Oct 24, 2020

அமெரிக்க அதிபர் தேர்தல் - கவிதை

அமெரிக்க அரசனுக்கு 
பருவநிலை பிறழ்வு பற்றிய 
கவலை ஏதுமில்லை. 

பெருமழையோ புயலோ 
உருகும் பனியோ 
அதிசயம் இல்லை உங்களுக்கு. 

பொங்கும் கடலோ வெயிலோ 
காட்டுத்தீயோ
செய்தி மட்டுமே உங்களுக்கு.

தனிமனித நுகர்வில் 
உங்கள் தேசத்து மாநகரம் 
அதிசயங்களை நிகழ்த்துகிறது.

புரட்டிப்போட்ட பேரிடரால் 
மூன்றாம் தேசத்து மாநகரம் 
பசியால் துடிக்கிறது. 

நிலக்கரியை எரித்துக்கொண்டே 
நீங்கள் நியாயம் 
பேசுங்கள். 

மூழ்கும் சிறுதீவின் 
கடற்கரையில் 
அடைகாக்க இடம் தேடும் 
தாய் பறவைக்கு 
என்ன பதில் சொல்வீர்கள் 
அரசனே. 


Oct 4, 2020

நிலவை ரசித்த தடயங்கள் : கவிதை

நான் நிலவை ரசித்த தடயங்கள் 

ஏதுமற்ற போதும்,

சமதூர இடைவெளியில் 

பறந்து செல்லும் பறவைகள் 

பிறை வடிவை 

ஒத்திருந்ததால்,

அவை 

எனக்கும் நிலவுக்கும் ஆன 

இடைவெளியை 

நிரப்பி இருக்கக்கூடும்.Oct 3, 2020

சிதறாத எழுத்துக்கள் : 10-ஆண்டுகள் நிறைவு

சிதறாத எழுத்துக்கள் நூல் வெளியாகி இன்றோடு 10-ஆண்டுகள் நிறைவடைகிறது. திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் என்னுடைய இந்த நூலை பெங்களூர் தமிழ்ச் சங்கத்தில் வெளியிட்டார்.

Oct 2, 2020

காந்தியும் சுற்றுச்சூழலும்

மகாத்மா காந்தி கட்டுரை

காந்தியிடமிருந்து இந்த உலகம் கற்றுக்கொள்ள ஏராளமான செய்திகள் உண்டு. காந்தி மறைமுகமாக இந்த உலகிற்கு விட்டுச் சென்ற செய்தி சுற்றுச் சூழல் பாதுகாப்பு. காந்தியின் காலத்தில் சுற்றுச் சூழல் மாசுபாடு பெரிதாக இல்லையென்றாலும் காந்தியின் எளிமையான வாழ்க்கை இன்றைய சூழலுக்கு மிக முக்கியமான செய்தியை சொல்கிறது. மனிதர்களின் பேராசையை இந்த உலகால் பூர்த்தி செய்ய முடியாது என்றார் காந்தி. ஆனால் இன்று வரை யாரும் இதை உணர்ந்ததாக தெரியவில்லை. எந்த தேசமும் அதை புரிந்து கொள்ளவும் இல்லை. 

காந்தியின் காலத்தில் இந்திய மக்கள்தொகை முப்பது கோடியாக இருந்தது. இன்று மக்கள் தொகை அதிகரித்துவிட்டாலும் நுகர்வுக் கலாச்சாரமும் அன்றை விட பல மடங்கு அதிகரித்துவிட்டது. இயற்கையிலிருந்து நாம் உற்பத்தி செய்யும் பொருட்கள் ஒரு புறம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மறுபுறம் அந்த பொருட்களை உற்பத்தி செய்வதால் ஏற்படும் சூழல் சீர்கேடுகளும் அதிகரித்தவண்ணமே உள்ளன. வாங்கிய பொருட்களை மறுசுழற்சி செய்யாமல் தூக்கி எறிவதால் உருவாகும் சூழல் சீர்கேடு என தொடர்ந்து சுற்றுச் சூழல் பாதிக்கப்பட்டுவருகிறது. காந்தியின் காலத்தில் இத்தனை வாகனங்கள் இல்லை. காந்தியின் காலத்தில் இவ்வளவு போக்குவரத்து வசதிகளும் இல்லை. காந்தியை இன்றைய சூழலில் பொருத்திப்பார்ப்பது சுலபமில்லை தான். ஆனாலும் காந்தி சொல்லும் செய்தி மிக முக்கியமானது. பருவநிலை பிறழ்வால் உலகம் எதிகொள்ளப்போகும் சவால்களுக்கு காந்தி சொல்லிவிட்டுச் சென்ற ஒரே தீர்வு எளிமையான வாழ்க்கை. 

காந்தி தன் ஒட்டுமொத்த வாழ்நாளுக்கு பிறகு இந்த உலகில் விட்டுச் சென்ற பொருட்களை விடவும் பல மடங்கு அதிகமானது நாம் ஒவ்வொரு ஆண்டும் இந்த உலகில் இருந்து நுகரும் பொருட்களின் அளவும், நாம் தூக்கி எரியும் பொருட்களின் அளவும். நுகர்வு கலாச்சாரத்தின் மூலமாக ஒரு தேசத்தின் பொருளாதாரம் மேன்படுமானால் அது எப்படி நம் தலைமுறைகளுக்கு பாதுகாப்பானதாக இருக்க முடியும் ? 

ஷாப்பிங் என்பது பொழுதுபோக்காக இருக்கும் இன்றைய தலைமுறைக்கு, ஆடையை துறந்து எளிமையின் அடையாளமாக இருந்த காந்தியை எப்படி புரிந்து கொள்ள முடியும் ? இன்றும் நாம் ஓரளவேனும் சுத்தமான காற்றை சுவாசிக்க முடிகிறதென்றல் அதற்கு காந்தி காலத்து எளிமையான மனிதர்களின் வாழ்வு தான் காரணம். 

நம் தலைமுறைக்கும் தூய்மையான காற்றும் நீரும் உணவும் வேண்டுமென்றால், அதற்கும் நாம் காந்தியை துரத்திக் கொண்டிருக்கமுடியாது. காந்தியின் சாவி இப்போது நம் கைகளில் இருக்கிறது. காந்தியை போன்ற வாழ்வை, இன்று யாரும் ஏற்றுக் கொள்ளும் சூழல் இல்லையென்றாலும் காந்தியை உணர்வது காலத்தின் அவசியம். எங்காவது ஒரு கிராமத்தில் எளிமையான மனிதர்களை பார்த்தால் நினைவில் கொள்ளுங்கள். நம் தலைமுறைகள் வாழ இந்த புவியின் வாழ்நாளை நீட்டித்துக் கொண்டிருப்பவர்கள் அவர்கள் தான். 

குற்ற உணர்ச்சியற்ற எளிமையான வாழ்வு தான் காந்தியின் அடையாளம். இன்றும் அப்படி வாழ முயற்சிக்கும் ஒருவனை உலகம் "பிழைக்கத் தெரியாதவன்" என்றே சொல்லும். அப்படியே ஒருவன் வாழ்ந்தாலும் இந்த சமூகம் அவனை கொண்டாடப்போவதுமில்லை. காந்தி, காந்தி காலத்தில் வாழ்ந்தார் என்பது தான் ஒரே ஆறுதல். 

*****

மேலும் : காந்தியம் கவிதை