Jun 27, 2020

Great Auk - ஐஸ்லாந்தின் இழப்பு [Iceland]

வட அட்லாண்டிக் பெருங்கடலில் வாழ்ந்த பறக்க இயலாத பறவையினம் "Great Auk". பாறை தீவுகளில் இனப்பெருக்கம் செய்து வாழ்ந்து வந்த இந்த பறவையினம் 19-ஆம் நூற்றாண்டின் மத்தியில் அற்றுப்போனது. ஐஸ்லாந்தில் சில தீவுகளில் வாழ்ந்த இந்த பறவையினம் மனிதர்களிடம் எளிதில் மாட்டிக்கொண்டது. மிகவும் சொற்ப எண்ணிக்கையில் இந்த பறவையினம் மிச்சம் இருந்த போது அருங்காட்சியகங்களுக்காக இந்த பறவை அதிகமாக பிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அப்படி அவை பிடிக்கப்பட்ட போது அவற்றின் முட்டைகளையும் எடுத்துச் சென்றனர். 

Taxidermy Specimen of Great Auk at Oslo Natural History Museum

அழிவின் விளிம்பில் அவை வந்த பிறகும், அவை ஒரு சிறிய ஒற்றை தீவில் தனிமைப்பட்ட போதும் மனிதன் அங்கேயும் சென்று அவற்றை கொல்லவே செய்தான். கடைசியாக பிடிக்கப்பட்ட "Great Auk" சில மீனவர்களால் கொண்டு செல்லப்பட்டதாகவும், அப்போது ஏற்பட்ட புயலுக்கு இந்த பறவை உடன் இருப்பதே காரணம் என நினைத்து அதை கொன்றுவிட்டதாகவும் ஒரு செய்தி உண்டு. பல மில்லயன் ஆண்டுகளாக பரிணமித்த ஒரு உயிரினத்தை பாதுகாக்க பல எளிய வழிகள் இருந்தும் காலம் கடந்து விட்டது. 

மனிதர்கள் உணவுக்காகவும் இதன் சிறகுகளுக்காகவும் (தலையணைகள் செய்ய) இதை அதிகளவில் கொன்றிருந்தாலும், அருங்காட்சியகங்களில் இவற்றை கொடுத்து பணம் பெறுவதற்காக மிச்சமிருந்த சொற்ப பறவைகளும் கொல்லப்பட்டது தான் வேதனை. இது பென்குயின் கிடையாது. 

மேலும் :


Jun 21, 2020

Passenger Pigeon - அமெரிக்காவின் இழப்பு [USA]


இந்த உலகில் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்த உயிரினங்களில் ஒன்று "Passenger Pigeon". 19-ஆம் நூற்றாண்டில் சில நூறு கோடிகளில் இருந்த பறவையினம் 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முற்றிலும் அற்றுப் போனது (Extinct). மிக குறைந்த காலகட்டத்தில் (50 ஆண்டுகளில்) இந்த பறவையினம் அழிந்து போக இரண்டு காரணங்கள் முக்கியமாக சொல்லப்படுகின்றன. 1. வேட்டை. 2. காடழிப்பு. இந்த பறவையினத்தை காப்பதற்காக 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் எடுத்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. 

கோடிக்கணக்கான பறவைகள் கூட்டமாக வலசை செல்லும் போது பகல் பொழுதை இருட்டாக்கும் அளவுக்கு இதன் எண்னிக்கை இருந்துள்ளது. எளிமையான வேட்டையில் சிக்கிக் கொண்ட இந்த பறவைகளை பெருமளவில் உணவுக்காக பயன்படுத்தப்பட்டது. ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்ட இந்த பறவையினம் அதே காலகட்டத்தில் காடழிப்பின் காரணமாக தன் வாழிடத்தையும் இழந்தது. சின்சினாட்டி மிருக காட்சி சாலையில் 1914-ஆம் ஆண்டு இவ்வுலகின் கடைசி "Passenger Pigeon" மறைந்து போனது. லண்டன்  வரலாற்று அருங்காட்சியகத்தில் ஆண் மற்றும் பெண் பறவையை காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். 

Taxidermy Specimen of Passenger Pigeon at London Natural History Museum

"Passenger Pigeon"-க்கு இணையாக இவ்வுலகில் அதிக எண்ணக்கையில் வேறு பறவைகள் இருந்தனவா என தெரியவில்லை. ஆனால் இத்தனை அதிக எண்ணைக்கையில் "Passenger Pigeon" பறவைகள் இருந்தும் அவற்றை அற்றுப் போகச் செய்ததில் இருக்கிறது மனிதனின் அறியாமையும் தோல்வியும். "Passenger Pigeon"-ஐ இந்த பூமி இழந்தது மனிதனால் நிகழ்ந்த வரலாற்று பிழை.


Jun 19, 2020

Cuban Macaw - கியூபாவின் இழப்பு [Cuba]


பரிணாம வளர்ச்சி பெரும்பாலான உயிர்களுக்கு ஒரு எச்சரிக்கை உணர்வை கொடுத்தே இருக்கிறது. உதாரணமாக "கானாங்கோழி" (White Breasted Water hen). மனிதன் கண்ணில் பட்டவுடன் சட்டென ஓடி புதரில் மறைந்து கொள்ளும். அரிதாக சில உயிரினங்கள் அத்தகைய எச்சரிக்கை  உணர்வுகள் ஏதுமற்று இருப்பது ஆச்சர்யம். அப்படியான ஒரு உயிரினம் தான் Cuban Macaw (Ara tricolor). 19-ஆம் நூற்றாண்டின் அற்றுப் போன (Extint) உயிரினம் இந்த Cuban Macaw. அதிகப்படியான வேட்டையே இந்த பறவை இனம் முற்றிலும் அழிய காரணமாக அமைந்திருக்கிறது. மிகவும் அழகான வண்ணங்களால் ஆன இந்த பறவை அதிகளவில் பிடிக்கப்பட்டு  சந்தைகளில் விற்கப்பட்டுள்ளது. 

Taxidermy Specimen of Cuban Macaw at Berlin Natural History Museum


James W. Wiley மற்றும் Guy M. Kirwan ஆகியோரது ஆராய்ச்சி முடிவுகள் இந்த பறவை குறித்த சில தகவல்களை தெரிவிக்கிறது. இந்த பறவையை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்திய போதும் அதன் அருகில் அமர்ந்திருந்த மற்றொரு பறவை பறந்து செல்லாமல் வீழ்ந்த பறவையை உற்று நோக்கி அங்கேயே அமர்ந்திருக்குமாம். இந்த குணம் தான் இந்த பறவையை எளிதில் பிடிக்கவும் கொல்லவும் மனிதர்களுக்கு எளிதாக அமைந்தது. தரையில் விழுந்திருக்கும் பழங்களை உண்ண வரும் இந்த பறவையை சுற்றி வளைத்தபோதும், அது பறக்க முற்படாமல் தன் கால்களாலும் அலகாலும் மனிதர்களிடம் இருந்து தற்காத்துக்கொள்ள போராடும் குணம் கொண்டதாக இருந்திருக்கிறது. 


எனவே மனிதர்களால் இவற்றை எளிதில் பிடித்து விற்பனை செய்ய முடிந்திருக்கிறது. மனிதர்கள் நுழைவதற்கு முன்பாகவே பல்லாயிரம் ஆண்டுகளாக பரிணாம வளர்ச்சி பெற்ற பறவை, இறக்கைகள் பெற்றிருந்தும் எச்சரிக்கை உணர்வுகளற்று இருந்ததன் காரணம் புரியவில்லை. மனிதர்கள் குச்சியால் தாக்கவரும் போதும் பறந்து போகாமல்  நினைத்தது அதிகப்படியான தன்னம்பிக்கையின் அடையாளமா அல்லது முட்டாள் தனத்தின் அடையாளமா? மனிதர்களுக்கு முன்பாக இந்த பறவையை இரையாக்கி கொல்லும் உயிர்கள் இருந்தனவா எனது தெரியவில்லை. மிகவும் அழகான இந்த பறவை முற்றிலும் அழிந்து போனது கியூபாவின் பேரிழப்பு.








Jun 15, 2020

Thylacine (தைலசீன்) - ஆஸ்திரேலியாவின் இழப்பு [Australia]


ஆஸ்திரேலியாவில் மனிதர்கள் குடியேறி 45000 ஆண்டுகள் ஆகிறது. ஆஸ்திரேலியாவுடன் இணைந்திருந்த தாஸ்மேனியா 12000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் உயர்ந்ததான் காரணமாக பிரிந்து போனது. தாஸ்மேனியா  பிரிந்த போது அங்கு வாழ்ந்த மனிதர்கள் பிறகு தாஸ்மேனியா தீவைவிட்டு வெளியேறாமல் அங்கேயே வாழ்ந்துவந்தனர். அவ்வாறு அங்கு வாழ்ந்த மனிதர்களோடு தாஸ்மேனியா தீவில் வாழ்ந்த மற்றுமொரு உயிரினம் தைலசீன் (Thylacine).

19-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் தாஸ்மேனியாவில் நுழையும் வரை அங்கே வாழ்ந்த மனிதர்கள் உலகின் மற்ற பகுதிகளை அறிந்திருக்கவில்லை. ஆங்கிலேயர்கள் நுழைந்த பிறகு அங்கிருந்த பழங்குடியின மக்கள் அழிக்கப்பட்டனர். அந்த மனிதர்களோடு அந்த தீவில் வாழ்ந்து வந்த தைலசீன் என்ற விலங்கும் அழிந்து போனது. ஆங்கிலேயர்கள் இந்த விலங்கின் மேல் இருந்த வரிகள் காரணமாகவோ என்னவோ "Tasmanian Tiger" என பெயர் வைத்தார்கள். உருவத்தின் அடிப்படையில் ஆங்கிலேயர்கள் விலங்குகளுக்கு இப்படி பெயர் வைப்பதுபுதிதல்ல. நல்ல வேலையாக வரிக்குதிரைகளுக்கு "African Tiger" என பெயர் வைக்கவில்லை. 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தைலசீன் முற்றிலும் அற்றுப்போனது. பல லட்சம் ஆண்டுகளாக பரிணமித்த ஒரு உயிரினம் மனிதர்களின் வரவால் அற்றுப்போனது (Extinct). 


Taxidermy Specimen Thylacine at Zürich Zoological Museum



Jun 11, 2020

Huia - நியூசிலாந்தின் இழப்பு [Newzealand]


ஒரு சில பறவை இனங்களில் ஆண் மற்றும் பெண் பறவைகளை தோற்றத்தின் மூலம் எளிதில் வேறுபடுத்தி அறிந்து கொள்ள முடியும். உதாரணமாக மயில் நாம் எல்லோரும் அறிந்ததே. அது போல பைங்கிளிகளில் கழுத்தின் உள்ள செந்நிற வளையம் ஆணா அல்லது பெண்ணா என உணர்த்திவிடும். சிட்டுக்குருவிகளை கூட இவ்வாறு அறிந்து கொள்ள முடியும். 

"Huia" என்ற இந்த பறவை இனம் மட்டும் மற்ற எல்லா பறவை இனங்களில் இருந்து வேறுபட்டு உள்ளது. பெண் பறவையின் அலகு நீண்டதாகவும், ஆண் பறவையின் அலகு சிறியதாகவும் உள்ளது. நியூசிலாந்தில் வாழ்ந்த இந்த பறவை இனம் தற்போது அற்றுப்போய்விட்டது (Extinct). 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே இந்த பறவையினம் முற்றிலும் அழிந்து போக மனிதர்களே காரணமாக இருந்தார்கள்.

Taxidermy Specimen of Huia pair at Zürich Zoological Museum


Huia போலவே அலகில் வேறுபாடு கொண்ட பறவை இனம் வேறு எதுவும் இருக்கிறதா எனது தெரியவில்லை. பரிணாம வளர்ச்சியில் இந்த குறிப்பிட்ட பறவை இனத்திற்கு மட்டும் ஏன் பெண் பறவையின் அலகு ஆண் பறவையின் அலகை விட நீண்டிருக்க வேண்டும் ? என்ன காரணம் இருந்தாலும் ஏன் மற்ற பறவை இனங்களில் அது போல பரிணாம வளர்ச்சி நிகழவில்லை?

விடை தெரிந்தவர்கள் உங்கள் பதிலை பதிவிடுங்கள்.






Jun 7, 2020

Moa | Elephant Bird | Dodo - பறக்க இயலா பறவைகள்


இந்த உலகில் எப்போதெல்லாம் மனிதன் புதிய தீவுகளில் காலடி எடுத்துவைத்தானோ அப்போதெல்லாம் அங்கிருந்த சூழலை மாற்றி பரிணாம வளர்ச்சியில் பல மில்லியன் ஆண்டுகளாக உருவான உயிரினங்களை அழித்து அற்றுப்போகச் செய்திருக்கிறான். மனிதனின் வரவை எதிர்பாராத பறக்க இயலாத பறவைகள் பலவும் இதனால் அற்றுப்போயின (Extinct). மனிதனிடம் இருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வுகள்  இல்லாத இந்த பறவைகள், ஆயுதம் ஏந்திய மனிதர்களிடம் எளிதில் மாட்டிக் கொண்டன. இவ்வாறு அற்றுப் போன பறவைகளில் முக்கியமானவை நியூசிலாந்து தீவுகளில் வாழ்ந்த Moa, மடகாஸ்கரில் வாழ்ந்த Elephant Bird, மொறீசியஸில் வாழ்ந்த Dodo ஆகியன. 

Dodo (Mauritius) - Taxidermy Display (London Natural History Museum)

Great Indian Bustard (India) - Taxidermy Display (London Natural History Museum)



பறக்க இயலாத இந்த பறவைகள் அந்தந்த தீவுகளில் ஓரிட வாழ்விகளாக (Endemic) வாழ்ந்து வந்தன. மனித குடியேறிய பிறகு அவனால் அறிமுகப்படுத்தப்பட்ட பூனை போன்ற மற்ற விலங்குகளும் தரையில் முட்டையிடும் இந்த பறவைகளின் அழிவுக்கு காரணமாக அமைந்தன. காட்டுயிர் பற்றி மனிதன் பேச தொடங்கிய பிறகும் பல பறவைகள் இன்றும் அழிவை நோக்கி சென்றுகொண்டே உள்ளன. தரையில் முட்டையிடும் கான மயிலை காக்க வேண்டுமெனில் நாம் "Dodo"-விடம் இருந்து பாடம் கற்றிருக்க வேண்டும். வேகமாக அருகிவரும் கான மயில்களை நம்மால் காப்பாற்ற முடியுமெனில், அது அடுத்த தலைமுறைக்கு நாம் கொடுக்கும் நம்பிக்கை மட்டுமல்ல. நம் முன்னோர்கள் செய்த தவறுகளில் இருந்து நாம் கற்றுக்கொண்ட பாடமாகவும் இருக்கும்.