Oct 8, 2022

யாருக்கானது பூமி? - விமர்சனம் 6

அன்பு நண்பர் மற்றும் எழுத்தாளர் திரு.ஜி.சிவகுமார் அவர்களின் நீண்ட விமர்சனம். பேரன்பும் நன்றியும் சார். இப்படி ஒரு நீண்ட விமர்சனத்தை வாசிக்கையில் மனம் நெகிழ்கிறது. இந்த நூலை எழுதி முடிக்க எடுத்துக்கொண்ட உழைப்பு அர்த்தமுள்ளதாகிறது. தொடர்ந்து எழுத வேண்டும் என்ற உந்துதலையும் ஏற்படுத்துகிறது. மிக்க நன்றி சார்.

=======================================




யாருக்கானது பூமி?
சூழலியல் கானுயிர்காப்பு பறவையியல் கட்டுரைகள்
பா.சதீஷ் முத்து கோபால்
காக்கை கூடு வெளியீடு
2014 15 ஆம் ஆண்டில் சிறந்த சுற்றுச்சூழல் விருது பெற்ற நுல்
பா.சதீஷ் முத்து கோபால், காட்டுயிர்கள், விலங்குகள் மற்றும் பறவைகள் அவதானிப்பு மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர் சுற்றுச்சூழல் மற்றும் காட்டுயிர் பாதுகாப்பு தொடர்பான செயல்பாடுகளில் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து இயங்கி வரும் இவர் பழனியை சேர்ந்தவர். தற்போது மென்பொருள் துறையில் பணி புரிகிறார் இது இவரது இரண்டாவது கட்டுரைத் தொகுப்பு.
வனத்தையும் கானுயிர்களையும் பறவைகளையும் ஒரு திரைப்படத்தைப் பார்ப்பது போல், ஒரு தொலைக்காட்சிச் தொடரைப் பார்ப்பது போல் வெற்றுப் பொழுதுபோக்காக பார்ப்பவர்களின் மத்தியில் பறவைகளையும், கானுயிர்களையும் தேடி அடர்ந்த வனத்திற்குள் பல நாட்கள் பயணம் செய்து, காத்திருந்து, பார்த்திருந்து அவற்றை புகைப்படங்களில் வார்த்தைகளில் பனிரெண்டு கட்டுரைகளில் பதிவு செய்திருக்கிறார்
இப்போது கூட ஒரு மலைத் தொடரின் அடிவாரங்களில் பயணம் செய்கையில்,மிக நீண்ட தொலைவிற்கு இருளில் தகதகக்கும் நெருப்பைப் பார்த்திருப்பீர்கள். மனிதனின் அலட்சியத்தாலும் சுயநலத்தாலும் பல்லுயிர் பெருக்கம் நிறைந்த ஒரு வனம் அழிவதை வாசிக்கும்போது மனம் பதறுகிறது.
காவிரி வனப்பகுதி,பழனி மலைத் தொடர்கள், ஸ்ரீரங்கப்பட்டணம், பிரம்மகிரி வனவிலங்கு சரணாலயம், வனவிலங்கு கணக்கெடுப்பிற்காகச் சென்றிருந்த கர்நாடக மாநிலத்தில் உள்ள நாகர்ஹோலே வனப் பகுதி,ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பரத்பூர்,பத்ரா புலிகள் காப்பக வனப்பகுதி,சத்தியமங்கலம் வனப்பகுதி, சென்னையின் புறநகர் பகுதியில் உள்ள நீர்நிலைகள் ஐரோப்பாவின் சுவிட்சர்லாந்து நகரம் என பறவைகளையும்,கானுயிர்களையும் தேடி அவர் பயணங்கள் செய்வதை அறிகையில் பிரமிப்பாகவும் ஏக்கமாகவும் இருக்கிறது..
புலிகள் சரணாலயத்தில் வெகு அருகில் புலியின் பேரோசையைக் கேட்க வாய்த்த அவருக்கு அதைக் காணும் வாய்ப்பு கிடைக்கவில்லை.விரைவில் கிடைக்கட்டும்.
நத்தைகுத்தி நாரை போல ஒரு பறவையின் குணத்தை வைத்தே அதற்குத் தமிழ்ப் பெயரிடுகிறார்கள்.சுற்றுலாப் பயணிகள் குரங்குகளுக்கு உணவளிப்தால்,அவை உணவைத் தேடி உண்ணும் தன் இயல்பைத் தொலைக்கின்றன.அதோடு பயணிகள் விட்டுச் செல்லும் உணவின் மீதங்களைப் பறவைகள் உண்பதால் அவற்றிற்கும் தீங்கு விளைகிறது. பூச்சிகளையும், சிலந்திகளையும் உண்ணும் தேன்சிட்டு அளவிலான பட்டு நெற்றி என்னும் சிறு பறவை மரங்களில் தலைகீக கீழ்நோக்கி நடக்கும் திறமை வாய்ந்தது இப்படி, வனங்கள், பறவைகள்,விலங்குகள் குறித்த தெளிவான நம்பகமான விவரங்கள்,அவற்றின் முக்கியத்துவம், தற்போதைய சூழ்நிலையில் வனங்களின், பறவைகளின் விலங்குகளின் அவலநிலை எல்லாவற்றையும் பொருத்தமான சங்க இலக்கியப் பாடல்களோடு விரிவாகப் பதிவு செய்திருக்கிறார்.குறிப்பாக மழைநீரைத் தேக்கி வைத்து சிற்றோடைகளாக மாற்றித் தரும் சோலைக்காடுகளின் நன்மைகளையும்,அவற்றைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் வாசிக்கும் அனைவரும் தெளிவாக அறிந்து கொள்வார்கள்.
பழங்குடியின மக்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகள் குறிப்பாக அந்த குழந்தைகளுக்கு தரவேண்டிய தரமான கல்வி ஆகியவற்றைப் பற்றிப் பேசும்போது ஆசிரியர்களும் காடுகளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும் என்று சொல்வது எல்லோரும் சிந்திக்க வேண்டிய விஷயம்.அதற்கு முதலில் காடு குறித்த தெளிவான புரிதலை ஆசிரியர்கள் கொண்டிருக்க வேண்டும் என்பதும் முக்கியமல்லவா?
நிலத்திலும்,நீரிலும் நாம் சாதாரணமாகக் காணக்கூடிய பறவைகள்,கானுயிர்களிலிருந்து அடர்ந்த வனங்களில் மட்டுமே காணக்கூடிய பறவைகள்,கானுயிர்கள் வரை அவற்றின் பெயர்களோடு கூடிய புகைப்படங்கள், அவர்களைப் பார்த்த அனுபவங்கள் எல்லாவற்றையும் விரிவாகத் தந்திருக்கிறார்.
பறவைகளையும் அதிகமாக காணக்கூடிய இடங்களையெல்லாம் பட்டியலிட்டு தருவதோடு, செல்ல வேண்டிய காலம் முதலிய முக்கியத் தகவல்களையும் தருகிறார்.
பள்ளிக் குழந்தைகளுக்கும்,பொதுமக்களுக்கும் காடு,கானுயிர்கள்,பறவைகள் குறித்த விழிப்புணர்வையும் உண்டாக்கி வருகிறார்.
அவர் வெறுமனே ஒரு பறவைகள்,கானுயிர்கள் பார்ப்பவர் மட்டுமல்ல,அவற்றைப் பாதுகாப்பதில்,அதன் வழி சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதில் சலிப்பின்றி உழைத்தும் வருகிறார்.அதனாலேயே இந்தப் புத்தகம் முக்கியத்துவம் பெறுகிறது.
அருகில் அமர்ந்து பேசுவது போல் இயல்பான நடையில் எழுதப்பட்ட இந்தப் புத்தகத்தை வாசிப்பவர்களும் அவருடன் இணைந்து வனப் பயணங்களை மேற்கொண்டு, பறவைகளை வெகு அருகில் கண்ட இனிய அனுபவத்தைப் பெறுவார்கள்.
சூழலைக் காக்க,காடுகளைக் காக்க,காட்டுயிர்களைக் காக்க,நம் தலைமுறைகளைக் காக்க நாம் சிறிய மாற்றங்களையாவது நமக்குள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமென்ற சதீஸ் முத்து கோபாலின் ஆசை நம் நலனுக்காக நிச்சயம் நிறைவேற வேண்டும்.
யாருக்கானது பூமி?என்கிற கேள்வியோடு நேர்த்தியான வடிவமைப்பில்,அழகிய அட்டைப்படமும் அமைந்த இந்தப் புத்தகத்தை வாசிப்பவர்கள் வாசித்து முடிக்கையில் பூமி யாருக்கானது என்பதை நிச்சயம் உணர்ந்திருப்பார்கள்.

2 comments:

  1. Your writings are beyond the words to give a feedback but you deserve everything! Every single point make sense and I can clearly understand how important all these! Keep writing and keep inspiring us

    ReplyDelete