May 29, 2022

துடுப்புவால் கரிக்குருவி [Greater racket-tailed drongo]

நீண்டதொரு மெல்லிய காம்பில்  

உதிராதிருக்கும்

ஓரிதழ் போன்றதொரு 

இரட்டைவாலுக்கு,

இடையூறின்றி இருக்குமொரு 

உடைந்த மரக்கிளையில்,

வழக்கமாக வந்தமரும் 

துடுப்புவால் கரிக்குருவி,

சீழ்கை ஒலியெழுப்பி 

பலகுரலில் பாடித்திரியும்.



May 7, 2022

சிறுத்தையா ? சுற்றுலாவா ? எது முக்கியம் ?

இரண்டு தினங்களுக்கு முன்பாக (05-May -2022) பழனி மலைத் தொடரில் வாகனத்தில் அடிபட்டு ஒரு சிறுத்தை இறந்தது. இது சாதாரணமாக கடந்து போகக் கூடிய செய்தி அல்ல. கொடைக்கானலுக்கு செல்ல புதிய சாலைகள் வந்து கொண்டே இருக்கிறது. ஒரு நகரம் எவ்வளவு வாகனங்களை தாங்கும் என்றோ, ஒரு மலைத் தொடர் எத்தனை சாலைகளை தாங்கும் என்றோ எந்த வரைமுறையும் இல்லை. 


ஏற்கனவே இந்த மலைத் தொடரில் தொடர்ந்து சாலைகளில் அடிபட்டு பல உயிரினங்கள் இறந்து வந்த நிலையில் சிறுத்தையின் இழப்பு இங்கிருக்கும் சூழ்நிலையை வெட்ட வெளிச்சமாக்கியது. சிறு வயதில் இருந்தே இந்த மலைத் தொடர் எனக்கு நெருக்கமான ஒன்று என்பதால் சிறுத்தையின் இழப்பை இந்த பகுதியின் சூழல் பாதுகாப்புக்கான எச்சரிக்கையாகவே பார்க்கிறேன்.




கொடைக்கானல் வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்ட பின்னரும் காட்டுயிர்களுக்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலையே நிலவுகிறது. சுற்றுலாவை விடவும் காடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் தான் இந்த பூமியில் மனிதர்கள் தொடர்ந்து வாழ முடியும் என்பதை புரிந்து கொண்டு அரசாங்கம் செயல்பட வேண்டும். ஒரு வளமான வனத்தின் குறியீடே புலி சிறுத்தை போன்ற விலங்குகள். 


இனியாவது கொடைக்கானல் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தி, வேகத் தடைகளை அமைத்து, சுற்றுலா பயணிகளை வழியில் வாகனங்களை நிறுத்தாமல் தடுத்து, கூடுதல் கண்காணிப்பாளர்களை நியமித்து, விதிமுறை மீறுபவர்களுக்கு அபராதம் வசூலித்து இந்த மலைத் தொடரையும் காட்டுயிர்களையும் பாதுகாக்க வழி செய்ய வேண்டும். 

நான் சுற்றுலாவை வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால்  காடுகளையும் காட்டுயிர்களையும் இழந்துவிடாத அளவிற்கு முறைப்படுத்தப்பட்ட சுற்றுலாவை சாத்தியமாக்க வேண்டும்.