May 24, 2020

மதுப்பிரியன்


மலைச் சாலையின் தடுப்புச் சுவரில் 
நின்றபடி ஓலமிடுகிறான் ஒரு மதுப்பிரியன்.

அவன் வீசியெறிந்த கண்ணாடி புட்டி
பாறையில் உடைந்து தெறிக்கிறது.

அதிர்ச்சியுற்ற சாம்பல் அணிலொன்று 
அத்தி மரத்தில் இருந்து வெளியேறுகிறது.

சருகுகளில் கால் பரப்பி விரைந்தோடும் உடும்பு 
பட்டுப்போன மரப்பொந்தில் ஓடி ஒளிகிறது.

வளைந்த மூங்கிலொன்றில் வந்தமர்ந்தபின் 
தன் இசையை நிறுத்தியது சோலைபாடி.

வேங்கை மரத்தின் பூக்களின் நடுவே 
உருமறை கொள்கிறது மாங்குயில்.

இயல்பை தொலைத்த அடர்வனச்சோலை 
மௌனம் தாங்கி உறைந்து கிடக்கிறது.

நிதானம் இழந்த மதுப்பிரியனை 
உற்று நோக்கும் சாம்பல் மந்தி 
குரலெழுப்புவதாக இல்லை.


***********************************************************************************

சாம்பல் அணில் - Grizzled Giant Squirrel (Ratufa macroura)
அத்தி மரம் - Indian Fig Tree (Ficus racemosa)
உடும்பு - Indian Monitor Lizard (Varanus bengalensis)
சோலைபாடி - White-rumped Shama (Copsychus malabaricus)
வேங்கை மரம் - Indian Kino Tree (Pterocarpus marsupium)
மாங்குயில் - Indian Golden Oriole (Oriolus kundoo)
சாம்பல் மந்தி - Grey Langur (Semnopithecus entellus)
மதுப்பிரியன் - "Irresponsible" Homo Sapiens





10 comments: