தென்றல்


மாநகரம் பெற்றெடுத்த
நெரிசல்மிகு பேருந்துகள்

பேருந்தின் நேரிசலூடே
குழந்தையொன்று அழுகிறது

பெற்றெடுத்த தாயுமவள்
தென்றலைத்தான் தேடுகிறாள்

தென்றலின் திசை அறியா
அவனுமங்கே அமர்ந்திருந்தான்.

அடுக்குமாடி குடியிருப்பின்
அடர்த்தியான இல்லமொன்றில்

மின்சாரம் தடைபட்ட
பகல்பொழுது வேளைகளில்

நரைபழுத்த  கிழமொருவன்
தென்றலைத்தான் தேடுகிறான்

தென்றலின் திசை அறியா
அவனுமங்கே அமர்ந்திருந்தான்.

தன்மகனின் கைபிடித்து
காலாற  நடந்துசென்று

கடற்கரையில் காற்றுவாங்க
எத்தனிக்கும் தந்தையவன்

அனல்காற்றின் ஊடாக
தென்றலைத்தான் தேடுகிறான் 

தென்றலின் திசை அறியா
அவனுமங்கே அமர்ந்திருந்தான்.

நிலாச்சோறு ஊட்டுகையில்
தொழிற்சாலை கரும்புகையில்

நிலவின்முகம் மறையக்கண்டு
அழுதுவடியும் குழந்தையிடம்

பச்சைவயிறு பசியாற்ற
தென்றலைத்தான் தேடுகிறாள்

தென்றலின் திசை அறியா
அவனுமங்கே அமர்ந்திருந்தான்.

மொழியறியா தென்றலிடம்
கவிதை பேசி பயனில்லை.
நேரம்கடத்த  விரும்பவில்லை.

தென்றலை மீட்டெடுக்க
மரக்கன்றை நட்டுவைத்தான்.

அடுத்த தலைமுறைக்காகுமென்று
நீரூற்றி அவன் வளர்த்தான்.

அடர்ந்து வளர்ந்த மரநிழலில்
இளைப்பாறும் நேரமதில்
விரலிடுக்கின் வேர்வைகூட
துடைதேடுக்கும்,
அவன் வளர்த்த அன்பு மரம்.

நல்ல விலை போகுமென்று
அவன் மகனே வெட்டிவிட்டான்.

மிச்சமிருந்த பணத்திலொரு
பனையோலை வாங்கித்  தந்தான்.

பனையோலை படபடக்க
மணிக்கட்டு வலித்தபடி
தென்றலைத்தான் தேடுகிறான்... 

தென்றலின் திசை அறியா
அவனுமங்கே அமர்ந்திருந்தான்.
Post a Comment

0 Comments