தமிழகத்தின் பறவை காப்பிடங்கள் : திரு.ஏ.சண்முகானந்தம் & முனைவர்.சா.செயக்குமார்

இந்த நூலை வாசிக்கத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே இந்த நூலை பற்றிய என்ன ஓட்டம் முழுவதும் மாறிவிடுகிறது. காரணம், இந்த நூல், வெறும் பறவை காப்பிடங்களை பற்றிய நூல் மட்டுமல்ல. இது தமிழகத்தின் பறவைகள் பற்றிய ஒரு ஆவணம். பறவைகள் பற்றி எல்லோரும் புரிந்து கொள்ளும்படி எழுதப்பட்ட அறிவியல் நூல். பறவையினுடைய உடல் பாகங்கள், அவற்றின் வாழிடம், அவற்றின் வலசை காலங்கள், வலசை வரும் இடங்கள் என மிக விரிவான தளத்திற்கு இந்த நூல் நம்மை அழைத்துச் செல்கிறது. 


ஒவ்வொரு பறவை காப்பிடத்திற்குமான பெயர் காரணங்கள், அது எப்படி சூழலியலோடு பொருந்திப் போகிறது என்பதற்கான விளக்கங்கள், இன்றைய சூழ்நிலையில் அந்த பறவை காப்பிடங்கள் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் அதற்கான தீர்வுகள், பறவைகள் அந்த குறிப்பிட்ட காப்பிடத்திற்கு வருவதற்கான காரணங்கள், அவை எப்போது வலசை வருகின்றன, எங்கிருந்து வருகின்றன, எப்போது திரும்புகின்றன என விரிவாக பேசுகிறது இந்த நூல்.

பறவைகள் பற்றிய சங்க இலக்கியக் குறிப்புகள், பறவைகளுக்கான சரியான தமிழ் பெயர்கள், பெயரில் இருக்கும் சிக்கல்கள் என தமிழகம் சார்ந்த பறவைகள் பற்றிய எல்லா தலைப்புகளையும் ஒரே நூலில் முடிந்த அளவிற்கு கொண்டு வந்துவிட்டதற்காகவே ஆசிரியர்கள் திரு.ஏ.சண்முகானந்தம் மற்றும் முனைவர்.சா.செயக்குமார் இருவரையும் வாழ்த்துகிறேன்.

பறவை காப்பிடங்கள் மட்டுமல்லாது, பறவைகள் அதிகம் வலசை வரக்கூடிய தமிழகத்தின் மற்ற பகுதிகளையும் இந்த நூல் ஆதரிக்கிறது. அவை பறவை காப்பிடங்களாக மாற வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகிறது. இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ள திருப்பூர் நஞ்சராயன் குளம் சமீபத்தில் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. 

அழகிய வண்ணப்படங்களுடன் கூடிய இந்த நூல் புதிதாக பறவை காணலை நோக்கி திரும்பும் பலருக்கும் உதவியாகவும் இருக்கும். பறவைகளின் வாழிடங்கள் சீரழிந்து வருவதை உரக்க பேசும் இந்த நூல் தமிழ் பசுமை இலக்கியத்தில் முக்கிய வரவாக இருக்கும். இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ள பள்ளிக்கரணை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நீர்நிலைகளை பறவைகளின் நலன் கருதியும் அதனால் மனிதர்களுக்கு ஏற்படும் நன்மைகள் கருதியும் அரசு கவனத்தில் கொண்டு அந்த பகுதிகளை பாதுகாக்க வேண்டும். தமிழகத்தின் சூழலியலை பார்க்கும் போது எல்லா மாவட்டங்களிலுமே பறவைகள் சரணாலயங்கள் அமைவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன. நீர் நிலைகளை மட்டுமே சார்ந்தில்லாது காடுகள் மற்றும் சம தளத்தில் உள்ள புல்வெளிப்பகுதிகளையும் பறவை காப்பிடம் என்ற அடையாளத்தோடு பாதுகாக்க அரசு முன்வர வேண்டும்.

காக்கைக்கூடு தளத்தில் இந்த நூலை வாங்கலாம்.

தமிழகத்தின் பறவை காப்பிடங்கள்


Post a Comment

0 Comments