Feb 27, 2017

நாம் ஏன் யானைகளை நேசிக்கிறோம் ?

ஒரு தேசத்தின் வளத்தை அந்த தேசத்தில் வாழும் உயிரினங்களை வைத்து அறிந்து கொள்ளலாம். இந்தியாவை போல பல்லுயிர் தன்மை கொண்ட ஒரு தேசத்தை காண்பது இயலாது. ஒவ்வொரு உயிரினமும் அது வாழ்வதற்கென்று ஒரு சூழல் வேண்டும். அந்த சூழலுக்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்துக் கொண்டு பரிணாம வளர்ச்சி அடைந்து வாழும் எண்ணற்ற உயிரினங்கள் கொண்ட நாடு இந்தியா. ஒவ்வொரு உயிரினமும் சூழலை சமநிலையில் வைக்கவும் இயற்கையை காக்கவும் உதவி  புரிகின்றன. ஒவ்வொரு உயிருக்கும் சூழலை முறையாக கட்டமைப்பதில் ஒரு பங்கு உண்டு. இந்த கட்டமைப்பு தான், இன்று வரை இந்த உலகை இயக்கிக் கொண்டிருக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை இந்த கட்டமைப்பு நல்ல நிலையில் இல்லை. மனிதனின் சுய தேவைகளுக்காக இந்த கட்டமைப்பு வேகமாக உடைக்கப்படுகிறது. 

உலகில் இரண்டு கண்டங்களில் மட்டுமே யானைகள் வாழ்கின்றன.  ஆசியாவை பொறுத்தவரை யானைகள் அதிகம் இருப்பது இந்தியாவில் தான். யானைகள் பொதுவாக ஒரே இடத்தில வாழ்வதில்லை. அவற்றுக்கென வலசை பாதை உண்டு. அந்த பாதையை தான் அவை தொடர்ந்து பயன்படுத்துகின்றன. தனது குட்டிகளுக்கும் போதிக்கிறது. தற்போதைய பிரச்சினையே இந்த வலசை பாதைகளை அது இழந்து வருவது தான். இந்த பாதைகள் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்ப்டுமானால் யானைகள் உயிர் வாழ்வதே கேள்விக் குறியாகிவிடும். யானைகள் இல்லாமல் நம் காடுகள் கிடையாது. காடுகள் இல்லாமல் மழை கிடையாது. மழையின்றி வேளாண்மை கிடையாது.

ஈஷாவின் செயல்பாடுகள் யானைகளை நிச்சயம் பாதிக்கக்கூடியது. பல நேரங்களில் காடுகளை ஒட்டிய பகுதிகளில் நடைபெறும் அத்துமீறல்களே கூட விலங்குகளுக்கு பாதகமாக முடியும். முக்கியமாக ஒலி மாசு (NOISE POLLUTION). மனிதர்களால் செயற்கையாக உருவாக்கப்படும் சத்தம் விலங்குகள் மற்றும் பறவைகள், தங்களிடையே தகவல் பரிமாற்றத்திற்கு உருவாக்கும் சத்தங்களை விட அதிகமாக இருப்பதால் அவை பாதிக்கின்றன. கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். யானைகள் வந்து செல்லும் பாதையில் ட்ரம்ஸ் மணி தனது அதிரடி இசையை வெளிப்படுத்துகிறார். இதை யானைகள் விரும்புமா?  யானைகளுக்கு இது அவசியமா? ஈஷா மட்டுமே இங்கே பிரச்சனை இல்லை. ஈஷாவை போல எண்ணற்ற  நிறுவனங்கள் காடுகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கின்றன. வலசை பாதை தொலைத்த யானைகள் வாகனங்களிலும் ரயில்களிலும் அடிபட்டு சாகின்றன. இதற்கெல்லாம் யார் காரணம்? என்ன தீர்வு? அரசின் நடவடிக்கைகள் என்ன? சென்ற ஆண்டு மட்டும் 86 யானைகள் தமிழகத்தில் இறந்துவிட்டன. இந்த ஆண்டும் இது தொடந்து கொண்டே இருக்கிறது. காடுகளுக்குள் போடப்படும் குப்பைகளை உண்ணும் யானைகள் மற்றும்  அணைகள் கட்டியதால் ஆற்றில் நீரோட்டம் இன்றி தேங்கி இருக்கும் நீரை புழுக்களோடு குடிக்கும் யானைகள் நோய் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. மனிதர்களால் உண்டாக்கப்படும் காட்டுத்தீ, புதிய புதிய சாலைகள், மின் வேலிகள், அகழிகள், ஒலி மாசு, என பல காரணங்களால் யானைகள் துரத்தப்படுகின்றன.



யானைகளின் பிரம்மாண்டத்தை ரசிக்காதவர்கள் யாரும் இல்லை. யானைகளை பார்க்கும் போதெல்லாம் நமக்குள் ஒரு புத்துணர்ச்சி உருவாகிறதே ஏன்? இந்திய கலாச்சாரத்தின் ஒரு அங்கமாக யானைகள் இருக்கின்றனவே எப்படி? யானைகளை இழப்பது, இயற்கையை இழப்பது போல் இல்லையா? பரிணாம வளர்ச்சியில் உருவான இந்தனை பெரிய உயிரினம் அமெரிக்காவிலோ ஐரோப்பாவிலோ இல்லை. நம்மூரில் இருக்கின்றன. பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நம்முடையது இல்லையா? "யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்" என்பது மனித சுயநலத்தில் உண்டான பழமொழி. யானைகளை பணத்தால் மதிப்பிட முடியாது. யானைகளின் சாணத்தில் உள்ள உப்பை உறிஞ்சி வாழும் வண்ணத்துப்பூச்சிகள் மகரந்த சேர்கை செய்வதன் மூலம் புதிய பழங்களை உருவாக்குகின்றன. அந்த பழத்தை உண்ணும் யானை முளைப்பு தன்மை கொண்ட விதைகளை உருவாக்குகிறது. இதையெல்லாம் மனிதர்களால் செய்து கொண்டிருக்க முடியாது. இந்த பூமியில் மனிதர்களுக்கு வாழும் உரிமையை விட யானைகளுக்கு கொஞ்சம் கூடுதலாகவே இருக்கிறது. இதை நம் உணர மறுத்தால் இயற்கை உணர்த்தும்.




*யானைகளின் படங்களை பந்திபூர் மற்றும் நாகரஹோலே காடுகளில் எடுத்தேன். இது கீற்றில் வெளியான கட்டுரை.

Feb 20, 2017

நதிகளை ஏன் இணைக்கக்கூடாது ?

நதி நீர் வீணாக கடலில் கலக்கிறது என்பதை பலமுறை செய்திகளில் கேட்டிருக்கிறோம். இங்கே "வீண்" என்று சொல்லப்படுவது சரிதானா? நதி நீர் கடலில் கலப்பது என்பது இயற்கை சுழற்சியின் ஒரு பகுதி. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக இது நடந்து கொண்டே இருந்தது. கடந்த இரண்டு நூற்றாண்டில் ஏற்பட்ட மாற்றங்களால் நதி என்பது தேக்கிவைக்க்பட வேண்டிய ஒன்று என நம் பொதுபுத்தியில் பொதிந்து போயிற்று. நதி என்பது மனித பயன்பாட்டுக்கு மட்டுமே என்ற சுயநலச் சிந்தனை நம் எல்லோருக்கும் மீண்டும் மீண்டும் ஊடகங்களால் போதிக்கபடுகிறது.

நதிகள் இணைப்பை பற்றி பேசும் முன்னர் நதிகளை பற்றிய புரிதல் நமக்கு அவசியம். நதிகளுக்கு உயிர் கிடையாது. ஆனால் நதிகள் உயிர்ப்போடு இருப்பது அவசியம். இந்தியாவில் ஓடும் நதிகளில் முக்கியமான நதிகளை இரண்டாக பிரிக்கலாம். மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகும் நதிகள் மற்றும் இமயமலைத் தொடரில் உருவாகும் நதிகள். இமயமலையில் உருவாகும் நதிகள் பெரும்பாலும் பனி உருகியே உருவாகிறது. ஆனால் மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகும் நதிகள் முற்றிலும் வேறானவை.

மேற்குத் தொடர்ச்சி மலையில் பொழியும் தென் மேற்கு பருவமழை அந்த மலைத் தொடரின் உச்சியில் உள்ள சோலைக்காடுகளால் சேமிக்கப்படுகிறது. சோலைக்காடுகளில் உள்ள புல்வெளிகளால் இந்த மழை நீர் உறிஞ்சப்பட்டு பஞ்சில் உள்ள நீர் போல சேமிக்கப்படும். பிறகு இந்த நீரானது மெல்ல மெல்ல வெளிவரும். இதுவே ஓடைகளாகவும் அவை இணைந்து நதிகளாகவும் மாறும். கோடை காலங்களிலும் இப்படி சேமிக்கப்படும் நீர் வெளிவந்து கொண்டே இருக்கும். எனவே ஆற்றில் எப்போதும் நீரோட்டம் இருந்து கொண்டே இருக்கும். இந்த சுழற்சியால் தான் பல்வேறு உயிரினங்களும் தென்னிந்தியாவில் பரிணாம வளர்ச்சி பெற்று வாழ்ந்து வந்தன. மனிதனும் இதனால் பயனடைந்து வாழ்ந்து வந்தான். எனவே மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகும் நதிகளுக்கென்று ஒரு தனித் தன்மை உண்டு. ஒவ்வொரு நதிகளிலும் எண்ணற்ற உயிரினங்கள் வாழ்கின்றன. காவிரியில் வாழும் மீன்கள் எல்லாம் கங்கையில் வாழ்வதில்லை. 

முதலில் நம் சுய நலத்திற்காக அணைகளை கட்டினோம். நதிகளின் உயிரோட்டத்தை தடுத்து நிறுத்தினோம். காடுகளில் உள்ள நதிகள் கூட வறண்டு போனது. விலகினங்கள் யாவும் தேங்கிய நீரில் நீர் அருந்துகின்றன. இது நோய்களை ஏற்படுத்த வழிவகுக்கிறது. தமிழக காடுகளில் அதிக அளவு யானைகள் இறந்து போவது குறிப்பிடத்தக்கது. நதிகள் யாவும் வறண்டு போனது யாரால்? அளவுக்கு மீறி மணல் அள்ளப்படுவது யாரால்? நம்முடைய நீர் நிலைகளை யார் ஆக்கிரமித்தார்கள்? ஏரிகள் குளங்கள் எல்லாம் என்ன ஆயின? நம்மிடம் இருந்த இயற்கை வளங்களை தொலைத்துவிட்டு நதிகளை இணைப்பது யாருக்காக? நதிகளை இணைத்தால் சுற்றுச் சூழலில் மிக மோசமான விளைவுகள் ஏற்படும். 


படம் : சூழலியலாளர் - திரு.பிரவீன் குமார் 




சாதாரண குளங்களையும் குட்டைகளையும் நம்மால் பாதுகாக்க முடியாத போது நதிகளை இணைத்து என்ன செய்ய போகிறோம்? அண்டை மாநிலங்களை குறை சொல்லும் நாம் நம்முடைய நதிகளை என்ன செய்தோம்? காவிரியில் கலக்கும் துணை நதிகளான நொய்யல், பவானி, அமராவதி ஆகிய நதிகளின் இன்றைய நிலை என்ன ? மற்ற மாநிலங்களை குறை சொல்வது நமக்கு எளிதான வழி. நம்முடைய குறைகளை நாம் மறைத்துக் கொள்ள இது வசதியாக இருக்கிறது. ஆனால் இயற்கையும் காலமும் நமக்கு பதில் சொல்லும். அது கற்றுக் கொடுக்கபோகும் பாடம் வரலாற்றில் இருக்கும். 

*கீற்றில் வெளியான கட்டுரை.