Jan 25, 2014

புலியின் உதிரம்..!!

நிறைய கேள்விகளையும் தாக்கத்தையும் ஏற்படுத்திவிட்டு உயிர் இழந்திருக்கிறது ஒரு புலி. புலி கொல்லப்பட்டதை வனத் துறை சாதனையாக நினைக்கிறது. மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்கிறார்கள். ஒரு ஆரோக்யமான காட்டின் அடையாளம் புலி. காடுகள் அழிக்கப்படும் போது கண்டுகொள்ளாத அரசாங்கமும் பொதுமக்களும், வாழிடம் இழந்த ஒரு புலியை கொன்றுவிட்டு அதை வெற்றியாக கருதுகிறார்கள்.



புலி கொல்லப்பட்டது சரியா தவறா என்பதை விடவும் அது கொல்லப்பட ஏன் நிர்பந்திக்கப்பட்டது என்பதையும், அது ஏன் கட்டை விட்டு வெளியே வந்தது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். புலிகளின் வாழிடம் வேகமாக சரிந்து வருகிறது. அப்படியானால் ஆரோக்யமான காடுகளை நாம் இழந்து வருகிறோம் என்றே பொருள். காடுகளை இழந்தால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை இன்னமும் சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அதன் விளைவுகள் எல்லோருக்கும் தெரியும். ஏற்கனவே கடந்த மூன்று ஆண்டுகளாக பருவ மழை சரியானபடி இல்லை. மழை வேண்டுமானால் காடுகள் வேண்டும். செழிப்பான காடுகளின் அடையாளமாக அங்கே புலிகளும் வேண்டும்.



ஊடகங்கள் புலி கொல்லப்பட்டதை சொல்வதோடு நின்று விடுகிறது. அதன் வாழிடம் எப்படி சிதைகிறது என்பதை சொல்வதில்லை. காடுகளுக்குள் அணைகள் கட்டுவதும், சாலைகள் போடுவதும், கட்டிடங்கள் கட்டுவதையும் இன்னமும் நம் மக்கள், அரசின் சாதனைகளாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த எண்ணம் முதலில் மாற வேண்டும். எல்லா திசையிலிருந்தும் காடுகள் சுருங்கும் போது விலங்குகள் எங்கே செல்லும்? சாலையில் அடிபட்டு சாகின்றன. கிணற்றில் விழுந்து சாகின்றன. வேட்டையாடப்பட்டு கொல்லப்படுகின்றன. வேட்டு வைத்து விரட்டபடுகின்றன. அவை அனைத்தும் தன் வாழிடங்களை தொலைத்துவிட்டு அலைந்து கொண்டிருக்கின்றன. இதன் விளைவுதான் வனத்துறையே புலியை கொள்ளவேண்டிய சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறது. புலி கொல்லப்பட்டது கொண்டாட வேண்டிய விஷயம் அல்ல. நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம். மனிதனின் சுரண்டலில் மெல்ல மெல்ல உயிர் இழந்து கொண்டிருக்கிறது இந்த மொத்த பூமியும். புலி உணவுக்காக மட்டுமே வேட்டையாடுகிறது. ஆனால் மனிதன் அப்படியல்ல. காடுகளுக்கும் சென்று குடித்துவிட்டு தூக்கி எரியும் ஒவ்வொரு மது பாட்டில்களிலும் எழுதப்பட்டிருக்கிறது மனிதனின் அழிவு.

Jan 18, 2014

பசுமை சந்திப்பு - காணொளி

04.05.2013 - அன்று சென்னையில் நடைபெற்ற பசுமை சந்திப்பு நிகழ்ச்சியின் முழு தொகுப்பையும் இங்கே பதிவு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழின் முக்கியமான சூழலியல் எழுத்தாளர்கள் பலரும் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி மிகவும் முக்கியமானதாக அமைந்தது.