Apr 8, 2018

சிட்டுக்குருவிகள் சரி; கானமயில் ?

சமீப ஆண்டுகளில் முன்னெடுக்கப்பட்ட சிட்டுக்குருவிகள் மீதான விழிப்புணர்வு வெற்றியடைந்திருந்தாலும், சிட்டுக்குருவிகள் ஒரு தொடக்கம் மட்டுமே. சிட்டுக்குருவிகளை விடவும் அழியும் நிலையில் உள்ள பறவைகள் ஏராளம். அவை அழிந்தால் சூழலில் ஏற்படும் மாற்றங்களும் மனிதர்களின் வாழ்வாதாரத்தில் நிகழப்போகும் பாதிப்புகளும் விவாதிக்கப்பட வேண்டியவை.

தமிழ்நாட்டில் பல பகுதிகளிலும் வாழ்ந்து தற்போது முற்றிலும் அழிந்து போன பறவையினம் கான மயில் (Great Indian Bustard) . முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக இது சூலூர் விமான நிலையம் அருகே காணப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதன் பிறகு இன்றளவும் தமிழ் நாட்டில் இந்த பறவை பதிவு செய்யப்படவில்லை. சங்க இலக்கியங்களிலும் பாடப்பட்ட இந்த பறவை தற்போது முற்றிலும் அழிந்து போனதற்கு யார் காரணம்? 

கானமயிலாட கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாக பாவித்து தன்
பொல்லாச் சிறகை விரித்தாடினாற் போலுமே
கல்லாதான் கற்ற கவி.





பல்லாயிரம் ஆண்டுகளாக பரிணாம வளர்ச்சியில் உருவான ஒரு பறவையினம் சில சொற்ப ஆண்டுகளில் மனிதர்களால் அழிக்கப்பட்டது நமக்கான அவமானம் இல்லையா?

தற்போதும் இந்த பறவை ராஜஸ்தானில் குறைந்த எண்ணிக்கையில் மிச்சம் இருக்கிறது. அனால் அவற்றின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. இந்த பூமியில் வாழும் அதிக எடையுடன் பறக்கும் திறன் பெற்ற பறவையினங்களில் இதுவும் ஒன்று. ஆப்ரிக்காவில் வாழும் நெருப்புக் கோழியை அதியசமாக பார்க்க தெரிந்த நமக்கு தமிழ் நாட்டில் வாழ்ந்த பறவையினத்தை பாதுகாக்க தெரியவில்லை.

இந்த பறவையினத்தை போலவே இங்கிலாந்தில் வாழ்ந்த மற்றுமொரு பறவையினம் (Great Bustard) 1832 -ஆம் ஆண்டு முற்றிலும் அழிந்து போனது. தற்போது அந்த பறவையை மீண்டும் இங்கிலாந்து, அந்த நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் இருந்து பெறப்பட்ட அந்த பறவைகள் தற்போது இங்கிலாத்தில் வாழ்ந்து வருகின்றன. அவை தற்போது இனப்பெருக்கம் செய்யத் தொடங்கி இங்கிலாந்தில் இந்த பறவையின் எண்ணிக்கை கூடத் தொடங்கியிருக்கிறது.

தமிழ்நாட்டிலும் இதே போல கான மயிலை மீண்டும் அறிமுகப்படுத்தலாம். ராஜஸ்தானிடம் இருந்து சில பறவைகளை பெற்று இந்த துறை சார்ந்த அறிவியல் அறிஞர்களின் உதவியுடன் கான மயிலை மீண்டும் தமிழகத்தின் நிலப்பரப்பில் பறக்க விடலாம். ஆனால் இதற்கு தமிழக அரசு முயற்சி செய்ய வேண்டும்.

ஒருவேளை இது நடந்தால் நம் முன்னோர்களுடன் வாழ்ந்த ஒரு பறவையினத்துடன் நம் தலைமுறைகளும் வாழும் சூழல் ஏற்படும். 

பல்லாயிரம் ஆண்டுகளாக நம் மண்ணில் வாழ்ந்த பறவையினம் தற்போது லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியாகத்தில் நம் இயலாமையின் சாட்சியாக நின்று கொண்டிருக்கிறது.