கடந்த இருபது ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 2.5கோடியில் இருந்து 3.5 கோடியாக அதிகரித்திருக்கிறது. இதில் பழனி மலைத் தொடரில் உள்ள கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை ஆண்டுக்கு 1.6 கோடியாக இருக்கிறது. இத்தனை மக்களை உண்மையில் ஒரு மலைப்பகுதி தாங்குமா என்பது குறித்து சிந்திக்க வேண்டும். ஒவ்வொரு வருடமும் கூடிக்கொண்டே போகும் சுற்றுலாப்பயணிகளின் வருகையால் விடுதிகளின் எண்ணிக்கையும், உணவகங்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே போகிறது. புதிய புதிய சுற்றுலாத் தளங்கள் சுற்றுலாப்பயணிகளை கவர்வதற்காக உருவாக்கப்படுகின்றன.


இவ்வாறு செயற்கையாக உருவாக்கப்படும் சுற்றுலாத்தளங்களால் கூடுதல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஏற்கனவே மூச்சுத்திணறிக்கொண்டிருக்கும் கொடைக்கானல் கட்டுப்பாடின்றி அனுமதிக்கப்படும் வாகனங்களால் மேலும் பாதிப்படைகிறது. தொலை தூரத்தில் இருந்து வருபர்கள் கூட, வாகன நெரிசலால் நாள் முழுக்க சாலையிலேயே காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்படுகிறது. இதனை சமாளிக்க புதிய சாலைகளை அமைப்பதும், சாலைகளை விரிவுபடுத்துவதும் தொடர்ந்து நடக்கிறது. 


சாலைகளின் ஓரங்களில் அமர்ந்து மது அருந்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அவர்கள் தூக்கி எறியும் அத்தனை பிளாஸ்டிக் குப்பைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. 

கொடைக்கானல் செல்லும் எவரும் வெள்ளி அருவியை கடந்தே செல்ல வேண்டும். வெள்ளி அருவியின் அழகை ரசித்து படம் எடுத்துக்கொள்பவர்கள் அந்த பாலத்தின் மறுபுறத்தையும் கவனிக்க வேண்டும். வெள்ளி அருவி அருகில் இருக்கும் கடைகளின் வேண்டியதை வாங்கி உண்பவர்கள் அதன் மிச்சத்தை அங்கே தான் தூக்கி எறிந்துவிட்டு செல்கிறார்கள். கடைக்காரர்களும் தங்கள் மிச்சத்தை ஒரு பிளாஸ்டிக் பையில் கட்டி அங்கே தான் தூக்கி எறிவார்கள். தண்ணீர் மிகவும் மாசடைந்த நிலையில் ஓடையாகச் செல்வதை காணமுடியும். அந்த தண்ணீரைத்தான் அங்குள்ள குரங்குகள் அருந்துகின்றன.


இப்படியான சூழ்நிலையில் கொடைக்கானலில் உள்ள இளைஞர்கள் தாமாக முன்வந்து கொடைக்கானல்  நகரைச் சுற்றி அங்குள்ள குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் குப்பைகளை அகற்றுவது சாதாரண பணியல்ல. கடும் குளிரில், காடுகளில் அட்டை பூச்சிகளுக்கு நடுவே, காட்டுமாடுகளின் வாழ்விடங்களில் பெரும் சிரமங்களுக்கு இடையே இந்த சிறப்பான பணியினை செய்கிறார்கள். "சோலைக்குருவி" என்ற இந்த அமைப்பு எடுத்துவரும் இந்த முயற்சிக்கும் நாம் அருந்தும் தண்ணீருக்கும் நிறைய தொடர்பு உண்டு. 

தென்னிந்தியாவை பொறுத்தவரை ஆறுகள் பெரும்பாலும் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்தே உருவாகிறது. இந்த ஆறுகள் எப்படி உருவாகிறது என்ற புரிதல் நமக்கு மிகவும் அவசியம். எங்கோ மலையில் பெய்யும் நீர் அப்படியே ஓடி வருவதில்லை. மேற்கு தொடர்ச்சி மலையின் உச்சியில் உள்ள சோலைக்காடுகள், அங்கே உள்ள புல்வெளிகளில் வருடம் முழுவதும் பெய்யும் மழையை ஒரு பஞ்சை போல தன்னுள்ளே தக்க வைத்துக்கொள்கிறது. இது மெல்ல மெல்ல நீரை வெளியிடுவதால் ஆற்றில் எப்போதும் நீர் ஓடிக்கொண்டே இருக்கும். ஆனால் இந்த சோலைக்காடுகள் தற்போது பிளாஸ்டிக் பைகளாலும் குவளைகளாலும் மூச்சுத் திணறிக் கொண்டு இருக்கிறது.


மது அருந்திவிட்டு கண்ணாடி பாட்டில்களை உடைத்து இன்பம் காணும் மனிதர்களுக்கு இடையே இவர்கள் செய்யும் பணி கொடைக்கானலை குப்பைமேடாக மாற்றும் ஒவ்வொரு தனி மனிதருக்கும் குற்ற உணர்ச்சியை உருவாக்கும். கொடைக்கானல் நகரைச் சுற்றி பல இடங்களிலும் இவர்கள் தொடர்ந்து குப்பைகளை அகற்றி வருகிறார்கள். 

நாம் இவர்களுக்காக செய்ய வேண்டியதெல்லாம் ஒன்று தான். சுற்றுலாத்தளங்களை குப்பை மேடாக கருதாமல் கவனமாக செயல்பட்டு பழனி மலைத் தொடரின் பல்லுயிர் வளத்தை பாதுகாக்க உறுதியோடு துணை நிற்போம்.