அலையாத்தி காடுகள் : முனைவர். மா. மாசிலாமணி செல்வம்

உலகில் காணப்படும் தனிச்சிறப்பு மிக்க காடுகளில் அலையாத்தி காடுகளும் மிக முக்கியமானது. சுனாமிக்கு பிறகே தமிழ் நாட்டில் இந்த அலையாத்தி காடுகளின் முக்கியத்துவம் குறித்து அதிகம் பேசப்பட்டது. தமிழ்நாட்டில் சுனாமி அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்த அலையாத்தி காடுகளை நாம் இழந்திருந்தது முக்கிய காரணமாக சொல்லப்பட்டது. சில பகுதிகள் பாதிப்பை சந்திக்காமல் இருந்ததற்கு காரணமும் அலையாத்தி காடுகளே. இப்படி சிறப்பு வாய்ந்த இந்த அலையாத்தி காடுகளை பற்றி விரிவாக எடுத்துரைக்கும் நூல் திரு.மாசிலாமணி செல்வம் அவர்கள் எழுதிய அலையாத்தி காடுகள்.

இந்தியாவில் காணப்படும் அலையாத்தி காடுகளில் ஒரு சதவீதம் மட்டுமே தமிழ் நாட்டில் உண்டு. அதாவது 49 சதுர கி.மீ. மேற்கு வங்கத்தில் அதிகபட்சமாக 43% அலையாத்தி காடுகள் காணப்படுகின்றன (2114 சதுர கி.மீ). சுந்தரவன புலிகள் காப்பகம் அமைந்திருப்பதும் இங்கேதான். உலக அளவில் தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசியாவில் தான் அதிக அளவில் அலையாத்தி காடுகள் காணப்படுகின்றன.


எண்ணற்ற உயிர்களுக்கு ஆதாரமாக விளங்கும் அலையாத்தி காடுகள் பற்றி இந்த நூல் விரிவாக எடுத்துரைக்கிறது. இறால்கள், சிங்கி இறால்கள், நண்டுகள், பூச்சிகள், கிளிஞ்சல்கள், சிப்பிகள், ஆழிகள், முதுகெலும்பற்ற உயிரினங்கள், மீன் ஒட்டுண்ணிகள், மீன்கள், நீர் நில வாழ்வன, ஊர்வன, பறவைகள், பாலூட்டிகள் என 3182 வகையான உயிரினங்கள் இந்தியாவில் உள்ள அலையாத்தி காடுகளில் காணப்படுகின்றன.

வண்டல் மண்ணை அடிப்படையாக கொண்டு உவர் நீரில் வளரும் அலையாத்தி காடுகளின் மரங்கள் புவி வெப்பமடைவதை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை வருடம் முழுவதும் வளர்வதால் காற்றில் உள்ள அதிகப்படையான கரியமில வாயுவை உறிந்து, அதனை தன் தண்டு மற்றும் வேர்களில் சேமித்து நமக்கு தேவையான ஆக்சிஜன் அளவை உற்பத்தி செய்வதாக ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

அழிந்து வரும் அலையாத்தி காடுகளை காப்பதன் மூலமே கடல் வளம் காப்பற்றப்படும் என்பதால் இந்த காடுகளை பாதுகாப்பது மிகவும் அவசியமாகிறது. அலையாத்தி காடுகளை காப்பற்ற முன்னெடுக்கும் செயல்பாடுகளுக்கு இந்த நூல் துணையாக இருக்கும்.

Post a Comment

0 Comments