நாம் கடைகளில் சென்று வாங்கும் எந்த ஒரு பொருளும் ஏதோ ஒரு வகையில் இயற்கையில் இருந்தே பெறப்படுகிறது. பொருட்களை வாங்குவதற்கு பணம் மட்டுமே போதுமானது என்ற பொதுபுத்திக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். பெரும்பாலான பொருட்கள் அதன் பயன்பாடு தீர்ந்த பிறகு குப்பையாகவே போய் சேர்க்கிறது. குப்பைகளை பிரித்து அவற்றை மறுசுழற்சி செய்யும் முயற்சியில் இந்தியா இன்னும் முதல் அடி கூட எடுத்து வைக்கவில்லை. ஞெகிழிப் பயன்பாடு என்பது தவிர்க்க முடியாத சூழலில், அவற்றை குறைத்துக் கொள்ள மக்களும் அரசும் முயற்சி மேற்கொள்ள வேண்டும். சில வருடங்களுக்கு முன்பு வரை கடைகளுக்கு செல்லும் போது பை எடுத்துச் செல்வது வழக்கமாக இருந்தது. மேலும் கடையில் என்ன வாங்க வேண்டும் என்பதை ஒரு சீட்டில் எழுதி எடுத்துக் கொண்டு செல்லும் பழக்கமும் இருந்தது. ஆனால் இன்று கடைகளுக்கு செல்லும் போது கை வீசிக் கொண்டு செல்லும் மக்கள், தான் வாங்க நினைத்த பொருட்களை விடவும் கூடுதலான பொருட்களை வாங்கிச் செல்கிறார்கள். கூடுதலான நுகர்வு பொருளாதார சிக்கல்களை ஏற்படுத்துவதோடு, தேவைக்கு அதிகமாக வாங்கும் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படவும் விலைவாசி உயரவும் வாய்ப்பாக அமைகிறது. மேலும் பொருட்களை அள்ளிப்போட்டுக் கொண்டு வர பயன்படுத்தும் ஞெகிழிப் பைகள் அப்படியே குப்பையாக போய் சேர்க்கிறது.
![]() |
தேவையற்ற முறையில் நுகரப்படும் ஞெகிழி |
இன்றும் இந்தியாவில் வீணாக்கப்படும் உணவுப் பொருட்கள் அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் அலட்சியம் என்றே நினைக்கிறன். விளம்பரங்களின் மீதான மோகமும், பொருட்களின் மீதான ஈர்ப்பும் மக்களை சந்தைக்குள் இழுத்துவிட்டு திண்டாட வைக்கிறது. இரண்டு லிட்டர் ரசாயன குளிர்பானத்தை வாங்கும் பலரும் அதை முழுவதுவமாக பருகவதில்லை. (பருகினால் அதனால் நன்மை ஒன்றுமில்லை என்பது வேறு விஷயம்). ஆனால் இதற்கான மூலப்பொருட்கள் யாவும் இயற்கையில் இருந்தே பெறப்படுகிறது. இந்த பானங்களை தயாரிக்க அதிகப்படியான நீர் தேவைப்படுகிறது. இவற்றை அடைத்து வைக்கத் தேவையான ஞெகிழி புட்டிகள் குப்பையாக சென்று சூழலை நாசமாக்குகிறது. இதற்கு பதிலாக நாம் இளநீரை பருகுவதாக எடுத்துக் கொண்டால், அவற்றை நிச்சயமாக புட்டிகளில் அடைத்து சேமிக்க மாட்டோம். தேவையின் போது மட்டுமே வாங்கிப் பருகுவோம். இளநீர் மட்டைகள் மக்கிப்போகும் அல்லது ஏதோ ஒரு வகையில் பயன்படும். நிச்சயம் சூழலுக்கு கேடாக அமையாது.
கடைகளில் விற்கபடும் தண்ணீர் புட்டிகளாலும் இதே சூழல் சீர்கேடு மட்டுமே நடக்கிறது. உணவகத்துக்கு செல்லும் போது வீட்டில் இருந்து தண்ணீர் எடுத்துச் செல்வது முடுயாத காரியமன்று. ஆனால் ஞெகிழிப் புட்டிகளை நோக்கியே நம் கைகள் நீள்கிறது. மீண்டும் அவை குப்பையாக சேர்க்கிறது. இந்த நுகர்வுக் கலாச்சாரம் தான் மிகவும் ஆபத்தானது. அடுத்த தலைமுறைக்கு தண்ணீர் கிடைக்காமல் போவதற்கு இந்த கலாசாரம் தான் அடித்தளம் அமைத்துக் கொண்டிருக்கிறது. இணையதளத்தில் பொருட்களை வாங்குவதும், பல்பொருள் அங்காடியில் நடந்து கொண்டே பொருட்களை அள்ளிப்போடுவதும், நுகர்வை பொழுதுபோக்கு என்று பெருமைப்படும் மனோபாவமும், தேவைக்கு அதிகமாக பொருட்களை வாங்கிக்குவிப்பதும் இயற்கையின் மீதான தாக்கத்தை அதிகரித்துக் கொண்டே செல்லும். நுகர்வு என்பதே தவறு என்று சொல்லவில்லை. தேவைக்கு அதிகமான நுகர்வு நிச்சயம் தவறுதான். மேல்தட்டு மக்களின் கூடுதல் நுகர்வு சுற்றுச் சூழலை பாதிக்கிறது. இது அடித்தட்டு மக்களின் சுகாதாரத்தில் சிக்கலை ஏற்படுத்துகிறது.
வாழை இலை கூட பிளாஸ்டிக்கில் வந்துவிட்டது. கிணற்றிலும் ஆற்றிலும் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தோம். பிறகு குழாயில் தண்ணீர் பிடித்து அருந்தினோம். இப்போது புட்டிக்கு மாறி சூழலை சீரழிக்கிறோம். இவை எல்லாவற்றுக்கும் பின்னாலும் தண்ணீரை தனியார்மயமாக்கி அதில் லாபம் தேடும் பெரு நிறுவனங்களின் முதலாளித்துவம் இருக்கிறது.
ஒரு வாழைப்பழம் வாங்கி அதை ஞெகிழிப் பைகளில் போட்டுக் கொண்டு செல்வதை விடவும், வாழைப்பழத்தை உண்டு உடலுக்கு வலு சேர்ப்பதோடு அதன் தோலை மக்கும் குப்பையில் போட்டு மண்ணுக்கு உரம் சேர்த்தால் நாம் இழப்பதற்கும் ஏதும் இல்லை. இந்த பூமிக்கும் பாரமில்லை. ஆனால் சந்தைப் பொருளாதாரம் பூமியை சுரண்டிக் கொண்டே இருக்கிறது. ஒரே ஒரு வாழைப்பழத்தை ஞெகிழியில் சுற்றி விற்கிறது. அதற்கு நம் எல்லோரையும் துணைக்கு அழைக்கிறது.