இருவாட்சி என்றொரு பறவை உண்டு. மரப்பொந்துகளில் கூடமைக்கும் இப்பறவை அதில் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கிறது. மரப்பொந்தில் உள்ளே செல்லும் பெண் பறவை தன் இறகுகளை உதிர்த்து கூடமைத்து உள்ளேயே தங்கிவிடுகிறது. முட்டையிட்டு பத்திரமாக அடைகாத்து குஞ்சுகள் வளரும் வரை உள்ளேயே சிறைபட்டுக் கிடக்கும் தாய்மையின் அதிசயத்தை என்னவென்று சொல்வது ? ஆனால் அதற்கு சற்றும் குறைவில்லாமல் பணி செய்துகொண்டிருக்கும் ஆண் பறவையின் அற்புதங்களை எப்படி பேசாமல் விடுவது ?  பெண் பறவைக்கு மட்டுமல்லாது அதன் குஞ்சுகளுக்கும்  ஆண் பறவையே உணவை கொண்டுவந்து தரவேண்டும். குஞ்சுகள் ஆரோக்யத்துடன் வளர அதற்கு தேவையான உணவை தேடித் திரிந்து கொண்டுவர வேண்டும். இதற்கு இடையில் தனக்கான உணவையும் எடுத்துக் கொள்ள வேண்டும். பறவை தானே... சிறகை விரித்து உல்லாசமாக வானில் பறக்கலாம் என்று நினைப்பவர்களுக்கு அதன் துயரங்கள் புரியாது. மனிதர்களிடமிருந்தும் தப்பித்து இத்தனை விஷயங்களையும் அந்த ஒரு ஆண் பறவை செய்ய வேண்டியிருக்கிறது. 


இப்படித்தானே இந்த உலகத்தில் வாழும் பல்லாயிரம் உயிரினங்களும் பரிணமித்து வாழ்ந்து கொண்டிருக்கின்றன, மனிதர்கள் உள்பட. இந்த உலகில் எல்லா உயிரினங்களும் நிலைத்து வாழ ஆண்களின் பங்களிப்பு இல்லாமல் சாத்தியமே இல்லை. இத்தனை அர்ப்பணிப்புடன் வாழும் ஆண், பெண்களைப் போல போற்றப்படுவது இல்லை. சமூக குற்றங்களில் பெரும்பாலும் ஆண்களின் பெயரே பிரதிபலிப்பதால் ஒட்டுமொத்த ஆண்களும் குற்ற உணர்ச்சியோடு வாழ வேண்டியது இல்லை. ஆனால் ஆண்களின் மீது அப்படி ஒரு சாயம் பூசப்படுவதும் அநீதி இல்லையா ? ஆண்களின் உணர்வுகளும், கனவுகளும் ஆசைகளும் உலகம் முழுக்கவே பெரும்பாலும் விவாதிக்கப்படுவதில்லை. ஆனால் சமூக அரசியல் மாற்றங்களுக்கான முன்னெடுப்புகளை செய்வதில் பெரும்பாலும் ஆண்களே முன்னிற்கிறார்கள்.

 இருவாட்சியின் குஞ்சுகளுக்கு தாயின் கனிவு தான் தெரியும். தந்தையின் அர்ப்பணிப்பு தெரியாது. ஆனால் அதில் இருக்கும் ஆண் குஞ்சுகள் பெரிதானதும், தன் தந்தையைப் போலவே சுற்றிக் கொண்டிருக்கும். இது இயற்கையின் நியதி. ஆண்களின் தியாகங்கள் பேசாப் பொருளாகவே இருப்பதற்கு ஆண்களும் காரணம் தான். பரிணாம வளர்ச்சியில் எல்லா திறமைகளையும் பெற்றுக் கொண்ட ஆண், தன்னை வெளிப்படுத்திக் கொள்ள கற்றுக் கொள்ளவேயில்லை. தன்னுடைய கூட்டத்திலிருந்து தனிமைபடுத்தப்படும் ஆண் யானைகளைப் போல, ஆயிரக்கணக்கான பசுந்தாள்களைக் கொண்டு கூடமைத்த பிறகும், நிராகரிக்கப்படும் ஆண் தூக்கணாங்குருவியைப் போல எத்தனையோ வலிகளோடு வாழும் ஆண்கள் அத்தனை பேரும் இந்தப் புவியில் உயிர்கள் தழைத்திருக்க காரணமாக இருக்கும் அற்புதங்கள் இல்லையா ?