Mar 20, 2015

ஏன், எதற்கு, எப்படி : சிட்டுக்குருவிகள்

ஏன் சிட்டுக்குருவிகள்:

ஏன் சிட்டுக்குருவிகள் அழிந்து வருகின்றன என்ற கேள்வி பல்வேறு இடங்களில் முன்வைக்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் இதன் வாழிடச் சூழல் அழிந்து வருவதே காரணம். முன்பிருந்ததை போல ஓட்டு வீடுகளோ கூரை வீடுகளோ இல்லாமல் போனது ஒரு காரணம். மற்றுமொரு காரணம் வேளாண் நிலங்களில் தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லிகள் நேரடியாகவோ மறைமுகமாகவோ சிட்டுக் குருவிகளை பாதிக்கின்றன.

எதற்கு சிட்டுக்குருவிகள்:

சிட்டுக்குருவிகளை எதற்காக பாதுகாக்க வேண்டும், அதனால் என்ன பயன் என ஒரு சில மனிதர்கள் (?) கேட்பதுண்டு. இந்தியாவில் சுமார் 1400 பறவை இனங்கள் வாழ்ந்தாலும் சிட்டுக்குருவிகள் அழிந்து வரும் பறவை இனங்களின் அடையாளம். ஒவ்வொரு பறவைக்கும் சூழலை சீராக வைப்பதில் பங்குண்டு. புழு பூச்சிகளை உண்டு வேளாண்மைக்கு உதவி செய்பவை சிட்டுக்குருவிகள்.

எப்படி சிட்டுக்குருவிகள்:

எப்படி சிட்டுக்குருவிகளை பாதுகாக்கலாம் என கேட்பவர்களுக்கு சிறிய அறிவுரை. இந்த படத்தில் உள்ளது போல, மண் சட்டிகளை அமைக்கலாம். மழை நீர் புகாதபடியும், அணில்களால் நெருங்க முடியாதபடியும் இது இருக்க வேண்டும். நாட்டுக்கம்பு போன்ற தானியங்களை சிட்டுக்குருவிகள் உண்ணும். குரோட்டன்ஸ் போன்ற அழகான(?) தாவரங்களுக்கு பதிலாக நம்முடைய நாட்டுச் செடிகளை வளர்த்தால் அதில் உள்ள பூச்சிகளை அவை உணவாக தின்னும்.



சிட்டுக்குருவிகளை காப்பாற்றுவது மிக எளிதானது. தேவை நல்ல மனம் மட்டுமே. உங்களால் முடியுமென்றால் செய்து பாருங்கள். முடியாதென்றால் சத்தமில்லாமல் கடந்து போய்விடுங்கள். நீங்கள் இதை வாசித்தீர்கள் என எனக்கு தெரியவா போகிறது.








Mar 16, 2015

பறவைகளுக்காக ஒரு கிராமம்


பறவைகளுக்காக பட்டாசு வெடிக்காத கிராமம் ஒன்றுக்கு சென்று திரும்பினேன். பறவைகளும் மனிதர்களும் இணைந்து வாழும் இது போன்ற ஒரு ஊரை உலக வரைபடத்தில் காண்பது அரிது. நாம் அருகில் சென்றால் சிட்டுக் குருவிகள் கூட நம் மீது நம்பிக்கை இல்லாமல் விருட்டென பறந்துவிடுகிறது. ஆனால் அந்த ஊரில், உருவில் பெரியதாக இருக்கும் மஞ்சள் மூக்கு நாரை கூட வீடு வாசலில் உள்ள மரங்களில் கைக்கெட்டும் தூரத்தில் கூடு கட்டி குஞ்சு பொரிக்கிறது. அந்த ஊர் மனிதர்கள் மீது பறவைகள் காட்டும் நம்பிக்கையின் அடையாளமாகவே இதை நான் பார்க்கிறேன். இப்படி ஒரு நம்பிக்கையை அந்த பறவைகள் அடைய வேண்டுமெனில், அந்த பறவைகள் மீது அந்த ஊர் மக்கள் செலுத்தும் அன்பு எத்தனை வியப்புக்குரியது.

பால் பாண்டி மாதிரியான மனிதர்களின் வாழ்வு மிகவும் ஆச்சர்யப்படுத்துகிறது. தன் வாழ் நாள் முழுவதையும் பறவைகளுக்காக அர்ப்பணித்து வாழும் இது போன்ற மனிதர்கள் பறவைகள் பெற்ற வரம். இயற்கை பெற்ற வரம். பறவைகளின் பின்னால் அலைந்து திரிந்து அவற்றை பற்றிய அறிவியலை உணர்ந்து அவற்றை பாதுகாக்கும் நல்லெண்ணம் கொண்ட மிகச் சிறந்த மனிதராகவே பால் பாண்டி அவர்களை பார்க்கிறேன்.

இயற்கையோடு இணைத்து வாழ்வதென்பது மிகவும் சிக்கலாகிவிட்ட இந்த கால கட்டத்தில், மனித நேயத்தை சத்தமில்லாமல் உணர்த்திக் கொண்டிருக்கிறது கூந்தன்குளம்.