Jun 5, 2017

நீங்கள் கடந்து போன பாதையில் என்ன நடக்கிறது ?

கோடை விடுமுறையில் சுற்றுலா என்றாலே அது பெரும்பாலும் மலைப்பகுதிளாகத்தான் இருக்கிறது. கொடைக்கானல், ஊட்டி, ஏற்காடு, மூனாறு, வால்பாறை என செல்லும் நாம், நம் கடந்து போன பாதையில் என்ன நடக்கிறது என்பதை அறிவதும் அவசியம் இல்லையா? சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் இது போன்ற வனப்பகுதிக்குள் செல்வதால் என்னென்ன சிக்கல்கள் ஏற்படுகின்றன, இதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதையும் யோசிக்க வேண்டும்.

ஞெகிழிப் பைகள் 

சுற்றுலாப் பயணிகளால் தூக்கி எறியப்படும் ஞெகிழிப் பைகள் காடு முழுவதும் கொட்டிக்கிடக்கிறது. அடர்ந்த வனப்பகுதிக்குள் கூட ஞெகிழிப் பைகளை காண முடிகிறது. ஞெகிழிப் பைகளால் மண் வளம் கெடுவதோடு அவற்றை உண்டு யானைகள் உள்ளிட்ட விலங்குகள் தொடர்ந்து இறக்கின்றன.






பலியாகும் உயிர்கள்

வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்கும் விலங்குகள் கணக்கில் அடங்காதவை. பாம்புகள், தவளைகள் உள்ளிட்ட ஊர்வன மற்றும் இருவாழ்விகள் இதனால் அதிக அளவில் இரவு நேரங்களில்  உயிர் இழக்கின்றன. சாலை ஓரங்களில் நடந்து சென்றால் ஏராளமான பறவைகள் அடிபட்டு உயிர் இழந்திருப்பது தெரியும். குரங்குகள், மான்கள் மட்டுமல்லாது, சிறுத்தைகள், புலிகள் யானைகள் கூட சாலைகளில் அடிபட்டு உயிர் இழப்பது தொடர்ந்து நடக்கிறது.



காட்டுத்தீ


கவனக்குறைவோடு எந்த அக்கறையும் இல்லாமல் தூக்கி எரியும் சிகரட் துண்டுகள் காட்டையே எரிக்கின்றது.

ஒலிப்பான்கள்

கட்டுப்பாடின்றி பயன்படுத்தப்படும் அதிக டெசிபல் ஒலிப்பான்கள் காட்டின் அமைதியான சூழலை குலைக்கிறது. இது காட்டில் வாழும் உயிர்களுக்கு இடையூறாக இருக்கிறது.

உணவுக் குப்பைகள்

சாலை ஓரங்களில் அமர்ந்து உண்டுவிட்டு தூக்கி எறியப்படும் உணவுப் பொருட்களாலும், வன விலங்குகளுக்கு நேரடியாக உணவு தருவதன் மூலமாகவும், காட்டுயிர்கள் பாதிக்கப்படுகின்றன. காடுகளில் உணவை பெற வேண்டிய காட்டுயிர்கள் மனிதர்களால் தூக்கி எறியப்படும் இந்த உணவுகளை உண்டு சூழலில் அதன் பங்கை செய்ய முடியாமல் போகிறது. சில நேரங்களில் வாகனங்களில் அடிபட்டு உயிர் இழக்கவும் நேரிடுகிறது.



மனிதர்கள் நுழையாதவரை காடுகள் நன்றாகத்தான் இருந்தது. சாலை ஓரங்களில் உடைந்து கிடக்கும் மது பாட்டில்களை பார்க்கும் போதெல்லாம், காடுகளின் எதிர்காலம் நொறுங்கிப்போவதை உணர முடிகிறது. 



Jun 4, 2017

ஜூன்- 5 : #சுற்றுச்சூழல் தினம்

ஜூன்- 5 : #சுற்றுச்சூழல் தினம்: உங்கள் அடுத்த தலைமுறைக்காக இந்த பூமியின் வாழ்நாளை நீட்டிக்க விரும்பினால், உங்களால் இயன்ற சிறு முயற்சிகளை செய்யலாம்.

#1 : மின்சிக்கனம், தண்ணீரை வீணாக்காமல் இருத்தல், எரிபொருள் சிக்கனம், உணவை வீணாக்காமல் இருத்தல் மற்றும் நுகர்வுக் கலாச்சாரத்தில் இருந்து விடுபடுதல் போன்றவற்றை ஒவ்வொருவரும் பின்பற்றினால் நம் அடுத்த தலைமுறைக்காக இந்த பூமியின் வாழ்நாளை இன்னும் சிறிது காலம் நீட்டிக்கலாம்.

#2 : பொது போக்குவரத்தை பயன்படுத்துதல். ஒரே இடத்திற்கு செல்பவர்கள் வாகனத்தை பகிர்ந்து கொள்ளுதல். சிக்னலில் காத்திருக்கும் போது வாகனத்தை நிறுத்தி இயக்காதிருத்தல்.

#3 : கடைக்குச் செல்லும்போது வீட்டில் இருந்து பை எடுத்துச் செல்லும் பழக்கம் பெரும்பாலானோரிடம் இல்லை. பிளாஸ்டிக் பைகளை தவிர்ப்போம். வீட்டில் இருந்தே பைகளை எடுத்துச் செல்வோம்.

#4 : வீட்டிலேயே மக்கும் பொருட்களை கொண்டு இயற்கை உரம் தயாரிப்பதும், அவற்றை பயன்படுத்தி செடிகள் வளர்ப்பதும் அவசியம். இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பொருட்களுக்கு முன்னுரிமை தருவது சூழலை காக்க மறைமுகமாக உதவும்.

#5 : செடி வளர்க்கும் ஆர்வத்தையும், பறவைகளை பார்க்கும் ஆர்வத்தையும் குழந்தைகளிடம் விதைத்தல். இயற்கையை நேசிக்கவும் அதை பாதுகாக்கவும் கற்றுக்கொடுத்தல்.

#6 : புதிதாக மரக்கன்றுகள் நடுவதைவிடவும் மிக முக்கியமானது இருக்கும் மரங்களை பாதுகாத்தல். நம்முடைய சுற்றுப்புறத்தில் இருக்கும் மரங்கள் வெட்டப்படும் போது கேள்வி எழுப்புதல் ஒவ்வொருவரின் கடமை.

#7 : பட்டாசு வெடிப்பதை தவிர்ப்பதன் மூலம், காற்று மாசுபடுவதை தவிர்க்கலாம். ஒலி மாசையும் (Noise Pollution) தவிர்க்கலாம். காகிதக் குப்பைகளையும் தவிர்க்கலாம்.

#8 : வாகனங்களில் செல்லும் போது தேவையற்ற முறையில் ஒலிப்பான்கள் (Horn) பயன்படுத்துவதை குறைக்கலாம். காற்று மாசுபடுவதை போலவே ஒலி மாசுவும் (Noise Pollution) ஆபத்தானது. மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடியது. சிக்னலில் பச்சை விளக்கிற்காக காத்திருக்கும் போது Horn பயன்படுத்துவது முட்டாள்தனம்.

#9 : உணவகங்களுக்கு செல்லும்போதும் பயணங்களின் போதும், தண்ணீரை வீட்டில் இருந்தே எடுத்துச் செல்லலாம். பிளாஸ்டிக் தண்ணீர் புட்டிகள் மண்ணில் விழுவது குறையும்.

#10 : குரோட்டன்ஸ் போன்ற அழகு (?) தாவரங்களுக்கு பதிலாக நாட்டுச்செடிகளை வீட்டில் வளர்க்கலாம். அவற்றில் இருக்கும் புழு பூச்சிகள் பறவைகளுக்கு உணவாகும். பூக்கள் வண்ணத்துப்பூச்சிகளை கவர்ந்திழுக்கும். .