.. 2021 மற்றும் 2022 ஆண்டுகளில் 9600 கிலோ குப்பைகளை அகற்றி இருக்கிறார்கள். சில நாட்களுக்கு முன்பு கூட அவர்கள் கொடைக்கானல் சோலை காடுகளில் குப்பைகளை அகற்றிய மாபெரும் செயலை பற்றி கேள்விப்பட்டேன். சக மனிதர்களால் விளையும் தவறுகளுக்கு இவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டு சேவை செய்கிறார்கள். உண்மையில் பாராட்டுதலுக்குரியவர்கள்.
இந்த மலைத்தொடரில் கீழே காடுகள் நடுவில் பெரும்பாலும் தோட்டங்கள் உருவாக்கப்பட்டு இருக்கிறது. காட்டை விட்டு வெளியே வந்தால் மின்வேலிகள் அமைக்கப்பட்ட விளைநிலங்கள். இந்த குறுகிய எல்லைக்குள் தான் யானை என்ற அந்த பிரம்மாண்டமான பேருயிர் வசிக்க வேண்டியிருக்கிறது என்பது வேதனை.
உலகில் ஆசியா, ஆப்பிரிக்கா இரண்டு கண்டங்களில் மட்டும் தான் யானைகள் வசிக்கின்றன. யானைகள் பொதுவாக ஓர் இடத்தில் வாழ்வதில்லை அவற்றுக்கான ஒரு வலசை பாதை உண்டு. வலசை பாதையை பறிகொடுத்து விட்டு நிற்கும் யானைகளின் வாழ்வை கேள்விக்குறியாகி உள்ளோம். மின்சாரம் தாக்கி கொல்லப்பட்ட யானைகள், ரயில் மற்றும் வாகனங்களில் அடிபட்டு மாண்டு போகும் யானைகள் பற்றிய செய்திகளை கேள்விப்பட்டு, எந்தவித உறுத்தலும் இன்றி கடந்து சென்று விடுகிறோம். யானையின் மீது டயரை போட்டு நெருப்பு வைப்பது, வாழைப்பழத்திற்குள் பட்டாசு வைத்துக் கொடுத்து அதனை கொல்வது போன்ற அராஜகங்கள் செய்துவிட்டு, காட்டுக்குள் புகுந்த யானை அட்டகாசம் என்கிறோம். நாம் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். யானைகள் இல்லை என்றால் காடுகள் இல்லை; காடுகள் இல்லை என்றால் மழை இல்லை; மழை இல்லை என்றால் வேளாண்மை இல்லை; இறுதியில் மனிதர்களும் இல்லாமல் போய்விடுவோம்.
மேலும் இந்த நூலில் அழிவின் விளிம்பில் தள்ளப்பட்டு, வெறும் நூறுக்கும் குறைவான எண்ணிக்கையில் உள்ள கான மயிலை பற்றிய கட்டுரை சிறப்பான ஒன்று.
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் காட்டுயிர்களை அவை ஏற்கனவே வாழ்ந்த பகுதிகளில் மறு அறிமுகம் செய்யும் முயற்சிகள் நடக்கின்றன. ஆனால் சூழலுக்கு தொடர்பே இல்லாத புதிதாக அறிமுகப்படுத்தப்படும் சில உயிரினங்கள் அந்த சூழலை பாதிக்கவும் கூடும் என்று ஒரு கட்டுரையில் எச்சரிக்கிறார்.
பொதுவாக ஒரு செய்தியை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் காட்சி ஊடகங்களும், அச்சு ஊடகங்களும் மிக முக்கியமானவை. ஆனால் அந்த ஊடகங்களில் காட்டு உயிர்களை பற்றிய அக்கறை எவ்வாறு இருக்கிறது? என்று கேள்வி எழுப்புகிறார். உண்மைக்கு புறம்பான செய்திகளை சொல்வது ஊடகங்களின் அறம் அல்ல . ஆனால் சுவாரசியத்திற்காக சொல்லப்படும் விஷயங்கள் காட்டு உயிர் விஷயத்தில் சரியானது அல்ல என்று ஊடகத்தின் அறம் பற்றி ஒரு கட்டுரை பேசுகிறது.
இந்த நூலில் எனக்கு பிடித்த மற்றும் ஒரு கட்டுரை காந்தியும் சுற்றுச்சூழலும். தன்னுடைய வாழ்வை குறைந்தபட்ச தேவைகளைக் கொண்டு, தன்னுடைய தேவைகளை தானே பூர்த்தி செய்து கொண்டு எளிமையின் சின்னமாய் வாழ்ந்த ஒரு மனிதர்தான் காந்தி. இன்றைய அதிகபட்சமான நுகர்வோர் கலாச்சாரத்தை விடுத்து காந்தியின் எளிமையை கைக்கொள்ள வேண்டும் ; அது இன்றைய காலத்தின் கட்டாயம் கூட என்று உணர்வோம்.
இந்த நூலை ஆசிரியர் சூழலில் செயல்பாட்டாளர் ரவீந்திரன் அவர்களுக்கு சமர்ப்பித்திருப்பார். இந்தக் கட்டுரை வாசிக்கும் இடத்தில் என்னால் ரவீந்திரன் சாரைப் இங்கு பொருத்திப் பார்க்க முடிந்தது. ஒரு தனி மனிதனின் மாதத்தேவை 7000 ரூபாய் தான். அதற்காக மாதம் முழுவதும் ஏன் பணத்தின் பின்னே ஓடிக்கொண்டிருக்க வேண்டும்? என்ற கேள்விக்கு பதிலாய் அடுத்த தலைமுறைக்கு காட்டு உயிர்களைப் பற்றியும் சூழலை பற்றியும் தொடர்ந்து அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கும் நபர். மிக சிறந்த சூழலியல் செயல்பாட்டாளர். வேறு ஒரு காரணத்திற்காக இவரைப் பற்றி இரண்டு , மூன்று கட்டுரைகளும் இவரது நேர்காணல்களையும் வாசித்தேன். மிகச்சரியான நபருக்கு தான் இந்த நூலை ஆசிரியர் சமர்ப்பணம் செய்திருக்கிறார் என்று நெகிழச் செய்தது.
மற்ற சீர்கேடுகளுக்கு சற்றும் குறையில்லாத ஒலி மாசால் ஏற்படும் சூழல் சீர்கேடு பற்றிய கட்டுரை , நதிநீர் இணைப்பு பற்றி பலகாலமாய் அரசியல் தலைவர்கள் முதற்கொண்டு பலரும் பேசி வருகிறார்கள். ஆனால் இணைப்பதற்கு நதிகள் குழாய்கள் அல்ல என்ற கட்டுரையும் மிக முக்கியமானது.
காட்டு உயிர்களுக்கு உணவு தரக்கூடாது என்ற கட்டுரை ஜீவகாருண்யத்திற்கும் காட்டுயிர் பேணுதலுக்கும் உள்ள வித்தியாசத்தை விளக்கும்..
உண்மையில் இந்த நூலில் உள்ள ஒவ்வொரு கட்டுரைகளும் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. மனித செயல்பாடுகளால் நிகழ்ந்து கொண்டிருக்கும் சூழலியல் அவலங்களை காத்திரமாக இந்த நூல் பேசுகிறது.
நம் செயல்பாடுகளில் சிறிதளவு மாற்றம் வந்தால் கூட, மூச்சிரைத்துக் கொண்டிருக்கும் இயற்கையை ஓரளவு காக்க முடியும். உண்மையில் நம் அடுத்த தலைமுறைக்கு நாம் என்ன விட்டு செல்ல போகிறோம்.?
0 Comments