Mar 14, 2016

மார்ச் 20 : சிட்டுக்குருவிகள் தினம். என்ன செய்யலாம்?


நான் எப்போது பள்ளிகளில் பேசச் சென்றாலும் மாணவர்களிடம் ஒரு முக்கியமான கேள்வியை கேட்பேன். கடைசியாக நீங்கள் எப்போது சிட்டுக் குருவிகளை பார்த்தீர்கள் எனக் கேட்பேன். ஒரு சிலர் நினைவில் இருக்கும் பதிலை சொல்வார்கள். ஒரு சிலருக்கு எப்போது பார்த்தோம் என்பதே மறந்து போயிருக்கும். அதே போல உங்களுக்கு தெரிந்த பறவைகளின் பெயரைச் சொல்லுங்கள் எனக் கேட்டால் பெரும்பாலான மாணவர்கள் சிட்டுக் குருவியை குறிப்பிடுவார்கள். மனிதர்களுக்கு மிக நெருக்கமான பறவைகளில் ஒன்று சிட்டுக் குருவிகள். ஆனால் இந்த சிட்டுக் குருவிகள் அழிந்து வருவது பற்றிய செய்திகளைத்தான் நாம் சமீபத்தில் படிக்கிறோம். அவை ஏன் அழிந்து வருகின்றன எனத் தெரியுமா? அவற்றை எப்படி காப்பாற்றுவது? அதனால் என்ன பயன் எனத் தெரியுமா?




சிட்டுக்குருவிகள் அழிய முக்கிய காரணம் அது வாழ்வதற்கான சூழல் இல்லாமல் போய்விட்டது. முன்பெல்லாம் கூரை வீடுகளும் ஓட்டு வீடுகளும் நிறைய இருந்தன. சிட்டுக் குருவிகள் அங்கேயே கூட்டை அமைத்து முட்டையிட்டு வாழ்ந்தன. ஆனால் இன்று அவற்றால் கூடு அமைக்க முடியவில்லை. வேளாண்மையில் பயன்படுத்தப்படும் பூச்சிக் கொல்லிகள் சிட்டுக் குருவிகளை அதிகமாக பாதித்தன. எனவே சிட்டுக் குருவிகள் அழியத்தொடங்கின.





ஆனால் இப்போதும் நம்மால் சிட்டுக் குருவிகளை மிக சுலபமாக காப்பாற்ற முடியும். படத்தில் உள்ளது போல சிட்டுக் குருவிகளுக்கு கூடுகள் அமைத்து தரலாம். சிறிய மண் சட்டியோ அல்லது அட்டை பெட்டியோ கூட போதுமானது. ஆனால் மழையில் நனைந்துவிடாதபடி இருக்க வேண்டும். மேலும் அணில்களால் நெருங்க முடியாதபடி அமைத்து விட்டால் போதுமானது. மேலும், நாட்டுக் கம்பு மாதிரியான சிறிய தானியங்களை உணவாக வைக்கலாம். சில நேரங்களில் அவை அந்த கூட்டை தெரிந்து கொண்டு அங்கே தங்குவதற்கு ஆறு மாதங்கள் கூட ஆகலாம். முதலில் அவை நீங்கள் வைக்கும் தானியங்களை தேடி வரும். பின்பு தினசரி வந்து பழகும். பிறகு உங்கள் வீட்டின் அருகிலேயே சுற்றிக் கொண்டிருக்கும். முட்டையிடும் காலத்தில் நீங்கள் வைத்த சட்டியிலோ அல்லது அட்டை பெட்டியிலோ முட்டை வைக்கலாமா என வந்து சோதித்து பார்க்கும். பிறகு தங்கத் தொடங்கும். ஒரு முறை தங்கி பழகிவிட்டால் மீண்டும் மீண்டும் வரும். மற்ற குருவிகளும் இதை பார்த்து அங்கேயே கூடு அமைக்கும்.






சிட்டுக்குருவிகளின் முக்கியமான உணவே புழுக்களும் பூச்சிகளும் தான். இந்த புழுக்களும் பூச்சிகளும் அவற்றுக்கு எப்படி கிடைக்கும்? செடிகளில், மரங்களில், மாடு குதிரை போன்ற விலங்குகளின் சாணத்தில் இருந்து தான் கிடைக்கும். குதிரை வண்டிகள் மறைந்து ஆட்டோக்கள் வந்த பிறகு குதிரைகளின் பயன்பாடு குறைந்துவிட்டது. நம்முடைய பாரம்பரிய நாட்டு மாடுகள் மறையத் தொடங்கிவ்ட்டன. மேலும் நம் வீடுகளில் வளர்க்கும் செடிகள் யாவும் அழகுக்கான குரோட்டன்ஸ் செடிகளாக மாறிவிட்டன. இந்த செடிகளில் புழுக்கள் வருவதேயில்லை. கிட்டதட்ட அவை பிளாஸ்டிக் செடிகள் போலத் தான் இருக்கின்றன. இப்படியான சூழலில் சிட்டுக்குருவிகளுக்கு எப்படி உணவு கிடைக்கும்.





நம்முடைய நாட்டுச் செடி கொடிகளை வீடுகளை சுற்றி நடலாம். மல்லிகை கொடியில் பூக்கும் பூக்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு பயன்படும். அதில் உள்ள பூச்சிகளை சிட்டுக்குருவிகள் உண்டு வாழும். மேலும் இந்த கொடிகளில் சின்னான் குருவிகள் கூடு கட்டி வாழும். அவரை, புடலை போன்ற கொடிகளில் வீட்டுக்கு தேவையான காய்கறிகளை பெறலாம். அதில் உள்ள பூச்சிகள் குருவிகளுக்கு உணவாகும். இது மாதிரியான நாட்டுச் செடிகள் நமக்கும் பறவைகளுக்கும் சேர்ந்து பயன்படும். பூச்சிகளை குருவிகள் தின்பதால் நாம் பூச்சிக் கொல்லி ரசாயனங்கள் தெளிக்க வேண்டியதில்லை. எனவே சுத்தமான சுகாதரமான காய்களை நம் வீட்டிலேயே உற்பத்தி செய்ய முடியும். சிட்டுக்குருவியால் நமக்கு எவ்வளவு பயன்கள் பாருங்கள்.



இது போலவே ஒவ்வொரு பறவையும் நமக்கு ஏதோ ஒரு வகையில் தொடர்ந்து உதவி செய்கின்றன. ஆனால் நாம் அவற்றுக்கு உதவியாக இருக்கிறோமா? உதவி செய்யவில்லை என்றாலும் பரவயில்லை. தொல்லை செய்யாமலாவது இருக்கிறோமா? மரங்கள் வெட்டப்படுவதும் நீர் நிலைகள் மாசுபடுவதும் பறவைகளை எப்படியெல்லாம் பாதிக்கின்றன. இப்போதும் சில சிறுவர்கள் உண்டி வில் மூலமாக பறவைகளை குறி வைத்து அடித்துக் கொல்வதை பார்க்க முடிகிறது. இது தவறு அல்லவா? தீபாவளியின் போது பட்டாசு வெடித்து ஆனந்தப்படுகிறோம். பறவைகளால் பட்டாசு சத்தத்தை தாங்கிக் கொள்ள முடியுமா? நம்முடைய பல செயல்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ பறவைகளை பாதிக்கின்றன. இவற்றிலிருந்து பறவைகளை எப்படி காப்பாற்றப்போகிறோம்?




Mar 12, 2016

யாருடைய எலிகள் நாம்? - சமஸ்


நாம் வாசிக்கும் எல்லா புத்தகங்களும் நம் மனசாட்சியை கேள்வி கேட்பதில்லை. ஆனால் மிகவும் அபூர்வமாக இந்த புத்தகம் ஒவ்வொரு இந்திய குடிமகனையும் கேள்வி கேட்கிறது. அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் மட்டுமே தவறு செய்வதாக சித்தரிக்கப்படும் நம்முடைய சூழலில் இருந்துகொண்டு, இந்த புத்தகத்தை எழுதியதற்காகவே சமஸை வாழ்த்தலாம். இந்தியாவின், தமிழ்நாட்டின் பெரும்பாலான பிரச்சனைகளையும் கையில் எடுத்து விரிவாகவும் தெளிவாகவும் விவாதித்திருக்கிறார் சமஸ். பல கட்டுரைகளிலும் பிரச்சனைக்கான தீர்வை முன்வைத்த விதம் பாரட்டப்பட வேண்டிய ஒன்று. வரலாற்றிலிருந்து செய்திகளை எடுத்து நிகழ்காலத்தின் பிரச்சனைகளோடு ஒப்பிட்டு, எதிர்காலத்தின் தேவைக்கான தீர்வை முன்வைக்கிறது இந்த புத்தகம். காந்தியந்தின் உயிர்ப்பை, அறம் சார்ந்த அரசியலின் அவசியத்தை உங்கள் எழுத்துக்களில் உணர முடிகிறது சமஸ்.



தவறு செய்வதை பெருமையாகவும், அதிலிருந்து தப்புவதை கௌரவமாகவும் நினைக்கும் அரசியவாதிகள் ஒரு பக்கம், அதை கொண்டாடும் தொண்டர்கள் ஒரு பக்கம், இது எதையும் கண்டும் காணதது போல இருக்கப் பழகி விட்ட மக்களையும் ஒரு தேசம் ஒருங்கே பெற்றிருப்பது எதிர்காலதிற்கு நல்லதல்ல. இந்த புத்தகம் மக்களுக்கான விழிப்புணர்வு. இதை வாசித்து அரசியல்வாதிகள் திருந்திவிடுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கில்லை. ஆனால் நிச்சயம் மக்களுடைய மாற்று சிந்தனைக்கு இந்த புத்தகம் வித்தாக அமையும் என்றே தோன்றுகிறது. கல்வி, மருத்துவம், வேளாண்மை, சுற்றுச் சூழல், வேலைவாய்ப்பு, உலகமயமாக்கல், வெளிநாட்டு உறவு, எல்லைப் பிரச்சனைகள், சர்வதேச சூழல், ஈழம், சாதி மதம் சார்ந்த பிரச்சனைகள், காடுகள் அழிக்கப்படுவது, வன விலங்குகள் வேட்டை, ஊடக அறம் என பல தளங்களிலும் புள்ளி விவரங்களோடு பேசும் இந்த நூல் காலத்திற்கும் நிலைத்து நிற்கும். 

இந்தியாவின் எல்லா முக்கியமான பிரச்சனைகளையும் விரிவாக விவாதிக்கும் சமஸ், தன்னுடைய கவலைகளை நேரடியாக வெளிப்படுத்தாமல் வாசகர்களின் சிந்தனைக்கே விட்டுவிடுகிறார். பிரச்சனைகளையும் அதற்கு காரணமானவர்களையும் முன்வைத்து வாசகர்களின் முடிவுக்கே விட்டுவிடுவது வரவேற்புக்குரியது. இந்த தேசம் குறித்து ஒவ்வொரு தனி மனிதனுக்கும் எண்ணற்ற ஆசைகளும் கனவுகளும் உண்டு. இருப்பினும் ஒவ்வொரு தனி மனிதனும் அவனால் இயன்ற தவறுகளை செய்து விட்டு விரல் நீட்டிக் கொண்டே இருக்கிறான். இது ஆள்பவர்கள் முதல் சாதாரண குடிமகன் வரை எல்லோரிடமும் இருக்கிறது. அறம் சார்ந்த வாழ்வின் நிலைப்பாடுகள் ஒவ்வொரு மனிதனுக்கும் வேறுபடுகிறதோ என்று கூடத் தோன்றுகிறது. ஆனாலும் மனசாட்சி என்பது எல்லோருக்கும் ஒன்று தானே. சட்டமன்றம் கேட்காத கேள்விகளை, நாடாளுமன்றம் கேட்காத கேள்விகளை, நீதி மன்றம் கேட்காத கேள்விகளை, நம் மனசாட்சியாவது கேட்கட்டும். அதற்கு இந்த நூல் ஒரு திறவுகோலாக இருக்கட்டும்.