சுடொரொளியில் மிளிரும்
சிறகுகளை அணைத்தபடி
ஈரவயலில் இரைதேடும்
செண்டு வாத்து,
பால்வண்ணக் கழுத்தின்
புள்ளிகளால், கவனம் கொள்கிறது.
அதன் தனித்துவமான அலகு
இன்னும் ஈர்க்கிறது.
![]() |
Photograph by Mr.Raveendran Natarajan |
புற்கள் நெடுக வளர்ந்திருக்கும்
வறண்ட மணற்பரப்பினிலே
ஒற்றை முட்டை இட்டுவைத்து
காத்திருக்கும் கானமயில்.
பாலைநிலச் சூழலிலே
பல்லுயிர்கள் பல உண்டு.
உயரப்பறக்கும் பறவைகளிலே
அதிக எடை இதற்குண்டு.
மேயவரும் மாடுகளால்
முட்டைகள் உடைந்துவிட,
தப்பித்த சில குஞ்சுகள்
தெரு நாய்களிடம் சிக்கிவிட,
சுருங்கிப்போன வாழிடத்தில்
தப்பிப்பிழைப்பது ஒரு சிலவே.
துப்பாக்கி வேட்டைக்கு
சில பறவைகள் செத்துவிழ,
உயிர்பிழைத்து வாழும் சில
மின்கம்பிகளில் மோதிவிழ,
உலகின் பெரிய தேசங்களில்
ஒன்றான இந்தியாவில்,
மீதமிருக்கும் கானமயில்கள்
ஒரு நூறு மட்டுமே.
ஆம், ஒரு நூறு மட்டுமே.
எதிர்காலம் எழுதுமொரு
வரலாறு.
அதில் கானமயில்
அற்றுவிடக்கூடாது.
- பா.சதீஸ் முத்து கோபால்
![]() |
லண்டன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் பாடம் செய்யப்பட்ட கானமயில் |
பல்லுயிர்களுக்கானது பூமி..!!
இந்த முறையும் காக்கைக்கூடு பதிப்பகமே வெளியிடுகிறது. அவர்களுக்கு என் நன்றிகள்.
இந்த உலகில் வாழ்ந்து அற்றுப்போன சில உயிரினங்கள், தற்சமயம் அருகிவரும் உயிரினங்கள், என் மனதுக்கு நெருக்கமான பழனிமலைத் தொடரில் வாழும் உயிரினங்கள் என பல்லுயிர்களைப் பேசுகிற நூலக இது இருக்கும்.
இந்த நூலை செப்பனிட்டு, அணிந்துரை எழுதிக் கொடுத்த திரு.தியடோர் பாஸ்கரன் அவர்களுக்கும், என் உள்ளுணர்வுகளை பிரதிபலிக்கும் விதமாக அணிந்துரை தந்த திரு.கோவை சதாசிவம் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
அட்டைப்படம் இன்னும் முடிவாகவில்லை. இந்த பூமியில் வாழும் எந்த ஒரு குறிப்பிட்ட உயிரினம் அட்டைப்படத்தில் இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். பின்னூட்டம் செய்யுங்கள்.