May 31, 2021

வானில் பறக்கும் புள்ளெலாம் : திரு.தியடோர் பாஸ்கரன்

திரு.தியடோர் பாஸ்கரன் அவர்கள் எழுதிய மற்றுமொரு சூழலியல் மற்றும் கானுயிர் சார்ந்த  தொகுப்பு.

இந்தியாவின் பல்வேறு காடுகளை பற்றியும் எண்ணற்ற கானுயிர்களை நாம் எவ்வாறு இழந்து வருகிறோம் என்பதை பற்றியும் விரிவாக எழுதியிருக்கிறார். இந்திய காடுகள் சட்டம் எப்போது உருவானது, காடுகள் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டன என்பது போன்ற செய்திகளும் இந்த புத்தகத்தில் உண்டு. அந்தமான் தீவுகள் எப்படி உருவாயின, அங்கே காணப்படும் ஓரிட வாழ்விகள் யாவை என பல்வேறு தளங்களில் இந்த கட்டுரை தொகுப்பை எழுதியிருக்கிறார். 

தமிழ்நாட்டிற்கு வலசையாக வரும் பட்டை தலை வாத்துகள் (Bar Headed Goose), சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படும் அன்னமாக இருக்கலாம் என்று கேள்வி எழுப்பி இருப்பது நிச்சயமாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. ஐரோப்பாவில் காணப்படும் "Mute Swan" தமிழ் நாட்டில் எங்குமே பதிவு செய்யப்படவில்லை என்பதால், பட்டை தலை வாத்துகள், முன்பு அன்னம் என அழைக்கப்பட்டிருக்க வாய்ப்பிருப்பதாக ஆசிரியர் கருதுகிறார். இந்த கருத்தில் இருந்தே ஆசிரியருக்கு கானுயிர்கள் மீது இருக்கும் ஈடுபாடு அளப்பரியது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.  


சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்ட மற்றொரு வலசை பறவையான செங்கால் நாரைகள் (White Stork) தற்போதும் தமிழ் நாட்டிற்கு வருகின்றன. ஆனால் அவற்றின் எண்ணிக்கை மிகவும் குறைந்து போயிருப்பதை சுட்டிக் காட்டுகிறார் ஆசிரியர். 

மான்களுக்கும் இரலைகளுக்கும் இருக்கும் வேறுபாட்டை தெளிவாக எடுத்துக் காட்டியிருக்கும் ஆசிரியர், இரலையே (Antelope) என்றாலும் "Blackbuck" வெளிமான்கள் என்று அழைக்கப்படுவதையும் அதன் வாழிடச் சூழல் சிதைந்து போயிருப்பதையும் விரிவாக சுட்டிக் காட்டுகிறார். சுமார் நான்கு லட்சம் என்ற அளவில் இருந்த வெளிமான்கள் 25000 என்ற அளவிற்கும் குறைந்து போனதற்கு புல்வெளிக்காடுகளை இழந்ததே எனக் குறிப்பிடுகிறார்.

திமிங்கிலத்தின் (Blue Whale) வலசை பாதை குறித்தும், திமிங்கிலத்தை நேரில் பார்த்த அனுபவங்களையும் பகிர்ந்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் அற்றுப்போன கானமயில் (Great Indian Bustard), வரகுக்கோழி (Lesser Floricon), சிவிங்கப்புலி (Asiatic Cheetah) போன்றவற்றை பற்றிய தகவல்களும் இந்த புத்தகத்தில் உண்டு.

கானுயிர் பேனலில் மொழியின் முக்கியத்துவம் அவசியமானது என்பதை பல உதாரணங்களின் மூலமாக சிறப்பாக எடுத்துக் காட்டியிருக்கிறார். காட்டு மாடு (Gaur) காட்டெருமை என்றும், கருநாகம் (King Cobra) ராஜநாகம் என்றும், அருவி (Water Falls) நீர்வீழ்ச்சி என்றும், சோலைமந்தி (Lion Tailed Macaque) சிங்கவால் குரங்கு என்றும்,அலையாத்திக் காடுகள் (Mangrove Forest) மாங்ரோவ் காடுகள் என்றும் அழைக்கப்படுவதை எல்லாம் விரிவாக எடுத்துரைத்து வேதனையை வெள்ளிப்படுத்தியுள்ளார்.

திரு.தியடோர் பாஸ்கரன் அவர்களின் மற்ற நூலகள் :

இந்திய நாயினங்கள் (ஒரு வரலாற்று பார்வை)

https://ivansatheesh.blogspot.com/2020/05/blog-post_23.html


இன்னும் பிறக்காத தலைமுறைக்காக :


கானுறை வேங்கை :


Sprint of the Blackbuck: Edited by Mr.S.Theodre Baskaran


May 30, 2021

பூச்சிகளின் தேசம் : திரு. கோவை சதாசிவம்

ஒரு காட்டுப்பயணத்தில் நடைபெறும் ஆரோக்கியமான உரையாடல்கள் மூலமாக பூச்சிகளின் உலகை மிக  எளிமையாக நமக்கு அறிமுகப்படுத்துகிறார் ஆசிரியர் திரு.கோவை சதாசிவம் அவர்கள். உலகில் உள்ள மொத்த மனிதர்களின் எடையை  காட்டிலும் பூச்சிகளின் எடை அதிகம். 


இருப்பினும் சூழலில் பூச்சிகளுக்கு இருக்கும் முக்கியத்துவம் பற்றி அதிகம் பேசப்படாத நிலையில் இந்த புத்தகம் அதிகம் கவனிக்கப்படவேண்டியது. எறும்பு, கரையான், நத்தை, தும்பி, மின்மினிப்பூச்சி, அட்டை, வண்ணத்துப்பூச்சி, கரப்பான், சிலந்தி, தேனீ என நாம் அறிந்த பலவற்றையும் அறிவியல் செய்திகளோடு கொடுத்திருக்கிறார் ஆசிரியர். 

ஆசிரியரே முன்னுரையில் சொல்லியிருப்பது போல, பல கேள்விகளுக்கான பதில்கள் இந்த புத்தகத்தில் உண்டு. ஈசலின் வாழ்வு ஒருநாள் தானா? நத்தைக்கு முதுகில் ஓடு எதற்கு?  எறும்புகள் வரிசையாக போவது ஏன்? மின்மினிகள் ஏன் ஒளிர்கிறது? அட்டைகள் ஏன் இரத்தம் குடிக்கிறது? சிலந்திகள் பூச்சியினமா? என பல கேள்விகளுக்கும் இந்த நூலில் விடை தருகிறார்.

தேன் ஏன் கெடுவதில்லை? தேனீக்கள் நடனமாடுவது எதனால்? தேனீக்கள் வாழ்வு முறை, இந்தியாவில் காணப்படும் தேனீ இனங்கள் என பல அறிவியல் தகவல்களை எல்லோரும் புரிந்து கொள்ளும்படி மிக எளிமையாக கொடுத்திருக்கிறார். நொடிக்கு நானூறு முறை இறகுகளை துடிக்கும் இந்த தேனீக்கள் பற்றி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொன்னதையும் மேற்கோள் காட்டியிருப்பது சிறப்பு. 

"உலகில் தேனீக்கள் மறைந்துவிட்டால் மனித குலத்தின் ஆயுட்காலம் வெறும் நான்கு ஆண்டுகளில் முடிந்துவிடும். தேனீக்கள் மறைந்தால் மகரந்த சேர்க்கை மறையும், செடி கொடிகள் மறையும், மனிதனும் மறைந்துவிடுவான்".

பள்ளி மாணவர்களால் நிச்சயம் வாசிக்கப்படவேண்டிய நூல். 

புத்தகத்தை பெற : https://crownest.in/poochikalin-desam-by-kovai-sadhasivam/

May 29, 2021

புல்லாங்குழல்களைச் சுவைக்கும் யானை - முனைவர் திரு.ஜி.சிவக்குமார்

பழனியை சேர்ந்த திரு.சிவக்குமார் அவர்கள் எழுதிய இந்த கவிதை தொகுப்பை மிகவும் தாமதமாவே வாங்கினேன். வாசித்தேன். எப்போதோ வாசித்திருக்க வேண்டிய நூலை காலதாமதமாக வாங்கியது எவ்வளவு தவறு என்பதை வாசிக்கத் தொடங்கியதும் தெரிந்துகொண்டேன். 

திரு. சிவக்குமார் அவர்களின் இந்த கவிதை தொகுப்பு அவ்வளவு மென்மையானது. வாசிப்பதற்கு மிகவும் இலகுவானது. ஆனால் சிந்திக்கவைப்பது. நமக்குள் கேள்வி எழுப்பக்கூடிய கவிதைகளை அற்புதமாக எழுதிக் கொட்டியிருக்கிறார். கவிதைகள் வாசிப்பதென்பதே அற்புதமான அனுபவம் தான். அதுவும் கானுயிர் தொடர்புடைய கவிதைகள் என்றால் ஈர்க்கத்தானே செய்யும். இந்த நூலின் உள்ள கவிதைகளின் மையப்புள்ளி பழனியை சுற்றி இருப்பதால் கூடுதல் ஆர்வம் இருக்கத்தான் செய்கிறது. 

திருஆவினன்குடி யானை பற்றிய கவிதை அற்புதத்தின் உச்சம். பழனியை சேர்ந்தவராக இருந்தால் இந்த கவிதையை இன்னும் கூடுதலாக ரசிக்க முடியும். நூலின் ஆசிரியர் இயற்கை ஆர்வலர். அது அவருடைய பெரும்பாலான கவிதைகளில் இயல்பாகவே வெளிப்படுகிறது. பறவைகளின் தமிழ் பெயர்களை கவிதைகளில் கொண்டுவந்திருப்பது சிறப்பு. 

தற்போது நிறைய பறவையினங்களை அற்புதமாக படம் எடுக்கிறார். அவருடைய மற்றொரு நூலையும் வாசிக்க வேண்டும். "புல்லாங்குழல்களைச் சுவைக்கும் யானை" நூலின் அடுத்த பதிப்பு ஆசிய யானையின் அட்டைப்படத்தோடு விரைவில் வெளிவர வேண்டும். 

"புல்லாங்குழல்களைச் சுவைக்கும் யானை" கிடைக்குமிடம் : குமுதம் புத்தக நிலையம், பழனி பேருந்து நிலையம்.